சங்கர் கே.பிரவீன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சரண் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் வினய் ஹீரோவாக நடித்துள்ளார். சாமுத்திரிகா, ஸ்வாஸ்திகா, கேஷா கம்பட்டி என்ற மூன்று அறிமுக கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் பிரதீப் ராவத், ஸ்ரீஜித் ரவி, ரித்திகா சீனிவாஸ், காஜல் பசுபதி, மயில்சாமி, இளவரசு, அருள்தாஸ், டேனியல், ஸ்ரீரஞ்சனி, ஷானூர் ஷனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
உடை வடிவமைப்பு – தஷாயானி, தயாரிப்பு நிர்வாகம் – ஆனந்த், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் – அருண் சீனு, ஸ்டில்ஸ் – தேனி செல்வம், மக்கள் தொடர்பு – நிகில், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – ராஜூ சுந்தரம், விஜிஷா சதீஷ், கலை இயக்கம் – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – ரிச்சர்டு கெவின், இசை – பரத்வாஜ், பாடல்கள் – வைரமுத்து, கபிலன் வைரமுத்து, ஒளிப்பதிவு – கிருஷ்ணா ரமணன், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – சரண்.
திருநெல்வேலிதான் கதைக் களம். பங்காளி சண்டையில் சிக்கியிருக்கும் ஒரு வீடு. சொத்துப் பிரச்சினை கோர்ட்டில் இருக்கிறது. வீட்டுக்குள் முட்டல், மோதல்கள் அபாரமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் இரண்டு குடும்பங்களில் ஒருவரான ஹீரோவின் தந்தைக்கு இரட்டைக் குழந்தை பிறக்கிறது. செவத்தக்காளை, சிவந்திக்காளை என்று பெயர் வைக்கிறார்கள். இந்த இரட்டையர்களுக்கு பிறந்ததில் இருந்தே ஏழாம் பொருத்தம். எப்போதும் அடிதடிதான். இரட்டையர் இருவருமே ஹீரோ வினய்தான்.
இப்போது நீதிமன்றத்தில் குடும்பச் சொத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வருகிறது. மொத்தச் சொத்தும் வினய்யின் அப்பாவுக்கே என்று தீர்ப்பாகிறது. தீர்ப்புக்கு பிறகு அந்த பங்காளி குடும்பம் ஊரைவிட்டே கிளம்பிச் செல்கிறது.
இரண்டு வினய்களுக்கும் 14 வயது இருக்கும்போது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலாவுக்கு செல்கிறார்கள். அங்கே போன இடத்திலும் இதே சண்டை தொடர கோபத்தில் செவத்தக்காளை வினய்யை அம்போவென விட்டுவிட்டு கிளம்புகிறார்கள் பெற்றோர்கள்.
செவத்தக்காளை கடற்கரையில் தான் பார்த்த தன் வயதையொத்த ஒரு பருவப் பெண்ணை பின் தொடர்ந்து சென்று விடுகிறார். இவர் சென்ற ஜீப்பை ஓட்டிச் சென்றது பழைய பங்காளி. அந்த ஜீப்பை பார்த்துவிடும் வினய்யின் அப்பா குடும்பத்தைச் சேர்ந்தவர் இதனை வினய்யின் அப்பாவிடம் சொல்கிறார். கூடவே செவத்தக்காளை வினய்யை தேடு தேடென்று தேடுகிறார்கள். கிடைக்கவில்லை.
ஆனால், பங்காளி முதுகில் வைத்திருந்த அரிவாளில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்துவிட்டு செவத்தக்காளை வினய்யை தனது பங்காளி கொலை செய்துவிட்டான் என்று தவறுதலாகப் புரிந்து கொள்கிறார் வினய்யின் அப்பா.
பதிலுக்கு உடனேயே தனது பங்காளியை அதே கடலில் வைத்து படுகொலை செய்கிறார் வினய்யின் அப்பா. சிறையில் இருந்து வெளியே வந்தவர் அதே பகுதியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த தனது மகனான செவத்தக்காளை வினய்யை பார்த்துவிட்டு அவனை ஊருக்கு அழைக்கிறார். அவனோ ஊருக்கு வர விரும்பாமல் மறுக்கிறான்.
