“தல’ என்று அழைக்க வேண்டாம்” – ரசிகர்களுக்கு அஜீத்தின் வேண்டுகோள்..!

“தல’ என்று அழைக்க வேண்டாம்” – ரசிகர்களுக்கு அஜீத்தின் வேண்டுகோள்..!

“இனி தன்னை யாரும் ‘தல’ என்ற அடைமொழியோடு அழைக்க வேண்டாம்…” என்று நடிகர் அஜீத்குமார் இன்று ஒரு அறிக்கையின் மூலமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் அஜீத்தை அவரது ரசிகர்கள் அனைவரும் செல்லமாக ‘தல’ என்றுதான் அழைப்பார்கள். இந்த ‘தல’ என்ற சொல்லை வைத்து “எவன்டா தல..?” என்று நடிகர் விஜய், தன்னுடைய ஒரு படத்தில் கேள்வியெழுப்புவதைப் போல கிண்டல் செய்திருந்தார்.

இதையடுத்து இன்னும் காத்திரமாக இந்த தல’ என்ற பெயரை அஜீத்துடன் இணைத்து அழைக்க ஆரம்பித்தினர் அவரது ரசிகர்கள்.

இன்னொரு பக்கம் இதே ‘தல’ என்கிற பட்டத்தை தோனிக்கும் கொடுத்து அவரையும் அழைத்து வந்தனர் சி.எஸ்.கே. அணியின் ரசிகர்கள்.

இதனால் இந்த தல’ என்ற பெயருக்குப் பொருத்தமானவர் யார் என்கிற போட்டி எழுந்தது. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தோனி ரசிகர்களுக்கும், அஜீத்தின் ரசிகர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்தப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் அஜீத் இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “இனிமேல் தன்னைக் குறிப்பிடும்போது வெறுமனே நடிகர் அஜீத்குமார் அல்லது அஜீத் என்று குறிப்பிட்டாலே போதும். வேறு எந்தப் பட்டப் பெயரையும் பயன்படுத்த வேண்டாம்…” என்று அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, அல்லது என்னைப் பற்றி குறிப்பிட்டுப் பேசும்போதோ என் இயற் பெயரான அஜித்குமார், மற்றும் அஜித் என்றோ எல்லது ஏ.கே. என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்..

ஆக, இதன் மூலமாகத் ‘தல’ என்ற அடைமொழியை தோனிக்கு அஜீத் விட்டுக் கொடுத்துவிட்டார்.

Our Score