“கத்தி’ படத்தில் நடித்ததற்கான சம்பளத்தில் பாதி இன்னமும் தரவில்லை…” – வருத்தப்படுகிறார் நடிகர் கோபி கண்ணதாசன்.

“கத்தி’ படத்தில் நடித்ததற்கான சம்பளத்தில் பாதி இன்னமும் தரவில்லை…” – வருத்தப்படுகிறார் நடிகர் கோபி கண்ணதாசன்.

‘கவியரசர்’ கண்ணதாசனின் மகனான கோபி கண்ணதாசன் தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் ‘கத்தி‘ படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்தப் படத்தில் நடித்ததற்காக பேசப்பட்ட சம்பளத்தில் பாதியைத்தான் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கொடுத்தது. மீதியை இன்னமும் தரவில்லை என்று சமீபத்தில் புகார் சொல்லியிருக்கிறார் கோபி கண்ணதாசன்.

இது குறித்து அவர் பேசும்போது, “விஜய்யின் ‘கத்தி’ படத்தில் ஒரு நீதிபதி கேரக்டரில் நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல நடிக்கிறதுக்காக எனக்குப் பேசிய சம்பளத்துல பாதியை மட்டுமே தந்தாங்க. மீதி இந்த நாள் வரைக்கும் தரவில்லை.

தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது, ‘புரொடக்‌ஷன் மேனஜர்கிட்ட உங்க சம்பளம் முழுசையும் கொடுத்தாச்சு. அவர்கிட்ட வாங்கிக்குங்க’னு சொல்றாங்க. புரொடெக்சன் மேனேஜர்கிட்ட ரெண்டு தடவை போனேன். கொடுக்கலை.. மூணாவது முறை போனப்ப..  ‘என்னங்க பணத்துக்கு இவ்ளோ பிரச்னை பண்ணிட்டிருக்கீங்க?’ன்னு அவர் கேட்டார்.

நாம வேலை செஞ்சதுக்கு சம்பளத்தைக் கேட்டா, பிரச்னை செய்றீங்களானு கேட்டா என்ன அர்த்தம்..? ஆனாலும், இவ்ளோ பிரச்னைக்குப் பிறகும் அதே லைகா தயாரிப்புல அடுத்த படமான ‘ராங்கி’ படத்துலயும் கமிட் ஆகியிருந்தேன்.

ஆனால், என்னைக்கு நான் சம்பளத்தைக் கேக்க ஆரம்பிச்சேனோ, அப்ப இருந்து அந்த நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் ஒன்றாகச் சேர்ந்து எனக்கு எதிராகச் செயல்பட ஆரம்பிச்சிட்டாங்க. திட்டமிட்டு சில சதி வேலைகளைச் செஞ்சாங்க.

இதுக்கு நடுவுல ‘மாஸ்டர்’ படத்துலேயும் நான் கமிட் ஆகியிருந்தேன். சரியாக, அந்த ஷூட்டிங் நாட்களைத் தெரிஞ்சிக்கிட்டு, அதே நாட்கள்ல ‘ராங்கி’ ஷூட்டிங் உஸ்பெகிஸ்தான்ல இருக்குன்னு சொன்னாங்க. முன்னாடியே கமிட் ஆன படம்கிறதால வேற வழியில்லாம, நானும் ‘மாஸ்டர்’ பட வாய்ப்பை விட்டேன். அதேபோல ’இந்தியன்-2’ படத்துலேயும் நான் நடிக்க வேண்டிய வாய்ப்பை இதே மாதிரி கெடுத்தாங்க. ஷூட்டிங் இருக்குனு சொல்வாங்க. அந்த இன்னொரு பட வாய்ப்பு என்கிட்ட இருந்து போயிடுச்சுனு தெரிஞ்சதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி இந்தப் படம் தள்ளிப் போயிருச்சுன்னு சொல்வாங்க. இப்படியே பண்ணிட்டிருந்தாங்க.

அதுக்குப் பிறகுதான் இது திட்டமிட்டு சிலர் பண்ற வேலைனு எனக்குத் தெரிய வர, நான் உஷார் ஆனேன். திரும்பவும் ‘பொன்னியின் செல்வன்’ பட ஷூட்டிங் கிளம்பிட்டிருக்கிறப்ப பேசினாங்க. “என்ன உஸ்பெகிஸ்தான் ஷூட்டிங்கா..? எத்தனை தடவை சார் பொய் சொல்வீங்க..?”னு கேட்டதோட நடந்ததைச் சுருக்கமா முகநூல்ல எழுதி சம்பந்தப்பட்டவருக்கே லின்க் அனுப்பிவெச்சேன்.

உடனே உஷார் ஆனவர், ’இல்ல… நீங்க ‘பொன்னியின் செல்வன்’ முடிச்சிட்டே வாங்க’னு சொல்லிட்டார். ஆனாnd, இந்தப் பிரச்னையை இப்படியே விடக்கூடாதுனு தயாரிப்பு நிர்வாகிகள் சங்கத்து பேசினேன். என் பிரச்னையைக் கேட்டவங்க, “புகாரை எழுதி அனுப்புங்க… பார்க்கறோம்…”ன்னு சொன்னாங்க. சரின்னு விரிவா எழுதி அனுப்பினால், இப்போது அந்தத் தபாலையே வாங்க மறுத்து எனக்கே திருப்பி அனுப்பியிருக்காங்க.

அடுத்து இதுல சட்டத்துக்கு உட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்யணும்னு இருக்கேன். கண்ணதாசன் மகனான எனக்கே இதுதான் நிலைமைங்கிற போது சினிமாவைத் தேடி கனவோடு வர்ற புதுப் புதுக் கலைஞர்களின் நிலைமையை யோசிச்சுப் பாருங்க.” என்கிறார் வேதனையுடன்..!

 
Our Score