தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தேர்தல் வரும் ஜூன் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை, அடையாறு, எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தேர்தல் தொடர்பாகவும், தேர்தல் விதிமுறைகள் பற்றியும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்தவிருக்கும் தேர்தல் அலுவலரான நீதியரசர் பத்மநாபன் தேர்தல் விளக்க அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதன் முழு விபரம் இங்கே :
1. தி செளத் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷனின் 2019-2022-ம் ஆண்டுக்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க 14-05-2019 தேதி நடைபெற்ற சங்கத்தின் அவசர செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தேர்தல் அலுவலருக்குக் கொடுத்த அதிகாரத்தின் கீழ்…
தி செளத் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் அமைப்பின் தேர்தல் வரும் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமையன்று, சத்யா ஸ்டூடியோ (டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி) எண் – 11, 13, டாக்டர் துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028 என்ற முகவரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் நடைபெறும்.
இந்தத் தேர்தல் தி செளத் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷனின் சங்க சட்ட விதிகளின்படி நடைபெறும்.
2. அன்றைய நாளில் கீழ்க்கண்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அந்தந்த பதவிகளுக்குக் கீழே குறிப்பிட்டுள்ளபடி முன் வைப்புத் தொகையினை செலுத்த வேண்டும்.
தலைவர் பதவிக்கு 5,000 ரூபாய், உப தலைவர்கள் இரண்டு பதவிகளுக்கு தலா 1,500 ரூபாய், பொதுச் செயலாளர் பதவிக்கு 2,500 ரூபாய், பொருளாளர் பதவிக்கு 2,500 ரூபாய், செயற்குழு உறுப்பினர்கள் 24 பேருக்கு தலா 500 ரூபாய்.
மேற்கண்ட முன் வைப்புத் தொகையினை வங்கி வரைவோலையாக, கீழே குறிப்பிட்டுள்ள வ.எண்.23-ன் படி செலுத்த வேண்டும். தவறினால் அவர்களது வேட்பு மனு நிராகரிக்கப்படும்.
3. தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தயார் செய்த உறுப்பினர் பெயர் பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே சங்கத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இத்தேர்தலில் போட்டியிடலாம். வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். முன் மொழியலாம். வழி மொழியலாம். வாக்கும் அளிக்கலாம்.
4. தேர்தல் காலத்தில் தேர்தல் அலுவலரின் அலுவலகம் ஜி-1, நந்தா அபார்ட்மெண்ட்ஸ், 21, ஹபிபுல்லா சாலை, தி.நகர், சென்னை-600017 என்கிற முகவரியில் இயங்கும். வேட்பு மனுவினைத் தாக்கல் செய்ய குறிப்பிட்ட நாளிலிருந்து எல்லா நாட்களிலும் விடுமுறை நாட்கள் உட்பட காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் அலுவலகம் இயங்கும்.
5. (அ). தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்களை முன் மொழிபவர்கள் மற்றும் வழி மொழிபவர்கள் அனைவருமே தொடர்ந்தாற்போல் ஏழு ஆண்டுகளுக்கு அதாவது 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் அந்தந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் சந்தா செலுத்தியவராக இருக்க வேண்டு்ம். மேலும், சங்கத்திற்கு எந்தவிதமான பாக்கியும் வைத்திருக்காதவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில், அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படும்.
(ஆ). வேட்பாளர் தனது வேட்பு மனுவுடன் அவரது நிழற் படங்கள் இரண்டினை தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும்.
6. தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்களின் பெயர்கள் தென் சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தயார் செய்து கொடுத்திருக்கும் சங்க உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் இருத்தல் அவசியம். எனவே, சங்க உறுப்பினர்கள் மேற்கண்ட விவரங்களை தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் வந்து பட்டியலைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
7. வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர், தமது முகவரியுடன் அவரது உறுப்பினர் அட்டையில் உள்ள உறுப்பினர் எண்ணை வேட்பு மனுவில் தவறாமல் குறிப்பிட வேண்டும். அதேபோல் வேட்பாளரை முன் மொழிபவரும், வழி மொழிபவரும் தத்தமது உறுப்பினர் அட்டைகளில் உள்ள உறுப்பினர் எண்ணை வேட்பு மனுவில் முகவரியுடன் அவசியம் குறிப்பிட வேண்டும்.
