full screen background image

பிச்சுவா கத்தி – சினிமா விமர்சனம்

பிச்சுவா கத்தி – சினிமா விமர்சனம்

ஸ்ரீஅண்ணாமலையார் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சி.மாதையன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் இனிகோ பிரபாகர், செங்குட்டுவன் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். இதில் செங்குட்டுவன் அறிமுக நாயகன். ஸ்ரீபிரியங்கா, அனிஷா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இதில் அனிஷா அறிமுக நாயகி.

மேலும் யோகி பாபு, ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஆர்.என்.ஆர்.மனோகர், சேரன்ராஜ், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஏ.பழனிவேல், கலை இயக்கம் – கே.ஜி.வெங்கடேஷ், இசை – என்.ஆர்.ரகுநந்தன், படத் தொகுப்பு – எஸ்.பி.ராஜா சேதுபதி, நடனம் – ஷெரீப், தீனா, சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், சுப்ரீம் சுந்தர், மக்கள் தொடர்பு – வின்சன், எழுத்து, இயக்கம் – ஐயப்பன், தயாரிப்பு – சி.மாதையன்.

ஹீரோக்களில் ஒருவரான இனிகோ பிரபாகர், ரமேஷ் திலக், யோகிபாபு மூவரும் நெருங்கிய நண்பர்கள். இனிகோ ஸ்ரீபிரியங்காவை இரண்டு வருடமாய் லவ்விக் கொண்டிருக்கிறார். ஊரில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச் தினத்தன்று மைதானத்திற்கு வந்து தனது காதலைச் சொல்லிவிட்டுச் செல்கிறார் ஸ்ரீபிரியங்கா.

இந்த நல்ல விஷயத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார் இனிகோ. மதுவருந்தும் மூவருக்கும் அப்போதைய மது போதாமையாய் இருக்கிறது. கூடுதலாக பாட்டில் வேண்டும் என்கிறார் யோகிபாபு. வாங்க காசில்லை என்கிறார் இனிகோ. அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என் உயிர் நண்பன்னா உடனே எனக்கு தண்ணி வாங்கிக் கொடு என்கிறார் யோகிபாபு.

தனது பெயரைக் காப்பாற்ற எப்படியாவது பணம் சம்பாதிக்க முயல்கிறார் இனிகோ. வழியில் சிக்குகிறது ஆடு. அதனைத் தூக்கிச் சென்று விற்று காசாக்க நினைத்து ஆட்டை கடத்துகிறார் இனிகோ. ஆனால் வழியில் டூவீலர் ரிப்பேராக உள்ளூர் மக்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். போலீஸிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்பில் மூவரும் அபராதம் விதிக்கப்படுவதோடு ஒரு மாதத்திற்கு தினம்தோறும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்கிறார் நீதிபதி.

இதற்காக வெளியூருக்கு வந்து ரமேஷ் திலக்கின் நண்பனின் அறையில் தங்குகிறார்கள் மூவரும். கையெழுத்திட போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும்போது அங்கேயிருக்கும் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜ், அவர்கள் பிரச்சினையில்லாமல் கையெழுத்திட வேண்டுமெனில் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என்கிறார்.

இப்போது முப்பதாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள் மூவரும். விதி விளையாட்டு காட்ட.. சனீஸ்வரன் உடலுக்குள் புக.. தவறான வழிக்கு இறங்குகிறார்கள். வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அனிஷாவின் கழுத்துச் செயினை பறிக்க முயல்கிறார் ரமேஷ் திலக். முதல் முயற்சி என்பதால் குறி தவற.. மாட்டிக் கொள்கிறார்கள்.

இம்முறையும் அதே இன்ஸ்பெக்டரிடம் சிக்கிக் கொள்ள.. இன்னமும் கிடுக்கிப் பிடி போடுகிறார். இந்த வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க வேண்டுமெனில் கண்டிப்பாக முப்பதாயிரம் ரூபாய் தனக்கு வேண்டும் என்கிறார் இன்ஸ்பெக்டர். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள் நண்பர்கள் மூவரும்.

அனிஷா ஒரு எம்.எல்.எம். கம்பெனியில் சேர்கிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் செங்குட்டுவனும் தனது காதலுக்காகவே அதே கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். சில நாட்களில் அந்த நிறுவனம் ஒரு போலியானது என்பது அவர்களுக்கு தெரிய வருகிறது. ஆனாலும் அவர்களது காதல் மிக வலுமாக மாறிப் போகிறது.

இன்ஸ்பெக்டர் சேரன்ராஜூம் லோக்கல் ரவுடியான ஆர்.என்.ஆர். மனோகரும் நெருங்கிய நண்பர்கள். மனோகரின் இல்லீகல் வேலைகளையெல்லாம் லீகலாக முடிவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்பவர் சேரன் ராஜ்.

இப்போது லோக்கல் மந்திரிக்கு வைரக் கற்கள் வரப் போவதை அறிந்த மனோகர், அதனை அபேஸ் செய்ய ஆட்களை தேடுகிறார். அப்போது இந்த நண்பர்கள் மூவரையும் மனோகரிடம் கோர்த்துவிடுகிறார் சேரன்ராஜ். இதில் கிடைக்கும் பணத்தை தன்னிடம் தந்து கணக்கை செட்டில் செய்யும்படி சொல்கிறார்.