அப்படியே இவன் வந்தாலும் உயிருடன் இருக்கும் மகனுக்காக பங்காளியை கொன்றுவிட்டான் என்கிற பெயர் கிடைக்குமே என்கிற பரிதவிப்பில் மகன் உயிருடன் இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார் வினய்களின் தந்தை.
இப்போது இரண்டு வினய்களும் இளமைப் பருவத்தில் இருக்கிறார்கள். பாளையங்கோட்டையில் செட்டிலாகியிருக்கும் வினய் ச்சும்மா ஊரைச் சுற்றி வருகிறார். தனது தாத்தாவின் சொத்துக்களை உடனேயே தன் பெயருக்கு மாற்றித் தரும்படி தனது அம்மாவிடமும், தாய் மாமனிடமும் மல்லுக் கட்டி வருகிறார்.
இன்னொரு வினய்யோ மும்பையில் ஹவாலா ஏஜெண்ட்டாக வேலை பார்க்கிறார். இந்த்த் தொழிலில் இவருக்கு உதவி செய்யும் கேஷா கம்பட்டி இந்த வினய் மீது ஒரு கண்ணாய் ஒரு தலைக் காதலில் இருக்கிறார்.
பாளையங்கோட்டையில் நகைக் கடை வைத்திருக்கும் மயில்சாமியின் கடையில் வேலைக்கு சேர்கிறார் அவருடைய அக்காள் மகளான சாமுத்ரிகா. இந்தக் கடையின் நகைகளை தனது உறவுக்காரரான போலீஸ் ஏட்டு இளவரசுவின் துணையுடன் கொள்ளையடிக்கிறார் உள்ளூர் வினய்.
இப்போது அதே ஊருக்கு, அதே தெருவில், அதே வினய்யின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வந்து குடியேறுகிறது ஊரைவிட்டு ஓடிப் போன பங்காளியின் குடும்பம். இப்போது அந்த பங்காளி குடும்பத்தின் அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்த டி.ஜி.ரவிதான் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர்.
தனது குடும்பத்தை ஊரைவிட்டு ஓடச் செய்த தனது பங்காளி குடும்பத்தை பழிக்குப் பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். இந்த நேரத்தில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெறவே வினய்யை இந்த வழக்கில் சிக்க வைக்க பெரும் முயற்சி எடுக்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாமுத்ரிகாவும், வினய்யும் காதலிக்கத் துவங்குகிறார்கள்.
தனது தந்தையை ஜெயிலில் சென்று பார்க்கும் வினய், தாத்தா சொத்துக்களை தனது பெயரில் மாற்றித் தரும்படி வற்புறுத்துகிறார். இதே நேரம் ஹவாலா வினய்யும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறார்.
இந்த நேரத்தில் மத்திய அமைச்ச்ர் ஒருவரின் 2000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டு வைத்திருக்கிறார் பிரதீப் ராவத். அந்த வங்கியின் லாக்கருக்கான பாஸ்வேர்டை தனது மகள் ஸ்வாஸ்திகாவின் மார்பிலும், இடுப்பிலும் பச்சைக் குத்தி வைத்திருக்கிறார்(என்னவொரு பாசமான அப்பா..!).
அந்த மத்திய அமைச்சர் திடீரென்று இறந்து போக அந்த சுவிஸ் வங்கிப் பணத்தை எடுக்க மத்திய அமைச்சரின் சின்ன வீடான காஜல் பசுபதி முயல்கிறார். இதற்கான தேடுதல் வேட்டையில் ஸ்வாஸ்திகா அவர்களுக்குத் தேவையாய் இருக்கிறது.
இதே நேரம் ஸ்வாஸ்திகாவை சிறு வயதிலிருந்தே காதலித்து வந்த ஹவாலா வினய் ஒரு சந்தர்ப்பத்தில் தனது காதலை அவரிடத்தில் சொல்ல.. ஸ்வாஸ்திகாவும் இதனை ஏற்றுக் கொள்கிறார். இப்போது காஜல் அண்ட் கோ., சுவிஸ் வங்கிப் பணத்திற்காக ஸ்வாஸ்திகாவை கடத்த நினைக்க.. அதே நேரம் ஹவாலா வினய் ஊருக்குப் போக நினைக்கிறார்.
