full screen background image

Web Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..!

Web Series தயாரித்திருக்கும் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா..!

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரஜினி, கமல், தொடங்கி  சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, மோகன்லால், சல்மான்கான்வரை  ஏராளமான நட்சத்திரங்களை வைத்து படங்கள் இயக்கியவர்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறிப்பிடத்தக்க படத்தை இயக்கி வெற்றி பெற்றவர். கமலுக்கு ‘ சத்யா’ ரஜினிக்கு ‘பாட்ஷா’ ரகுமானுக்கு ‘சங்கமம் ‘ என்று  இவரது மைல் கல் படங்களின்  பட்டியல் நீளும்.

இதுவரையிலும் சுமார் 40 படங்கள் இயக்கியுள்ள சுரேஷ் கிருஷ்ணா, சின்னத்திரை பக்கமும் விட்டுவைக்கவில்லை. சன், விஜய் போன்ற முன்னணித் தொலைக்காட்சிகளில் தொடர்களை இயக்கியுள்ளார். குறிப்பாக சன் டிவிக்கு இவர்   இயக்கிய ‘மகாபாரதம்’ ஒரு உதாரணம்.

இப்போது வெப் சீரீஸ் தனத்தில் இறங்கி இருக்கிறார். இயக்குநராக அல்ல ஒரு தயாரிப்பாளராக.. ‘இன் த நேம் ஆப் காட்’ என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ் தெலுங்கில் உருவாகி இருக்கிறது. அதாவது ‘கடவுளின் பெயரால்’ என்ற பொருளில் தலைப்பு உள்ளது.

பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் தொடரை எழுதி இயக்கியிருப்பவர் வித்யாசாகர் முத்துக்குமார்.

ஒளிப்பதிவு – வருண் டி.கே, படத் தொகுப்பு – நிகில் ஸ்ரீகுமார், இசை – தீபக் அலெக்சாண்டர், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, சுபாஷ், வசனம்- பிரதீப் ஆச்சாரியா, ஒலிப்பதிவு- லட்சுமி நாராயணன், உடைகள் – சங்கீதா, டிசைன்ஸ் – சிவா நரி ஷெட்டி என்று மிகப் பெரிய தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் இந்த வெப் சீரீஸை  உருவாக்கி இருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

ஏராளமான படங்கள், ஏராளமான நட்சத்திரங்கள் என்று  இயக்கிவிட்டு இப்போது வெப்சீரீஸ் தயாரித்து இருப்பது பற்றி அவர் கூறும்போது, “காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம்தான் இந்த வெப் சீரீஸ். இந்தப் புதிய தளத்தின் மீது  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனக்கு ஈர்ப்பு வந்தது. அதில் எனக்கு  ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.  நல்ல எதிர்காலம் உள்ள ஒரு தளமாக இது எனக்குப் பட்டது. அதே நேரத்தில் சினிமா திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் உருவாக்குவதில் இல்லாத சுதந்திரமும் காட்சி பிரமாண்ட சாத்தியமும் இந்த வெப்சீரீஸ் தளத்தில் உள்ளது. எந்த சமரசங்களும் இல்லாமல் நினைத்ததை  அப்படியே இதில் கொண்டு வர முடியும்.

இப்படித்தான் இந்த ‘இன் த நேம் ஆப் காட்’ சீரீஸை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அதே பலத்தோடு அதையும் மீறிய காட்சி பிரம்மாண்டத்தோடு இதை உருவாக்கி இருக்கிறோம்.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி போன்ற நகரங்களிலும் காடுகள், ஆறுகள் போன்ற இடங்களிலும் பல ஷெட்யூல்களில் நடத்தப்பட்டது. ஏராளமான நடிகர்களோடும், பெரும் மக்கள் கூட்டத்தோடும் படப்பிடிப்பு நடத்தி இந்த படைப்பு உருவாகி இருக்கிறது.

நான் இந்தத் தயாரிப்பில் ஈடுபடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அல்லு அர்ஜுன்தான் என்னை ஊக்கமூட்டி இறக்கிவிட்டார். அவர்தான் எனக்கு தைரியமும் நம்பிக்கையும் கொடுத்தவர். அந்த வகையில் அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

ஓர் அப்பாவி மனிதன் எந்த வம்பு தும்புக்கும் செல்லாதவன், சமூக அழுத்தத்தாலும் மக்களது நெருக்குதலாலும் எப்படி வன்முறைப் பாதைக்கு தள்ளப்பட்டு இழுத்துச் செல்லப்படுகிறான் என்பதுதான் இந்தத் தொடரின் கதை.

அந்த வன்முறை உலகத்தில் விழுந்தவன் ,எப்படி அதை எதிர்கொள்கிறான் என்பதே திரைக்கதையில் காட்சிகளாக வரும். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் பிரபலமான பிரியதர்ஷி இந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவரின் இன்னொரு முகமாக வேறு வகை நடிப்பு இந்தத் தொடரில் வெளிப்பட்டுள்ளது. அவரது நடிப்புக்கு பெரும் தீனியாக இந்த வெப்சீரீஸ் இருக்கும்.

புதிய பாணியில் புதிய வடிவத்தில் பிரமாண்ட தோற்றத்தில் இது உருவாகியிருக்கிறது. இதைத் தயாரித்ததில் நான் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைகிறேன். இதற்குக் கிடைத்துள்ள வரவேற்பை எடுத்துக் கொண்டால் ஒரு மில்லியன் பார்வையாளர்களை விரைவில் கடந்தது.

இந்த மாபெரும் வரவேற்பு இதற்கான முதல் வெற்றி அறிகுறியாகும். ஒரு தயாரிப்பாளராக இதில் நான் பெருமைப்படுகிறேன். இயக்குநராக இத்தனை படங்கள் இயக்கியிருந்தாலும் தயாரிப்புக்கு இந்தத் தளத்தில் நான் புதியவன். இப்படி எனது முதல் முயற்சி பெரிய வெற்றியாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இந்த ‘இன் த நேம் ஆப் காட்’ வெப் சீரீஸ் ‘ஆஹா ஒரிஜினல்’ ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது…” என்றார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.

 
Our Score