ரஜினியிடம் ‘பாபா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றச் சொன்ன நடிகர் டெல்லி கணேஷ்

ரஜினியிடம் ‘பாபா’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றச் சொன்ன நடிகர் டெல்லி கணேஷ்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் சொந்தப் படமான ‘பாபா’ மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது அனைவரும் அறிந்ததே. இதற்குக் காரணம் படம் ரஜினியின் ரசிகர்களுக்கே பிடிக்காமல் போனதுதான். அதேபோல் படத்தின் கிளைமாக்ஸூம் யாருக்கும் பிடிக்கவில்லை.

இந்தக் கிளைமாக்ஸ் தனக்கும் பிடிக்காததால் அதை மாற்றும்படி ரஜினியிடம் சொன்னதாகச் சொல்கிறார் நடிகர் டெல்லி கணேஷ். சமீபத்தில் அவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் டெல்லி கணேஷ் இது பற்றிப் பேசும்போது, “பாபா’ படத்தில் ரஜினியுடன் நடித்தது ஒரு தனி அனுபவம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நாட்களில் அவர் அதிகமாக ஆன்மீகத்தைப் பற்றித்தான் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் நான் வருவேன். அந்தக் கிளைமாக்ஸ் காட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்கு சட்டென்று பிடிக்காமல் போனது. ஏனெனில், அது ரஜினியின் படம். அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் தெய்வம் மாதிரி. மிகப் பெரிய ஹீரோ போல் தெரிகிறார்.

அவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சாமியாராகப் போகிறார் என்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் என்பது எனக்கும் தெரியும். ஆனால் அதுதான் கிளைமாக்ஸ் என்றவுடன் என்னால் ஏற்க முடியவில்லை.

ரஜினியிடம் அந்த ஷூட்டிங் எடுப்பதற்கு முன்பாகவே நான் அதைச் சொன்னேன். “ஸார்.. நீங்க இப்போ மிகப் பெரிய மாஸ் ஹீரோ.. உங்க ரசிகர்கள் எல்லாரும் கிளைமாக்ஸ்ல நீங்க வில்லனைகளை அடித்து, தூக்கிப் பந்தாடி வீசி, ஜெயிக்கிறதைத்தான் விரும்புவாங்க. இப்படி சாமியாரப் போறதை நிச்சயமா விரும்ப மாட்டாங்க ஸார்..” என்றேன்.

“அப்படியா சொல்றீங்க..?” என்று கேட்டுக் கொண்டார் ரஜினி. பின்பு யோசித்தார். அப்புறமும் திரும்பி அதே கிளைமாக்ஸ்தான்னு உறுதியா இருந்திட்டார். நாங்களும் ஒண்ணும் சொல்ல முடியலை. நடிச்சுக் கொடுத்தோம்.

ஆனால் தியேட்டரில் படம் பார்த்த ரசிகர்கள் கடைசீல சீட்டை கிழிச்சு ரகளையே பண்ணிட்டாங்க. படம் தோல்வி.. என்ன செய்யறது..?” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் டெல்லி கணேஷ்.

Our Score