“நானும், ரஜினியும் எதுக்காக சம்பளத்தைக் குறைச்சுக்கணும்..?” – நடிகர் கமல்ஹாசனின் கேள்வி..!

“நானும், ரஜினியும் எதுக்காக சம்பளத்தைக் குறைச்சுக்கணும்..?” – நடிகர் கமல்ஹாசனின் கேள்வி..!

ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரமாண்டமான செலவில் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியும், விக்ரமும் நடிக்க உள்ளனர் என்பது தற்போது கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வமில்லாத கிசுகிசு. இதில் விக்ரமின் கேரக்டரில் முதலில் பேசப்பட்டவர் கமல்ஹாசனாம். ஷங்கர் நேரில் வந்து கேட்டும் கமல் வில்லனாக நடிக்க மறுத்ததாலேயே தற்போது அந்த கதாப்பாத்திரம் விக்ரமிற்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி.

ரஜினியும், கமலும் இணைந்து நடித்த பல படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. எனினும் இந்த கூட்டணி இனி சேரவே சேராதா என ரசிகர்கள் மனதிலும் ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. இது குறித்து ‘ஆனந்தவிகடன்’ இதழுக்கு கமல் அளித்திருக்கும் பேட்டி இது :

‘’ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிக்கலாமே..? ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க..?” என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன்,

‘’என்னத்துக்கு..? எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்துட்டா, படத்தை எதை வெச்சு எடுக்கிறது..? படத்தோட விலையை ஏன் அவ்வளவு ஏத்தணும்..? யோசிங்க..!

வருமானத்துல ஆசைப்படுபவர்கள் மட்டும்தான் இந்தக் கூட்டு முயற்சியில ஆர்வம் காட்டுவார்கள். வேணும்னா, ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்ல ஒரு படத்துல நடிக்கலாம். இதுக்காக ஏன் வர்த்தக ரீதியா குழப்பத்தை உண்டாக்கணும்..? எங்க சம்பளத்தை நாங்க ஏன் குறைச்சுக்கணும்..? அந்தத் தியாகத்தை நாங்க யாருக்காக பண்ணணும்..?

ரசிகர்களுக்காக பண்ணுங்கன்னா, அதான் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்றோம்னு சொல்றேனே! எங்களை ஒரு படத்துல சேர்ந்து பார்த்த சந்தோஷம் அவங்களுக்குக் கிடைச்சுருமே. படம் பூரா நாங்க சேர்ந்து நடிச்சு எந்தத் தியாகமும் பண்ண வேண்டியது இல்லை.

இது எல்லாத்தையும்விட, நல்ல கதை வேணும். தேவை இல்லாம ரசிகர்கள் தியேட்டர்ல அடிச்சுக்கக் கூடாது.இது பத்திலாம் நாங்க ரெண்டு பேரும் பல முறை பேசியிருக்கோம்.

“கமல் ‘மருதநாயகம்’ல நான் நடிச்சுக்கட்டுமா?’ன்னு அவர் கேட்டார். ‘என்ன வேஷம் எனக்குக் கொடுப்பீங்க?’ன்னும் கேட்டிருக்கார். அவர் படத்துல நான் நடிக்கக் கேட்டப்போ, ‘படத்துல ஒரே ஒரு நல்ல வேஷம். அதை நானே செய்றேனே. போயிடுங்க…. நீங்க வராதீங்க கமல்’னு சிரிச்சுட்டே சொன்னார். இதெல்லாம் நாங்க தமாஷா பேசிக்கிற விஷயங்கள். ஆனா, படமா பண்றப்ப தமாஷ் ஆகிடக் கூடாதுல்ல!” என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன்.

 

Our Score