நடிகர் கமல்ஹாசன், ‘உலக நாயகன் டியூப்’ என்ற பெயரில் இணையத்தில் யுடியூப் இணையப் பக்கத்தில் ஒரு கேள்வி-பதில் பகுதியை தொடங்கியிருக்கிறார்.
இதில் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்பவர்கள் கேட்கலாம். அதற்கு கமல் பதில் அளிப்பார். இது இணையம் வழியாக நடைபெறவிருக்கிறது.
இது குறித்து கமல்ஹாசன் முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
“உலக நாயகன் டியூப்’ என்று கமல்ஹாசன் பெயர் வைத்திருக்க மாட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். நான் என்றைக்குமே என்னை ‘உலக நாயகன்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. என்னை பொருத்தவரை எல்லோருமே உலக நாயகன்தான். என் பட வசனங்களிலேயே அது தெரியும். அதனால் இந்த தலைப்பு பொருத்தமாகத்தான் இருக்கும்.
நம்முடைய கேள்வியை இவர் படிப்பாரா என்று சிலருக்கு சந்தேகம் இருக்கும். முழுசா படிச்சிடுவேன்னு பொய் சொல்ல மாட்டேன். முக்கால்வாசி படித்து விடுவேன். நல்ல மாணவன் மாதிரி. நிச்சயமா படித்து விடுவேன்.
கமல்ஹாசனை கடுமையாக விமர்சிப்பவனும், அன்பாக நேசிப்பவனும் நான்தான். எனவே, என்னை விமர்சிக்கும் கடிதங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படிப்பேன். விமர்சனத்துக்காக கோபப்பட மாட்டேன்.
அது சரியான விமர்சனமாக இருந்தால் எனது நடவடிக்கையில் அதனை திருத்திக் கொள்வேன். கடுமையான விமர்சனங்களுக்கு பதிலாக எனது செயல் இருக்கும்.
நான் சொன்ன உடன் கமல் மாற்றிக் கொண்டார். திருத்திக் கொண்டார் என்று யாராவது பெருமைபட்டுக் கொண்டால் அது பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். எனது வழி சீர்படுத்தப்படுவதுதான் எனக்கு முக்கியம்.
எல்லா கேள்விக்கும் நானே பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பது எனது மற்ற வேலைகளை தடுப்பதாகும். ஏன்னா எனக்குத் தெரிந்த வேலையே இதுதான். அதற்காக மற்றவர்களை வைத்து பதில் எழுத மாட்டேன்.
உங்கள் கேள்விக்கான பதில் எனது பிற பேச்சுகளிலோ, செயல்களிலோ நிச்சயம் இருக்கும். ஒரு நாள் உட்கார்ந்து எல்லா கேள்விக்கும் ஒரே பதிலைச் சொல்வேன். உங்களது அனைவருக்குமான பதிலை நிச்சயமாகச் சொல்வேன்.
என் சார்பில் வேறு யாரையும் பதில் சொல்லவும் அனுமதிக்க மாட்டேன். கோவில் பூசாரிகளையே ஒத்துக் கொள்ளாதவன் எனக்கொரு பூசாரியை வைத்துக் கொள்வேனா..? அதே நேரம் என்னையும் வேலை செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும்…” என்று இந்த வீடியோவில் கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.









