இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தனது இரண்டாவது படைப்பாகத் தயாரித்துள்ளது.
படத்தில் நடிகர் தினேஷ், நடிகைகள் ‘கயல்’ ஆனந்தி, ரித்விகா, முனீஸ்காந்த், ஜான் விஜய், ஈஸ்வரி ராவ், நடிகர்கள் முனீஸ்காந்த், இயக்குநர் மாரிமுத்து, ரமேஷ் திலக், ஹரிகிருஷ்ணன், சரண்யா ரவி, விநோத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கிஷோர் குமார், இசை – தென்மா, பாடல்கள் – கு.உமாதேவி, தனிக்கொடி, அறிவு, முத்துவேல், படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – T.ராமலிங்கம், ஒலி வடிவமைப்பு – ஆண்டனி B.J.ரூபன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம் – நடனம் – சாண்டி.
அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆவார். நேரம் – 2 மணி நேரம் 21 நிமிடங்கள்.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் ஆசியப் பகுதிகளில் இருந்த பயன்படுத்தப்படாத பல குண்டுகள் தேங்கிக் கிடந்தன. இவைகள் பலல வருடங்களாக பல துறைமுக நகரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதனால் இவற்றை செயலிழுக்க வைக்க, அமெரிக்க நிறுவனம் ஒன்றின் உதவியை நாடுகிறது இந்திய அரசு. அவர்களோ பணத்தை வாங்கிக் கொண்டு செயலிழக்க வைப்பதாகப் போக்கு காட்டி, 3000 குண்டுகளையும் வங்காள விரிகுடா கடலிலேயே அநாமத்தமாகப் போட்டுவிட்டனர்.
அந்தக் குண்டுகள் சில ஆண்டுகளில் கரை ஒதுங்கத் துவங்கின. அந்த குண்டுகளை எடுத்தவர்கள் அரசுக்குத் தெரியாமல் அவற்றை இரும்புக் கடையில் போட்டுவிடுகின்றனர். அது வெடிகுண்டு எனத் தெரியாமல் அந்தக் குண்டினைப் பிரிக்க முனையும்போது விபத்து நேர்ந்து அந்த இரும்புக் கடையே தூள், தூளாகிறது. இது தொடர் கதையாய் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கமோ வழக்கம்போல் இந்த வெடிகுண்டு ஊழலை மறைக்கப் பார்க்கிறது.
அப்படித்தான் ஒரு குண்டு சென்னை அருகேயுள்ள மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்குகிறது. இதனைக் கண்டுபிடிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பிரஜை இதன் அபாயம் பற்றி லோக்கல் போலீஸிடம் சொல்லி எச்சரிக்கிறார். இது மீடியாக்களிடம் பரபரப்புச் செய்தியாக்கப்படுகிறது.
இதையறியும் மத்திய அமைச்சர் லோக்கல் ஆயுதக் குழுவின் தலைவரான ஜான் விஜய்க்கு போன் செய்து எப்படியாவது அந்தக் குண்டைக் கைப்பற்றும்படி ஆணையிடுகிறார். இதன்படி ஜான் விஜய் நடவடிக்கை எடுப்பதற்குள் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குண்டை திருடன் ஒருவன் திருடி பாட்சாவின் இரும்புக் கடையில் எடைக்குப் போட்டு காசு வாங்கிச் செல்கிறான்.
ஜான் விஜய் போலீஸிடம் இது பற்றிச் சொல்ல.. அவர்கள் குண்டைத் தேடுகிறார்கள். அது கிடைக்கவில்லை.
அதே ‘பாட்சா பாய்’ என்னும் மாரிமுத்துவின் இரும்புக் கடையில் லாரி ஓட்டுநராகப் பணிபுரிகிறார் ‘செல்வம்’ என்னும் தினேஷ். மாரிமுத்து மனசாட்சியில்லாத பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட முதலாளியாக இருக்கிறார்.
இதே நேரம் தினேஷை ‘சிட்டு சித்ரா’ என்னும் ஆனந்தி காதலித்து வருகிறார். இதனை அவரது குடும்பத்தினர் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனந்திக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இதில் சிக்காமல் தப்பிக்க ஆனந்தி முயன்று வருகிறார்.
