full screen background image

“புள்ள பெத்துட்டா அம்மாக்கள் டிரவுசர் அணியக் கூடாதா..?” – நடிகை கனிகா கேள்வி..!

“புள்ள பெத்துட்டா அம்மாக்கள் டிரவுசர் அணியக் கூடாதா..?” – நடிகை கனிகா கேள்வி..!

ஒழுக்கக் கோட்பாட்டாளர்களின் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நடிகை கனிகா சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்து நாட்டில் இருக்கும் புக்கட் என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது கணவர் மற்றும் பையனுடன் எடுத்திருந்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

அந்தப் புகைப்படங்கள் சிலவற்றில் கனிகா டிரவுசர் அணிந்திருந்தார். இதைப் பார்த்துவிட்டு பலரும் “கனிகா இப்படி டிரெஸ் செய்யலாமா..?”, “மலையாளப் படவுலகில் உங்களுக்கு எத்தனை நல்ல பெயர் இருக்கிறது..?”, “உங்களை எனது அக்கா, அம்மா, தங்கை போலல்லவா நினைத்தோம்..?” என்றெல்லாம் கமெண்ட்டுகள் வந்து குவியத் துவங்கின.

கூடுதலாக “4 வயதில் பையன் இருக்கும் நிலையில் ஒரு அம்மா இப்படி டிரவுசரோடு சுற்றித் திரிவதா..?” என்று கண்டித்து சில ஒழுக்க்க் கோட்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பி கமெண்ட்டுகளை தட்டவிட.. அத்தனையையும் படித்துவிட்டு தனது கருத்தினை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நடிகை கனிகா.

கனிகா சொல்லியிருக்கும் பதில் இதுதான் :

“நான் டிரவுசர் அணிந்திருந்த புகைப்படத்தை அப்லோட் செய்தவுடன் அதற்கு வந்த கமெண்ட்டுகளை படித்த பின்பு என்னால் இதனை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நான் அந்த டிரவுசரை அணியும்வரையில் என்னை நல்ல பொண்ணு என்று நினைத்தவர்களெல்லாம் அதற்கு பின்பு நான் கெட்ட பொண்ணு என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

ஒரு பெண் என்னிடம் “உன் வயசென்ன்ன்னு உனக்குத் தெரியுதா..? இப்படி டிரவுசர் போட்டிருக்கியே?” என்று கேட்டார். ஒரு ஆண் என்னிடம் நீங்க ஒரு அம்மா. உங்களுக்கு ஞாபகமிருக்கா..? இது ரொம்ப மோசமான செயல்..” என்றார்.

எனக்கு டிரவுசர் எந்தெந்த இடங்களிலெல்லாம் வசதிப்படுகிறதோ அப்போதெல்லாம் என்னுடைய எல்லா வயதிலேயும் 30, 40, 50 ஏன் அதற்கு மேலும்கூட அணிவேன்.  இப்போதும் பீச்சுக்கு சென்றால் அங்கேயிருக்கும் பெண்களெல்லாம் சேலை அணிந்து கொண்டா உலா வருகிறார்கள்..?

நான் நான்கு வயது பையனின் அம்மா என்பது எனக்கு நன்கு தெரியும். என் மகன் எதையும் புரிந்து கொள்ளும் மனதோடுதான் வளர்கிறான். ஒரு பெண்ணுக்கு அவளுடைய உடையைப் பார்த்து மரியாதை தரக் கூடாது.. அவளுடைய நடவடிக்கைகள் மற்றும் செயல்களால் மட்டுமே மதிப்பிட வேண்டும் என்பதை அவன் உணர்ந்து கொள்வான்.

சுற்றுலா செல்லும்போது இந்த உடைகளைத்தான் அணிய வேண்டும் என்ற ஒழுக்கக் கோட்பாட்டை யார் வடிவமைத்தது..? நான் சுதந்திரமானவள். எனக்கு அது தேவையில்லை. எனது குடும்பத்தினர் என்னை மதிக்கிறார்கள். நான் யார் என்று அவர்களுக்கு தெரியும். அது போதும் எனக்கு.

முகநூலில் இருக்கும் நண்பர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்களில் பலரும் என்னை மதிக்கிறார்கள். புரிந்து கொண்டார்கள். என்னை இந்த உடையில் பார்த்துவிட்டு மதிப்பிட்டவர்கள் கொஞ்சம் நேரம் செலவழித்து அவர்களுடைய குழந்தைகள் அடுத்த பெண்களை எப்படி மதிப்பிட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தால் நல்லது..” என்று கூறியிருக்கிறார்.

வர வர நாட்டுல ஆளாளுக்கு கருத்துச் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கப்பா..! தனி மனித சுதந்திரம் யாருக்கும் இல்லை போலிருக்கு..!

Our Score