வேறு வழியில்லாத நண்பர்கள் இதனை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக அந்த வைரக் கற்களை கடத்திக் கொண்டு வந்து மனோகரிடம் ஒப்படைக்கிறார்கள். பதிலுக்கு கிம்பளமாக கிடைத்த பணத்தை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு தங்களை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார்கள்.

ஆனால் சேரன் ராஜ் அவர்களை விடுவிக்க மறுத்து திரும்பவும் மனோகரின் சொல் பேச்சு கேட்டு அவருடனேயே இருக்கும்படி வற்புறுத்துகிறார். இல்லையென்றால் அனிஷா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அவர்களை ஜெயிலுக்குள் வைப்பேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் கோபமடையும் இனிகோ அனிஷாவை கொலை செய்ய முயல்கிறார். இன்னொரு பக்கம் அவருடைய காதலியான ஸ்ரீபிரியங்காவின் வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதே நேரம் அனிஷாவும் தான் காதலித்த செங்குட்டுவனுடன் வீட்டைவிட்டு ஓட முயல்கிறார்.

கடைசியில் நண்பர்களின் நிலைமை என்னவானது..? காதலர்கள் கரை சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

இனிகோ பிரபாகரின் நடிப்பு ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும் அவருடைய கேரக்டர் மீது ஈர்ப்பு இல்லாமல், எதிர்ப்பாகவே நம் மனம் இருப்பதால் ஒருமித்து அவரை ரசிக்க முடியவில்லை. ஆனால், அந்தக் கேரக்டருக்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார் இனிகோ.

யோகிபாபுவும், ரமேஷ் திலக்கும்தான் கொஞ்சம், கொஞ்சம் படத்தில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். அதிலும் யோகி பாபுவின் சில ‘விட்’டுகளால்தான் படத்தின் திரைக்கதை மாறுகிறது. என்றாலும், அதுதான் நகைச்சுவையாகவும் இருக்கிறது.

செங்குட்டுவனுக்கு இது முதல் படம் போல.. இன்னும் நிறைய வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்து தனது திறமையை வெளிக்காட்ட வாழ்த்துகிறோம். ஸ்ரீபிரியங்காவும், அனிஷாவும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு படம் சின்ன வயது காதல்களையே சொல்லிக் கொண்டிருப்பதுதான், தமிழ் சினிமாவின் தலையெழுத்து என்பதால் இந்தக் காதல்களையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

பழனிவேலுவின் ஒளிப்பதிவில் குறையில்லை. இரவு நேரக் காட்சிகளின் படமாக்கலில் தனி அழகை கொடுத்திருக்கிறார். என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் பாடல்களும் கேட்கும் ரகம்தான்.

இயக்குதலில் குறையே இல்லை என்று சொல்லலாம். ஆனால் கதை, திரைக்கதையாக்கத்தில்தான் பிரச்சினையே..!

ஆடு திருடி போலீஸில் மாட்டி, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடும்படி உத்தரவு என்பதுவரையிலும் ஓகேதான். ஆனால் இதன் பின்புதான் படத்தின் கதை திசை திரும்பி தேவையில்லாத கதையாகிவிட்டது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பணம் லஞ்சம் கேட்டால் அதைத் தவிர்க்க இப்போதைக்கு ஆயிரத்தெட்டு வழிகள் உண்டு. இதற்காக வழப்பறிக் கொள்ளையில் ஈடுபடும் அளவுக்கு மூளை மங்கியவர்களாக ஹீரோவும், அவனது நண்பர்களும் இருக்கிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத்து. யோகிபாபு இதனை எதிர்க்கிறார். அவர்கள் தங்கியிருக்கும் அறையின் நண்பனும் எதிர்க்கிறான் என்பதெல்லாம் சரி. ஆனால் முடிவெடுப்பது ஹீரோதானே..? அவர் அதைச் செய்யும்போது ஹீரோயிஸம்தான் இதைச் செய்கிறது என்பது போலாகுமே..?

சரி.. இதாவது பரவாயில்லை. இவரே ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வருகிறார். இன்னொரு பக்கம் தன் மீது புகார் கொடுத்துவிட்டார் என்பதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்ய முயற்சிப்பதெல்லாம் எந்த வகையில் நியாயம்..?

ஒரு பக்கம் தனது காதலியை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாக விரும்புகிறார். அதே காதலியே “என் கழுத்தில் தாலியை கட்டிட்டு வீட்லேயே இரு. நான் வேலைக்கு போய் உன்னைக் காப்பாத்துறேன்” என்கிறார். இப்படியொரு அன்னை தெரசாவை காதலித்து வரும்வேளையில் இன்னொரு பெண்ணை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக நினைப்பது முட்டாள்தனமில்லையா..?

வழக்கமாக வில்லன்கள் செய்யும் முட்டாள்தனமான வேலையை ஹீரோ செய்வதை எப்படி ஏற்றுக் கொள்வது…? கிளைமாக்ஸிலும் இதையேதான் செய்திருக்கிறார்கள்.

இதனாலேயே இந்தப் படத்தை தவறான கருத்தோடு, கண்ணோட்டத்தோடு உருவான படம் என்கிற ரீதியில்தான் அணுக வேண்டியிருக்கிறது.

இந்தப் பிச்சுவாக் கத்தி படம் பார்ப்பவர்களையும் மனதளவில் பதம் பார்க்கும்..!

Our Score