இந்த நேரத்தில் தினேஷ் பாண்டிச்சேரிக்கு இரும்பு லோடினை கொண்டு செல்கிறார். அந்த லோடில் அந்த வெடிகுண்டும் இருக்கிறது. இது தெரியாமல் அனைவரும் இருக்க.. போலீஸ் மோப்பம் பிடித்து பாண்டிச்சேரிக்கே வந்து சேர்கிறது.
அங்கே சென்ற பின்புதான் வெடிகுண்டு பற்றிய விஷயமே தினேஷூக்குத் தெரிய வருகிறது. பயந்து போன தினேஷ் வெடிகுண்டை எங்காவது கொண்டு போய் போட்டுவிட விரும்பி அதனை லாரியில் வைத்துக் கொண்டே சுற்றுகிறார்.
இதே நேரம் ஆனந்தியை கொலை செய்யவும் அவரது குடும்பத்தினர் முயற்சி செய்ய.. அதிலிருந்து அவர் தப்பி தினேஷைத் தேடி ஓடி வருகிறார். இன்னொரு பக்கம் போலீஸும் தினேஷைத் தேடியலைகிறது.
மறுபுறம் அரசாங்கத்தின் இந்த அலட்சியத்தையும், ஊழலையும் வெளிக்கொணர JNU மாணவியும், பத்திரிகையாளருமான ‘தானியா’ என்னும் ரித்விகாவும் அந்தக் குண்டினை தேடிக் கொண்டிருக்கிறார்.
கடைசியில் அந்தக் குண்டு யார் கையில், எப்படிக் கிடைக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் முடிவு.
நீலம் ப்ரொடக்ஷன்ஸின் முந்தைய படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில், சாதிப் பிரிவினையை மையக் கருவாக வைத்து உருவாக்கியிருந்தார்கள். இப்படத்தில் வர்க்கப் பாகுபாடுகளைக் கையிலெடுத்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு ஊழலைப் புனைவிற்காகச் சேர்த்துள்ளார் இயக்குநர் அதியன் ஆதிரை. ஆனால், நமது அரசாங்கம், உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரியும் தீவிர பிரச்சனைகளையும் மெத்தனமாகத்தான் கை கொள்ளும். எவன் செத்தால் நமக்கென்ன என்ற தடித்த தோல், ஆட்சி அதிகாரத்திற்கு யார் வந்தாலும் ஏற்பட்டுவிடும்.!
‘விசாரணை’ படத்திற்குப் பிறகு தினேஷூக்கு இந்தப் படத்தில் வலுவான கேரக்டர். வாழ்ந்திருக்கிறார். கொஞ்சமும் பிசிறில்லாமல் நடித்திருக்கிறார். ஒரு ஏழை பங்காளன்.. வேலை செய்து காசு சம்பாதிப்பதைத் தவிர வேறெதுவும் தெரியாத அப்பாவியாக அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
இடையிடையே ஆனந்தியிடமிருந்து வரும் போன் காலைகூட எடுக்க முடியாமல் தவியாய் தவித்தபடி அவர் படும் அவஸ்தையும்.. அந்தப் பக்கம் சின்னப் புள்ளைகள் போனால் அப்பாவியாய் பலியாவார்களே என்றெண்ணி மீண்டும் அந்தக் குண்டை எடுக்கத் துணியும் நல்லவராகவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் தினேஷ்.
காதலியிடம் முறைப்பு காட்டும் அதே நேரம்.. தோழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தலைவனாகவும் வீரம் காட்டுகிறார் தினேஷ். காலில் அடிபட்டு வீழும் தோழனுக்காக மாரிமுத்துவை ஏகத்துக்கும் பேசும் தினேஷின் குரல் ஒற்றைக் குரல் அல்ல. உலகமெங்கும் சாதாரண மக்களுக்காக எழும் அபயக் குரல். மிகச் சரியான நேரத்தில், மிகச் சரியானவிதத்தில் ஒலிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
‘சிட்டு’ சித்ரா எனும் ஆனந்தி, லாரி டிரைவர் செல்வம் எனும் தினேஷைக் காதலிக்கிறார். கெளரவக் கொலை அளவுக்குச் சென்று விடுகிறார்கள் ஆனந்தி வீட்டினர். ஆனால், அப்பொழுது சாதி காரணம் எனக் காட்டப்படுகிறது.
ஊரில் நடக்கும் திருவிழாவையும், ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறுவதையும் ஒரு குறியீட்டு ஒப்புமையாகத் தொகுத்துள்ளது அழகு. ‘மாவுலி’ பாடல் விஷுவல்ஸும் மிகவும் ரசனையாகப் படமாக்கப்பட்டுள்ளது.
