“எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது..! – நடிகர் ஆர்யாவின் பேச்சு

“எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது..! – நடிகர் ஆர்யாவின் பேச்சு

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ‘நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக் குழுவினர் அதனை பெற்றுக் கொண்டனர்.

டீஸரை வெளியிட்டு நடிகர் ஆர்யா பேசும்போது, “நையப்புடை’ டீஸர் பார்த்து அசந்து விட்டேன். எஸ்.ஏ.சந்திரசேகரன்  சார் ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக, எவ்வளவோ சாதித்து விட்டார். அவர் சாதிக்க வேண்டியது என்று எதுவுமே பாக்கியில்லை. 

அவர் என்னை இந்த விழாவுக்கு அழைத்தபோது படம் பற்றி, கதை பற்றி, தயாரிப்பாளர் பற்றி  எல்லாம் அறிமுகப்படுத்தி விளக்கிப்  பேசி விட்டுத்தான் அழைத்தார். அவர் வரச் சொன்னால் வரப் போகிறேன். ஆனால் அவர் அழைத்த விதம் அவ்வளவு முறையாக இருந்தது.

எப்போதும் அவரது உற்சாகம் என்னை ஆச்சரியப்பட வைக்கும். டீஸர் பார்க்கும்போது எஸ்.ஏ.சி சார் அழகாக சண்டை போட்டுள்ளார்.  பார்த்து அசந்து விட்டேன். 

எனக்கெல்லாம் சண்டைக் காட்சியில் நடிக்கும்போது எப்படா இந்த ஃபைட் முடியும் என்று நினைப்பேன். அந்த அளவுக்கு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது எரிச்சலாக இருக்கும். ஆனால் அவர் இதில் அவ்வளவு உற்சாகமாக சண்டை போட்டு இருக்கிறார். பாராட்டுக்கள் ஸார். 

இவ்வளவு சாதித்து இருக்கிறார்… இந்த வயதில் இவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று சிலர் நினைக்கலாம். அவரிடம் அந்த அளவுக்கு சினிமா மீது ஆர்வம், ஈடுபாடு இருக்கிறது. அதனால்தான் இப்படிச் செய்ய முடிகிறது.

இவர் வயதில் நான் என்றால் சைக்கிள்தான் ஓட்டிக் கொண்டிருப்பேன். வீட்டில் கேட்பார்கள் இவன் ஏன் பைத்தியக்காரன் மாதிரி சைக்கிள் ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்று. எனக்கு பிடித்தது, என்கூட இருப்பதுதான் வரும்.

இவர் மகன் ஒரு சூப்பர் ஸ்டார், இதற்குமேல் என்ன  வேண்டும் என்று பலரும் பலவிதமாகப் பேசுவார்கள்.. இந்த வயதில் ஏன் இப்படி என்று நினைப்பார்கள். ஆனால்  விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல்  இருப்பார். அவரால் உழைக்காமல் இருக்க முடியாது. 

பா.விஜய். ஆல்ரவுண்டர் எல்லாமும் செய்பவர். எனக்காக நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அவர் சினிமாவைக் காதலிப்பவர். அவரும் இதில் நடித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…” என்றார்.

Our Score