இன்றைய நாளில் கோடம்பாக்கத்தில் இரண்டு பரபரப்பு செய்திகள்.. அதில் ஒன்று இதுதான்.
நடிகர் டெல்லி கணேஷ் தனது மகன் மஹாவை ஹீரோவாக வைத்து ‘என்னுள் ஆயிரம்’ என்னும் படத்தை தயாரித்து கடந்த 22-ம் தேதி தமிழகமெங்கும் வெளியிட்டார்.
திரையரங்குகளை கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய, பெரிய படாதிபதிகளை எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் படாதபாடுபட்டு பல முறை படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயித்து பின்பு தள்ளி வைக்கும் சூழல் வந்தது. கடைசியில் ஒரு வழியாக தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் மூலமாக தனது படத்தினை வெளியிட்டார்.
வெளியான பல தியேட்டர்களில் காலை காட்சியாகவும், ஏதாவது ஒரு ஷோ என்ற ரீதியிலும் படம் இருக்க.. படம் பெருவாரியான ரசிகர்களின் கண் பார்வைக்கே செல்லவில்லை. இதோ இன்றைக்கு இந்த வாரத்திய புதிய படங்கள் வந்துவிட்டதால் ‘என்னுள் ஆயிரம்’ படம் அனேக தியேட்டர்களில் தூக்கப்பட்டுவிட்டது.
“3 கோடி ரூபாய் செலவில் தயாரித்து கடைசியாக தயாரிப்பாளரின் பங்காக என் கையில் கிடைத்திருப்பது வெறும் 3 லட்சம் ரூபாய்தான்…” என்பதை நடிகர் டெல்லி கணேஷ் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.
“சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் ஒரு வரைமுறை வைத்தால் மட்டுமே அவைகளை காப்பாற்ற முடியும்…” என்கிறார் டெல்லி கணேஷ். இது குறித்து வாட்ஸ்அப்பில் அவர் ஆடியோ வடிவத்தில் வெளியிட்டுள்ள செய்தி இது :
“நான் நடிகர் டெல்லி கணேஷ் பேசுகிறேன்.
‘என்னுள் ஆயிரம்’ என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் செய்துவிட்ட, ஒரு தயாரிப்பாளர் நான். ரொம்ப சிரமப்பட்டுவிட்டேன். திரையுலகில் யாருமே மதிக்க மாட்டேங்கறாங்க. ஒரு இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு இங்கிலீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கறாங்க. ‘தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா.. புண்ணாக்கு புடலங்கா’ன்னு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுல தமிழ்ப் படங்களுக்கு ஒரு ஷோகூட குடுக்க மாட்டீங்கறாங்க.
அந்த இந்திப் படத்தையும், இங்கிலீஷ் படத்தையும் மத்தியானம் ஒரு மணிக்குப் போட்டா ஒண்ணும் குடி முழுகிப் போகப் போறதில்ல. மக்கள் பார்ப்பாங்க. ஆனா நம்ம படத்த ஒரு மணிக்குப் போட்டா ஒரு பய வரமாட்டீங்கறான். ‘சார்.. மூணு மணி ஷோ இல்லையா சார்..? ஆறு மணி ஷோ இல்லையா சார்?’ அப்படின்னு கேட்கறாங்க. ரொம்ப மோசம்..
திருச்சில எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. கோயமுத்தூர்ல ஒரு தியேட்டர்ல.. எங்கயோ ஓரத்துல இருக்கற ஒரு தியேட்டர்ல ரிலீஸ் ஆகியிருக்கு. திருநெல்வேலில எங்கயோ கொடுத்திருக்காங்க. அதும் ஒரு ஷோ. அந்த தியேட்டர்ல ஏ.ஸி. இல்ல. இந்த வெயில்ல அங்க உட்கார்ந்து சாகணுமான்னு ஒரு பய போக மாட்டேங்கறான். ‘உங்களுக்காகத்தான் போனேன் சார். இல்லைன்னா அந்த தியேட்டருக்கு மனுஷன் போக மாட்டான்’ங்கறாங்க. அப்டி ஒரு தியேட்டர்.
வாசல்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற பய என்ன சொல்றான்னா.. ‘இந்த மாதிரி ஒன்றரை மணிக்கு வர்ற படங்களெல்லாம்.. யாருக்குமே தேவையில்லாத.. உப்புமா கம்பெனின்னு சொல்வாங்க சார்’ங்குறான்.. நம்ம மூணு கோடி ரூபா போட்டு குவாலிட்டியா டெக்னிஷியன்லாம் வெச்சு படம் எடுத்தா… தியேட்டர்ல மதியம் ஒன்றரை மணிக்கு ரிலீஸ் ஆகறதால அதை மட்டும் ‘உப்புமா கம்பெனி’ன்னு சொல்லுவாங்களாம். அதும் யாரு சொல்றா..? ப்ளாக்ல டிக்கெட் விக்கறவன் சொல்றான்.
எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்குத்தான் ஒரு எழவும் தெரிய மாட்டேங்குது.. யாரும் சொல்லவும் மாட்டேங்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய்க் கேட்கறது..?
ஒண்ணாம் தேதி வந்தா, ‘ஐயயோ.. ஒண்ணாம் தேதி வராதீங்க. அப்போ எட்டாம் தேதி..? அய்யயோ எட்டாம் தேதி நெறைய படம் வருது… பக்கத்துலயே வராதீங்க.. பதினாலு.. ஐயோ போச்சு தெறி வருது.. இருபத்து இரண்டு.. ம்ம்ம். பாக்கலாம்… ‘எப்படி போனாலும் உங்களுக்கு வர்ற கூட்டம் வரும்’ அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சு.. இப்ப எல்லாரும் என்ன சொல்றாங்க.. ‘29-ல வந்திருக்கணும் சார்.. நீங்க ஏன் 22ல வந்தீங்க..?’ன்னு..!
மொத்தத்துல என்னமோ படம் எடுக்குற தயாரிப்பாளரை பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க.. சரி போகட்டும்.. ஏதோ நான் ஒரு படம் எடுத்தேன். இதுல நெறைய கத்துக்கிட்டேன். இத்தனை வருஷ திரையுலக வாழ்க்கைல நான் கத்துக்காத விஷயங்களையெல்லாம் இந்த ஒரு படத்தின் தயாரிப்பில் கத்துகிட்டேன். ‘நண்பரும் பகைபோல் தெரியும்.. அது நாள்பட நாள்படப் புரியும்’ அப்டிங்கற பாட்டுதான் இப்போ என் ஞாபகத்துக்கு வருது.. பார்ப்போம்!
எல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும்னு தெரியாதபடி.. எதாவது கொஞ்சம் சம்பாதிச்சா முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்தியமே இல்லாமல் மூணு கோடி போட்டு மூணு லட்சம் சம்பாதிச்சா என்ன முடிவெடுக்க உக்கார்றது..? பார்ப்போம். தொடர்பிலிருப்போம். ஆவன செய்வோம்.
நன்றி”
இவ்வாறு… தன் படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் டெல்லி கணேஷ்.