பாளையங்கோட்டைக்கு போய் தனது சொத்துக்களை மீட்க நினைக்கும் ஹவாலா வினய் தனது காதலியான ஸ்வாஸ்திகாவை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை வருகிறார். அதே நேரம் ஹவாலா வினய்யின் திட்டத்தின்படி கேஷா கம்பட்டி, பாளையங்கோட்டை வினய்யை அழைத்துக் கொண்டு தாய்லாந்துக்கு சுற்றுலா பயணம் செல்கிறார்.
போன இடத்தில் கேஷா கம்பட்டியின் கவர்ச்சி வலையில் சிக்காமல் நழுவும் லோக்கல் வினய், தனது சகோதரனான இன்னொரு வினய் ஊருக்கு வந்து சொத்தில் பங்குக் கேட்டுக் கொண்டிருப்பது தெரிய வர.. உடனடியாக தாய்லாந்திலிருந்து பறந்து பாளையங்கோட்டை வருகிறார்.
அதே நேரம் ஸ்வாஸ்திகாவை காணாமல் தவிக்கும் பிரதீப் ராவத்தும், காஜலும் அவரைத் தேடி பாளையங்கோட்டை வருகிறார்கள். இன்னொரு பக்கம் லோக்கல் ரவுடியான அருள்தாஸின் அப்பாவை திருட்டு வழக்கில் சம்பந்தப்படுத்தி அவரை அனாதைப் பொணம் என்று எரித்ததாகச் சொல்லி லோக்கல் வினய்யை கொலை வெறியோடு துரத்துகிறார் அருள்தாஸ்.
இந்த மூன்று தரப்பினரும் பாளையங்கோட்டைக்கு வந்து நிற்க.. அதகளமாகிறது இவர்களின் மல்லுக்கட்டு.. முடிவு என்னாகிறது என்பதுதான் இந்த சுவாரஸ்யமான திரைக்கதையை உள்ளடக்கியது ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் கதை.
இந்தப் படம் தயாரிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்கு பிறகு ரிலீஸானதே இந்தப் படத்தின் மிகப் பெரிய சாதனைதான்.
இது போன்ற கமர்ஷியல் கம்மர் கட்டுக்களுக்கு திரைக்கதைதான் மிக, மிக முக்கியம். இந்தப் படத்தில் திரைக்கதை மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. திறமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழப்பமே இல்லாமல் நீட்டாக இருக்கிறது திரைக்கதை. பாராட்டுக்கள் சரண் ஸார்..
வினய்யை இந்தக் கேரக்டருக்கு பயன்படுத்தியது ஆச்சரியமானதுதான். ஏனெனில் திரையுலகத்தில் அவர் காலடி வைத்ததில் இருந்தே தனக்கென்று தனி மார்க்கெட் எதுவும் இல்லாத நடிகராகவே இருந்து வருகிறார். அப்படியிருந்தும் அவரை தைரியமாக இரட்டை வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இவருடைய தைரியத்திற்கும் ஒரு பாராட்டு.
வினய் மிகப் பெரிய மாற்றமே இல்லாமல் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். தங்கப் பல் மட்டுமே வித்தியாசம். நடிப்பிலும் அதேதான். இவர் முகத்திற்கு காமெடி செட்டாகவில்லை. ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாத கேரக்டர் ஒர்க் அவுட்டாகிறது.
ஹீரோவின் நடிப்புத் திறனுக்கும் சேர்த்துவைத்து ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். ஸ்வாஸ்திகா, சாமுத்ரிகா, கேஷா கம்பட்டி மூவருமே அறிமுக நாயகிகள். ஆனால் பல படங்களில் நடித்தவர்கள் போல நடித்திருக்கிறார்கள். அல்லது நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சாமுத்ரிகாவுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் என்பதால் மிக அழகாக நடித்திருக்கிறார். கேஷாவுக்கும், ஸ்வாஸ்திகாவுக்கும் கொஞ்சமே என்றாலும் திரைக்கதையின் வேகத்தில் மூவரையுமே ரசிக்க முடிகிறது. கூடுதல் போனஸாக வருகின்ற காட்சிகளிலெல்லாம் கிளாமரையும், கவர்ச்சியையும் எல்லை மீறி அள்ளி வீசியிருப்பதால் மூச்சுவிடாமல் இவர்களை ரசிகர்கள் கவனிக்கிறார்கள்.
