full screen background image

தேர்தல் தில்லுமுல்லுகளைச் சொல்லி பரபரப்பாக்கியிருக்கும் ‘மண்டேலா’ திரைப்படம்

தேர்தல் தில்லுமுல்லுகளைச் சொல்லி பரபரப்பாக்கியிருக்கும் ‘மண்டேலா’ திரைப்படம்

தமிழகத்தின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியிருக்கும் இந்த நேரத்தில், ஒரு தமிழ்த் திரைப்படத்தில் ஓட்டுக்கு காசு வாங்குவது குறித்த சர்ச்சையான விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது.

அந்தப் படத்தின் பெயர் ‘மண்டேலா’. பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபுதான் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘மண்டேலா’ கேரக்டரில் நடித்திருக்கும் யோகி பாபு சவரத் தொழிலாளியாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்குநர் பாலாஜி மோகனின் ஓப்பன் விண்டோ நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் யோகி பாபுவுடன் சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர் – எஸ்.சசிகாந்த், இணை தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமச்சந்திரா, நேரடி தயாரிப்பு – பாலாஜி மோகன், ஒளிப்பதிவு – விது அய்யனா, இசை – பரத் சங்கர், படத் தொகுப்பு – பிலோமின் ராஜ், கலை இயக்கம் – ராமு தங்கராஜ், உடைகள் வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், பாடல்கள் – யுகபாரதி, அறிவு, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், புகைப்படங்கள் – ராஜேந்திரன், நிர்வாகத் தயாரிப்பு – கைலாஷ் சோமசுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – எல்.மார்ட்டின் ரெக்ஸ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய தர்மம்’ என்னும் குறும் படத்திற்கு 2013-ம் ஆண்டு சிறந்த குறும் படத்திற்கான நடுவர்களின் சிறப்பு விருதினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரில் இருக்கின்ற பல காட்சிகள் இன்றைய தேர்தல் களப் பணிகளை நகலெடுத்ததுபோல இருக்கிறது. அரசியல் கட்சிகள் வாக்குப் பதிவன்று செய்யும் பல்வேறு தவறுகளை சுட்டிக் காட்டுவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக 20 ரூபாய் டோக்கன் கொடுப்பது, ஓட்டுக்கு பணம் கொடுப்பது, வெளியூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆட்களை இறக்கி வந்து ஓட்டு போட வைப்பது ஆகிய காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும், “நோட்டா’வில் வாக்கினை குத்தவும் தனக்கு காசு கொடுக்கவில்லை. காசு கொடுத்தால்தான் ஓட்டு…” என்று யோகிபாபு பேசுவது டீஸரில் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் தியேட்டர்களிலா.. அல்லது ஓடிடியிலா என்பது மட்டும் முடிவாகவில்லையாம்..!

Our Score