ஆனந்தியின் டீச்சர் வேடமும், அவர் அணிந்து வரும் ஆடைகளின் நேர்த்தியும், மேக்கப் இல்லாத முகமும் கவர்ந்திழுக்கிறது.
இப்படியானதொரு ஆபத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இல்லாமல் இருக்கிறது அரசு. இதை எதிர்த்துப் போராடும் தோழர் தானியா எனும் ரித்விகா சிறப்பாக நடித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டுமென்ற அவர் அக்கறை புரிந்தாலும், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்துவிட்டு, மாணவர்கள் குழுமியிருக்கும் பல்கலைக் கழகத்திற்கு அவர் எடுத்துப் போக முனைந்திருக்கலாம்.
இரண்டாம் பாதியைச் சுமப்பவராக பஞ்சர் எனும் பாத்திரத்தில் முனீஸ்காந்த் குணசித்திர நடிப்பை வாரி வழங்கியுள்ளார். லாரிக்குக் காவல் இருப்பதாகட்டும், தனக்காக அழுத தினேஷைக் “குருஜி” என மரியாதை தருவதாகட்டும், முனீஸ்காந்த் கலக்கியுள்ளார்.
மனசாட்சியில்லாத முதலாளியாக மாரிமுத்து, சாதிப் பற்று மிக்க ஆனந்தியின் அண்ணன், கமிஷனுக்காக அலையும் ஜான் விஜய்.. இரும்புக் கடையில் பணியாற்றிய வேலையாட்கள் என்று அத்தனை பேருமே மிகச் சரியாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அளவுக்கதிகமான காட்சிகளை எப்படித்தான் படமெடுத்தார்களோ தெரியவில்லை. அந்த இரும்புகளின் சப்தங்களை மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். ஒலி வடிவமைப்பாளருக்கும், ஒலிப்பதிவாளருக்கும் நமது கை தட்டல், வாழ்த்துகள்.
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரின் ஒளிப்பதிவும் அருமை. இரவு நேரக் காட்சிகளில் எந்த கலர் கிரேடிங்கும் இல்லாமல் இருட்டும், வெளிச்சமும் கலந்த கலவையாய் பதிவாக்கியிருக்கிறார். தெருக் கூத்து நிகழ்ச்சியும், லாரியில் நடக்கும் சண்டை காட்சிகளும் ஒளிப்பதிவாளர் வித்தை காட்டியிருக்கும் இடங்கள்.
படத் தொகுப்பாளர் ஆர்.கே.செல்வாவின் கை வண்ணத்தில் இரும்புக் கடை சம்பந்தமான பல காட்சிகளை வெகுவாக ரசிக்க முடிகிறது. முக்கியமாக தினேஷ் மாரிமுத்துவிடம் வந்து சண்டையிடும் காட்சிகள். டென்ஷன் குறைந்துவிடாமல் அதே பீலிங்கில் காட்சிகளை இணைத்திருக்கிறார் தொகுப்பாளர். பாராட்டுக்கள் ஸார்.
தென்மாவின் இசையில் பாடல்களைவிடவும் பாடல் காட்சிகள் அருமை. அதைவிடவும் பின்னணி இசை அபாரம். லாரி சேஸிங் காட்சியிலும், இடையிடையே முனீஸ்காந்தின் பயப்படுதலைக் கூட்டும்விதத்தில் இசையும் கூடவே வந்திருப்பது ரசிப்புடையதாக இருக்கிறது.
கரை ஒதுங்கிய குண்டு ஏற்படுத்தாத பாதிப்பை, கடைசியாக உண்மையைச் சொல்லும் சடாகோ சசாகியின் கதை ஏற்படுத்துகிறது. ஆயுதங்களற்ற உலகத்திற்கான தேவையை, ஆயிரம் கொக்குகள் செய்து முடிக்கப் போராடும் சிறுமியின் பிரார்த்தனையை கதையோடு பொருத்தி, தானொரு சிறந்த இயக்குநர் என்பதை முதல் படத்திலேயே நன்கு உணர்த்தியுள்ளார் இயக்குநர் அதியன் ஆதிரை. அவருக்கும், நீலம் புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்கும் நமது வாழ்த்துக்களும், நன்றிகளும்..!