பாடல் காட்சிகளில் இத்தனூண்டு உடைகளை அணிந்து பி அண்ட் சி ரசிகர்களுக்கேற்ற ரசனையை வாரி வழங்கியிருக்கிறார்கள் மூவரும். இயக்குநர் சரணின் ஸ்பெஷலாட்டியே இதுதான் என்பதால் வேறொன்றும் சொல்வதற்கில்லை. படத்தின் மிகப் பெரிய பலம் திரைக்கதை என்றால், இரண்டாவது பலம் ஹீரோயின்கள்தான்.
அம்மாக்களாக நடித்திருக்கும் ரித்திகா சீனிவாஸ் மற்றும் ஷானூர் ஷனாவின் அழகும், நடிப்பும்கூட இன்னொரு பக்கம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது. ரித்திகா சீனிவாஸ் கொஞ்சம் வில்லித்தனமாக யோசித்தாலும், ஷானூர் ஷனா அடாவடி அம்மாவாக, மாமியாராக ஓவர் டோஸ் நடிப்பில் மிஞ்சிவிட்டார்.
மயில்சாமியும், இளவரசுவும் அடுத்து நடிப்பில் குறிப்பிட்டுச் சொல்ல வைக்கிறார்கள். அதுவும் மயில்சாமியுடன் சேர்ந்து இளவரசுவும் அருள்தாஸின் டீமிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.
காஜல் பசுபதியும் தன் பங்குக்கு கூடுதலாக கவர்ச்சியைக் கொட்டி ஸ்டைலாக சுருட்டு பிடிக்கும் பெண்ணாகவும் வந்து போகிறார். இவரை பார்த்தவுடன் மெர்சலாகும் அருள்தாஸின் அந்த காமெடியும் தியேட்டரை கலகலக்க வைக்கிறது.
லாட்ஜில் ரூம் போட்டு யோசிப்பார்கள் என்பதையே கொஞ்சம் மாற்றி ரூம் போட்டு அழும் இந்த குரூப்பின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ரசனையானது.
கிருஷ்ணா ரமணனின் ஒளிப்பதிவு இயக்குநருக்கு மிகப் பெரிய பக்க பலமாக இருக்கிறது. பாடல் காட்சிகளில் ஸ்கிரீன் முழுக்க இளமையை தெளிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். தாய்லாந்து காட்சிகள் குளுமை என்றால், பாளையங்கோட்டை லாட்ஜில் எடுக்கட்ட காட்சிகள் பரபரப்பு நகைச்சுவை தர்பார்..!
பரத்வாஜின் இசையில் பாடல்கள் ஓஹோ ரகம். அனைத்து பாடல்களுமே கேட்கும்விதத்தில் இசைக்கப்பட்டு, கேட்பது போல் பாடப்பட்டு, கேட்டவுடன் மனதில் நிற்பதுபோல் எழுதப்பட்டிருக்கிறது. இசையமைப்பாளருக்கு நமது வாழ்த்துகள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கச்சிதமாக நறுக்கிக் கொடுத்த படத் தொகுப்பாளர் ரிச்சர்டு கெவினுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!
படத்தின் கடைசி 20 நிமிடங்களில்தான் கலகலப்பு பட்டாசு வெடிக்கிறது. திரைக்கதையின் வேகத்தில் மிகச் சரியாக இணைக்கப்பட்ட காட்சியமைப்பில் அடுத்தது என்ன.. அடுத்தது என்ன என்று கேட்க வைத்து காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
கமர்ஷியலாக ஒரு படம் செய்திருக்கிறேன் என்று இயக்குநர் சரண் சொல்லியிருப்பதில் தவறே இல்லை. அதனை முழுமையாகவே செய்திருக்கிறார்.
பொழுது போக வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இந்தப் படத்திற்குச் செல்லலாம்..!