“சினிமாவே தெரியாமல் படமெடுக்க வருகிறார்கள்..” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்..!

“சினிமாவே தெரியாமல் படமெடுக்க வருகிறார்கள்..” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வருத்தம்..!

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் ‘நையப்புடை’. இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் முக்கிய நாயகனாக வேடமேற்று நடிக்க அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.

DSC_5109

இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக் குழுவினர் அதனை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் எல்லாக் காட்சியும் பிடிக்கும். ஒரு காட்சி மட்டும் பிடிக்காது. அது எஸ்.ஏ.சி. மாமாவை நான் அடிக்கும் காட்சி. முதலில் நான் அந்தக் காட்சியில் நடிக்க மறுத்தேன். ஒழுங்கா என்னை உதைக்கலைன்னா, நான் உன்னை உதைப்பேன் என்று என்னை மிரட்டி அப்படி நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி..” என்றார்.

படத்தின் இயக்குநர்  விஜய்கிரண் பேசும்போது, “எஸ்.ஏ.சி. சார், பா.விஜய் சார் என இரண்டு பெரிய மனிதர்களை வைத்து இயக்கியது பெரிய விஷயம். வாய்ப்பு கொடுத்த தாணு சாருக்கு நன்றி…” என்றார்.

‘ரஜினி முருகன்’  இயக்குநர் பொன்ராம் பேசும்போது, “நான் எஸ்.ஏ.சி. சாரிடம் உதவியாளராக இருந்தபோது அவரிடம் அடி வாங்கியிருக்கிறேன். ஆனால் அதில் வலி இருக்காது. அப்பா, அம்மா அடிப்பது போல்தான் இருக்கும். ” என்றார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசும்போது ”நிலாவே வா’ எனக்கு 3-வது படம். அதை எடுக்கும் முன்பு ‘எத்தனை நாளில் எடுப்பாய்..? எத்தனை  ரோலில் எடுப்பாய்..?’  என்று எஸ்.ஏ.சி. ஸார் கேட்டார். ‘45 நாள்; 50 ரோல்’ என்றேன். ‘ஒரு நாள் அதிகமானாலும் அடிப்பேன்’ என்றார். அப்படி எடுத்த படம் அது…’ என்றார்.

கவிஞர் பா.விஜய் பேசும்போது, ”நான் ஒரு ‘நறுக்’ கவிதை எழுதினேன். ‘உழைப்பு உன் அத்தியாயத்தில் முதல் வரியாக இருந்தால் உயரம் உன் வாழ்க்கையில் முகவரியாக இருக்கும்’ என்று. அதற்கு முழு உதாரணமாக இருப்பவர் எஸ்.ஏ.சி சார் அவர் எனக்கு அப்பா மாதிரிதான்…” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி  எஸ்.தாணு பேசும்போது “நினைத்ததைவிட ‘நையப்புடை’ படம் நன்றாக வந்திருக்கிறது. நகைச்சுவை, சண்டை என எஸ்.ஏ.சி.யின் பல முகங்கள் இந்தப் படத்தில் வெளியாகியுள்ளன. படம் பார்த்து மகிழ்ந்து, நெகிழ்ந்து போனேன். ‘நையப்புடை’ பெரிய படமாக வரும்.  வட இந்தியாவில் அமிதாப்பச்சன் போல தென் இந்தியாவில் நல்ல நடிகராக  எஸ்.ஏ.சி.  வருவார்..” என்றார்.

முன்னதாக லிடியோன் நாதஸ்வரம் என்கிற 9 வயது சிறுவன் டிரம், பியானோ வாசித்துக் காட்டினான். அதைப் ரசித்து விட்டுப் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன், ”இவனுக்கு முன்பாக நாம் எல்லாம் ஒன்றுமில்லை.” என்று கூறி பாராட்டினார்.

தொடர்ந்து ‘நையப்புடை’ படத்தின் அனுபவம் பற்றி  இயக்குநர்  எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது, “எனக்கு உழைப்பு தவிர வேறு எதுவும் தெரியாது. யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். நான் 5 ஆண்டுகள் காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டவன். 

படப்பிடிப்புக்கு  மும்பை போகும்போது பைவ் ஸ்டார் ஓட்டலில் தங்கியிருப்பேன்.  ஸ்டார் ஓட்டலில் நாம் சமைக்க அனுமதி இல்லை. எனவே பாத்ரூமில் உள்ள ப்ளக் பாயிண்டில் குக்கரை வைத்து என் மனைவி சமைத்துக் கொடுப்பார்.

யாரையாவது நாம் விரும்பினால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். உண்மையாகக் காதலித்தால் அவர்கள் நம்மை விடமாட்டார்கள். இப்போதெல்லாம் உண்மையாகக் காதலிப்பவர்கள் இருப்பதில்லை. மனைவியைப் போலவே  நான் சினிமாவையும்  நிஜமாகவே காதலிக்கிறேன்.

என்றும் காதலுக்கு தனி சக்தி உண்டு. காதலித்தால் ஒரு சக்தி  வரும். அதனால்தான் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வருகிறது. எனக்கு உழைக்க மட்டுமே தெரியும். என் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்’ மாடு மாதிரி உழைக்கிறானே’ என்பார்கள்.

நான் பெரிய அறிவாளி இல்லை. எனக்கு 2 வரி கவிதைகூட எழுதத் தெரியாது. 4 வரி வசனம்கூட எழுதத் தெரியாது. இலக்கியம் படித்ததில்லை. இருந்தாலும் உழைப்பேன்.

இப்போது சினிமாவே தெரியாமல் படம் எடுக்கிறார்கள். கதையில்லாமல் படம் எடுக்கிறார்கள்.  அதுவும் ஓடுகிறது. எனக்கு 73 வயது ஆகிறது. இந்த இயக்குநருக்கு 19 வயதுதான் ஆகிறது.. இந்தப் பையன் இயக்குநர் என்று  படம் ஆரம்பித்ததும் 2 நாளில் ஓடிவிடலாம் என்று நினைத்தேன். இது சரிப்பட்டு வராது படத்தை நிறுத்தி விடலாம் என்றேன். தாணுதான்  சமாதானப்படுத்தினார் 4 வது நாள் எடிட் செய்து எடுத்ததைக் காட்டியதைப் பார்த்தவுடன்தான்  நம்பிக்கை வந்தது.

பா.விஜய்யை என் இன்னொரு மகனாகவே பார்க்கிறேன். படத்தின் கதை எனக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தாலும் அவர், பெருந்தன்மையுடன் ‘ஜெயிக்கிற படத்தில் நான் இருக்கிறேன்’ என்றார்..  இப்போது துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷுடன் நடிக்கிறேன். தனுஷ் நடிப்பது தெரியாமல் நடிக்கிறார். அவரிடம் நிறைய கற்றுக் கொள்கிறேன். இன்றைய இளைஞர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது…’ என்றார்.   

Our Score