நடிகர் அஜீத் நடிப்பில் பெரும் வெற்றியைப் பெற்ற ‘பில்லா’ படம் தற்போது தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தியேட்டர்களில் கூட்டம் வரவில்லை என்பதால் விஜய்க்கு அடுத்தபடியாக பெருவாரியான ரசிகர்களை வைத்திருக்கும் அஜீத்தின் ரசிகர்களைத் தியேட்டருக்கு ஈர்க்கலாம் என்ற ஐடியாவில் இந்த ‘பில்லா’ படத்தை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
சென்ற வெள்ளியன்று வெளியான இத்திரைப்படத்திற்கு ஒரு புதிய படத்திற்கு அளிக்கும் வரவேற்பைப்போல நள்ளிரவிலேயே தியேட்டர் வாசலில் தோரணங்கள் கட்டி, போஸ்டர்கள் அடித்து கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.
படம் திரையிடப்பட்டிருக்கும் அனைத்துத் தியேட்டர்களிலும் தியேட்டர் அதிபர்கள் மகிழ்ச்சியடையும்விதமாக ரசிகர்களின் கூட்டமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதாம்.
இந்த நேரத்தில் அஜீத்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய பிரேக்கை கொடுத்த ‘மங்காத்தா’ படத்தை வரும் மே 1-ம் தேதியன்று திரும்பவும் வெளியிடுமாறு படத்தின் தயாரிப்பாளரிடம் படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு ‘மங்காத்தா’ படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரிக்கு டிவீட்டரில் ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார்.

அந்தச் செய்தியில், “தயாநிதி அழகிரி ஸார்.. வரும் மே 1-ம் தேதி நம்ம ‘தலை’க்கு 50-வது பிறந்த நாள். அந்த நாளில் நம்ம ‘தல’யின் 50-வது படமான ‘மங்காத்தா’வை உங்க செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் ஏப்ரல் 30-ம் தேதியே வெளியிட்டால்.. ‘தல’யின் ரசிகர்களான நாங்க உங்களுக்கு ரொம்பவே கடமைப்பட்டிருப்போம்.. பார்த்து செய்யுங்க..” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
படத்தின் இயக்குநரே இந்த வேண்டுகோளை வைத்திருப்பதால் நிச்சயமாக இந்தக் கோரிக்கை ஏற்கப்படும் என்றே நம்பலாம்..!