சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நேரத்தில் அவருடைய மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏற்கெனவே திரும்பிவிட்டாராம்.
கடந்த 16-ம் தேதி காலையில் தனுஷ் தாயகம் திரும்பியிருக்கிறார். அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும், குழந்தைகளும் அமெரிக்காவில்தான் இருக்கிறார்களாம். இப்போது ரஜினிகாந்த் அவர்களுடன்தான் தங்கி மருத்துவ சிகிச்சை பெறப் போகிறார்.
தனுஷ் கொரோனா அச்சம் காரணமாக தான் வந்தது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டவர், தனது ரசிகர்களுக்குக்கூட இதைச் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். வீட்டிலேயே இருந்தவர் இடையில் ஒரு நாள் தனது மாமனாரை நேரில் சென்று சந்தித்துப் பேசினாராம்.
தற்போது தனுஷ் அடுத்த மாதத் துவக்கத்தில் துவங்கவிருக்கும் கார்த்திக் நரேனின் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் 65 சதவிகித படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது. மீதமிருக்கும் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கவிருக்கிறது.
இந்தப் படத்திற்காக ஹைதராபாத் செல்லும் தனுஷ், அங்கு 15 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று தயாரிப்பு தரப்பு சொல்கிறது.