full screen background image

“தமிழன்’ படத்தில் விஜய்யே என்னை அழைத்து நடிக்க வைத்தார்” – நடிகர் டெல்லி கணேஷின் அனுபவம்..!

“தமிழன்’ படத்தில் விஜய்யே என்னை அழைத்து நடிக்க வைத்தார்” – நடிகர் டெல்லி கணேஷின் அனுபவம்..!

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ், நடிகர் விஜய்யுடனான தனது அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த அனுபவப் பேச்சில் அவர் விஜய் பற்றிக் குறிப்பிடும்போது, “நடிகர் விஜய் ‘தமிழன்’ என்ற படத்தில் நடித்தார். அதில் அவருடன் வக்கீல் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லையாம். அந்த நடிகரின் பேச்சில் காமெடி வரவில்லை என்று விஜய்யே பீல் செய்திருக்கிறார்.

இதனால் அந்தக் கேரக்டருக்கு என்னை சிபாரிசு செய்திருக்கிறார் விஜய். “டெல்லி கணேஷ் ஸார் வருவாரான்னு கேளுங்க…” என்று சொல்லியிருக்கிறார். அன்று இரவே அந்தப் படத்தின் இயக்குநர் என்னைப் பார்க்க வந்தார்.

அது ஒரு நாள் போர்ஷன்தான். ஒரு சின்னக் கதாபாத்திரம்தான். ஆனால் முழுக்க, முழுக்க விஜய்யுடன் காம்பினேஷன் உள்ள காட்சிகள். கதையைக் கேட்டுவிட்டு, “விஜய் கூட மட்டும்தான நடிக்கணும். அங்க போன பின்னாடி மாத்த மாட்டீங்களே..?” என்று உறுதிமொழி வாங்கிட்டுத்தான் மறுநாள் ஸ்பாட்டுக்குப் போனேன்.

அந்தக் காட்சில நடித்தேன். ஒரே நாள்தான்.. ஆனால் விஜய் எதிர்பார்த்த அந்தக் காமெடி அதுல வந்திருச்சு. மத்தவங்க மாதிரி விஜய் கஷ்டப்பட்டு உடம்பை வளைச்சுக்கிட்டெல்லாம் காமெடி செய்ய மாட்டார். ஆனால் சின்னதா செய்வார். அது நிச்சயமா நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அதோட செட்டுலயும் அதிகமா பேசவே மாட்டார். நானே ஒரு நாள் அவர்கிட்ட கேட்டேன். “என்ன ஸார்.. அதிகமா பேசவே மாட்டேன்றீங்க?” என்றேன். “இல்ல ஸார்.. என் வயதுக்காரங்ககிட்ட மட்டும்தான் பேசி பழகிட்டேன். மத்தவங்ககிட்ட பேசுறதுக்கு தயக்கமா இருக்கு. அதான் பொதுவா நான் யார்கிட்டேயும் பேசுறதில்ல..” என்றார். நானும், ‘நீங்க இப்படியே இருங்க ஸார்..’ என்று வாழ்த்தினேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் டெல்லி கணேஷ்.

Our Score