பிரபல கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிகரன் நடிகர் அர்ஜூன் மீது தெரிவித்த பாலியல் புகாருக்கு ஆதாரம் இ்ல்லை என்று கூறி கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தமிழில் ‘நிபுணன்’ என்ற படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இவருடன் நடிகர் அர்ஜூனும் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அர்ஜூன் தனக்கு பல வழிகளிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018-ம் ஆண்டு புகார் கூறியிருந்தார் ஸ்ருதி ஹரிஹரன்.
இது குறித்து பெங்களூரு போலீசிலும் புகார் அளித்திருந்தார். அந்த மாநில போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் ஆன பிறகும் போலீசார் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை எதையும் தாக்கல் செய்யவில்லை. அர்ஜூனுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறி வந்தனர்.
மேலும் தமிழ், கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள், என்று யாருமே அர்ஜூனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கவில்லை.
இதையடுத்து நேற்று இந்த வழக்கில் அர்ஜூனுக்கு எதிராக எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.