மறைந்த பிரபல பழம்பெரும் நடிகையான ‘ஆச்சி’ மனோரமாவின் 82-வது பிறந்த நாள் விழா கடந்த மே 26, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் நடந்தது.
இவ்விழாவினை மனோரமாவின் குடும்பத்தினரும், வி.கே.ஆர்.கல்ச்சுரல் அகாடமியும் இணைந்து நடத்தினார்கள். விழாவிற்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
விழாவின் துவக்கத்தில் பழம்பெரும் நடிகரும், பாடகருமான டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் பேத்தியான பிரபா, ‘ஆச்சி’ மனோரமா திரைப்படங்களில் பாடிய சில பாடல்களைப் பாடினார். இதைத் தொடர்ந்து ‘ஆச்சி’ மனோரமா நடித்த படங்களின் தொகுப்பினை திரையில் ஒளிபரப்பினார்கள்.
விழாவில் மூத்த சினிமா பத்திரிகையாளர்களும், சினிமா மக்கள் தொடர்பாளர்களுமான ‘திரை நீதி’ செல்வம், மேஜர்தாசன் இருவருக்கும் ‘மனோரமா விருது’ வழங்கப்பட்டது.
இந்த விருதினை இயக்குநர் கே.பாக்யராஜும், நல்லி குப்புசாமி செட்டியாரும், மனோரமாவின் மகன் பூபதியும் இணைந்து வழங்கினார்கள்.
இந்த விழாவில் நடிகை எஸ்.என்.பார்வதி, ஸ்ரீகவி, எஸ்.சந்திரமௌலி, ஸ்ரீனிவாசன் கண்ணதாசன், மெய் ரூஸ்வெல்ட் ஆகியோர் மனோரமாவைப் பற்றிய
நினைவுகளை வாழ்த்திப் பேசினார்கள்.
“திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் சிறந்து விளங்கும் நகைச்சுவைக் கலைஞர்களுக்கு வருடந்தோறும் ‘ஆச்சி’ மனோரமாவின் பெயரில் தமிழக அரசு விருது வழங்க வேண்டும்.”
“சென்னையில் ஒரு பிரதான சாலைக்கு ‘ஆச்சி’ மனோரமாவின் பெயரை சூட்ட வேண்டும்.”
“ஆச்சி’ மனோரமாவின் அவருடைய திருவுருவச் சிலை ஒன்றினை பொதுமக்கள் திரளாகக் கூடும் ஒரு முக்கிய இடத்தில் தமிழக அரசு நிறுவ வேண்டும்” என்ற மூன்று கோரிக்கைகளை விழாக் குழுவினர் வேண்டுகோளாக முன் வைத்தனர்,
இந்தக் கோரிக்கைகளை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியும், இயக்குநர் கே.பாக்யராஜும் வலியுறுத்திப் பேசினார்கள்.
வி.சுபாஷ்சந்திரன். வி.கே.தமிழரசன் மற்றும் மனோரமாவின் மகன் பூபதி, மருமகள் தனலட்சுமி மற்றும் மனோரமாவின் பேரன் பேத்திகள் அனைவரும் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று கவுரவித்து நன்றி கூறினார்கள்.