full screen background image

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு டிவிஸ்ட்..!

ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு டிவிஸ்ட்..!

HERO CINEMAS நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் 9 டூ 10.

இதில் கதிர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே சென்ற வருடம் வெளியான ‘காந்தர்வன்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர். ஹீரோயினாக ஸ்வப்னா நடித்திருக்கிறார். இவர் ‘இதிகாசம்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடித்தவர்.

மேலும் லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, இயக்குநர் ஜெகன், ‘கிரேன்’ மனோகர், ‘பாய்ஸ்’ ராஜன், முருகன், ‘அவன் இவன்’ ராமராஜன், புவன், தமிழ்ச்செல்வி, சுஷ்மா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ராஜரத்தினம், இசை – எம்.கார்த்திக், படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், கலை – விஜய் முருகன், சண்டை பயிற்சி – வீரா, பி.ஆர்.ஓ. – நிகில் முருகன். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஜய் சண்முகவேல் அய்யனார். இவர் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார் இருவரிடமும் பல படங்களில் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “இதுவொரு வித்தியாசமான கதைக்களனை கொண்டது. சென்னையில் இருந்து காஞ்சிபுரம்வரையிலும் கால் டாக்சியில் ஒரு அவசியத் தேவைக்காக பயணம் செய்கிறாள் ஹீரோயின்.

காரை ஓட்டிச் செல்வது ஹீரோ. அவர் கொஞ்சம் விநோதமான செய்கைகளைச் செய்யும் நபராக இருந்தாலும் அவசரமாக போக வேண்டியிருப்பதால் சகித்துக் கொள்கிறார் ஹீரோயின்.

இதே நேரம் வேறொரு விஷயமாக காவல்துறையும் இவர்கள் இருவரையும் தேடி வருகிறது. நெடுஞ்சாலையில் ஒரே காரில் இருவரையும் கண்ட போலீஸ் இவர்களைத் துரத்துகிறது.

அவர்களிடத்தில் இருந்து தப்பித்து காஞ்சிபுரம் போய்ச் சேர்ந்தால் அங்கே ஹீரோயின் ஹீரோவுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறாள். இதற்கடுத்து ஹீரோவும் ஹீரோயினுக்கு ஷாக் கொடுக்கும்வகையில் ஒரு செயலைச் செய்ய.. இருவருக்குள்ளும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

சென்னை திரும்பியதும், ஹீரோ கதிரின் உயிருக்கு ஆபத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஹீரோயினும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள்.

இதன் காரணங்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும்போது, ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எதிர்பாராத சுவாரஸ்யமான திருப்பங்களும் அதிரடிகளும், நகைசுவையுமாக கலந்து 20/20 மேட்ச் பார்ப்பதுபோல இருக்கும்.

உச்சக்கட்ட காட்சியில் அதிரடியான கதை திருப்பமும், ஹீரோயின் மீதான காதல் விஷயத்தில் ஹீரோ எடுக்கும் முடிவில் ஒரு புதுமையும், கவித்துவமும் கலந்திருக்கும்…” என்று புதுமையான பாணியில் கதையைச் சொல்கிறார்.

வரட்டும்.. பார்த்திருவோம்..!

Our Score