8. வெளியூர்களிலிருந்து வேட்பு மனுவினை பெற விரும்பும் உறுப்பினர்கள், வேட்பு மனு தொகைக்கான ரூபாய் 100-உடன் தபால் செலவிற்காக ரூபாய் 25-ஐயும் கூடுதலாக அனுப்பி வேட்பு மனுவைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தபாலில் அவ்வாறு அனுப்பப்படும் வேட்பு மனு உறுப்பினர்களுக்குக் கிடைக்கப் பெறாவிட்டால், அதற்கு தேர்தல் அலுவலர் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்.
9. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ஜூன் 7-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை, காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரையிலும் தேர்தல் அலுவலகத்தில் 100 ரூபாயினை வங்கி வரைவோலையாக கீழே குறிப்பிட்டுள்ள வ.எண் 23-ன் படி செலுத்தி வேட்பு மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்.
10. பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்களை ஜூன் 8-ம் தேதி காலை 11 மணி முதல் ஜூன் 10-ம் தேதி மாலை 5 மணிவரையிலும் தாக்கல் செய்யலாம்.
11. சென்னை மாநகர எல்லைக்கு வெளியில் இருக்கும் உறுப்பினர்கள் நேரில் வந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்ய இயலாவிடில், ஜூன் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் அலுவலகத்தில் கிடைக்குமாறு தங்களது வேட்பு மனுக்களை தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்ப வேண்டும். குறித்த நேரத்திற்குள் வேட்பு மனுக்கள் வரவில்லையெனில், அவை தேர்தல் கணக்கில் சேர்த்துப் பதிவு செய்யப்பட மாட்டாது.
12. சங்கத்திலிருந்து முறையாகப் பெறப்பட்ட வேட்பு மனுவை தகுதியுள்ள ஓர் உறுப்பினர் முன் மொழிந்து மற்றொரு தகுதியுள்ள உறுப்பினர் வழி மொழிந்து வேட்பாளர் வேட்பு மனுவை கையெழுத்திட்டு ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்ட டெபாசிட் தொகைக்கு வரைவோலையுடன் தாக்கல் செய்ய வேண்டும். ஜூன் 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் டெபாசிட் தொகை செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
13. சங்க விதிப்படி, தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்பு மனுக்கள் ஜூன் 11-ம் தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் முன்னிலையில் அல்லது அவர்களது பிரதிநிதியின் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்படும். அந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது யாருக்கேனும் ஆட்சேபணை ஏதும் இருந்தால் தெரிவிக்கலாம். தேர்தல் அலுவலர் அந்த ஆட்சேபணையைக் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவினை பிறப்பிக்கலாம். அதே நாள் மாலை 4 மணியளவில் போட்டியிட தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியல், தேர்தல் அலுவலகத்தில் இருக்கும் தேர்தல் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.
14. தேர்தலில் இருந்து விலகிக் கொள்ள விரும்புகிறவர்கள் எழுத்து மூலமாக ஜூன் 14-ம் தேதி மாலை 2 மணிக்கு முன்பாக தமது விலகல் கடிதத்தை கையெழுத்திட்டு நேரடியாக தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
15. இறுதியாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஜூன் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.
16. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மாவட்ட சங்கப் பதிவாளர் தயாரித்த வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் பெயர் பட்டியல் குறுந் தகடாக அவர்களது வேண்டுகோளின்படி வழங்கப்படும். வேட்பாளர்கள் தவிர மற்ற உறுப்பினர்கள் 100 ரூபாயை வங்கி வரைவோலையாக செலுத்தி அந்தக் குறுந் தகடினை பெற்றுக் கொள்ளலாம்.
17. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு ஒரு உறுப்பினருக்கு தலா ஒரு வாக்கு உண்டு. உப தலைவர்கள் பதவிக்கு தலா 2 வாக்குகள் உண்டு. செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் 24 வாக்குகள் உண்டு. உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையைவிட அதிகமாக வாக்களித்தால், அந்த ஓட்டு செல்லாத ஓட்டாகிவிடும்.
18. ஒரு உறுப்பினர் 2 பதவிகளுக்கு மேற்படாமல் தனித்தனியாக வேட்பு மனுவினை தாக்கல் செய்யலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாகக் குறிப்பிட்டுள்ள முன் வைப்புத் தொகையினை செலுத்த வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு வேட்பு மனுவினை தாக்கல் செய்து, தேர்தலில் போட்டியிட்டு இரண்டு பதவிகளுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பதவியிலிருந்து அந்த நபர் ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் 15-வது நாள், அவர் இரண்டு பதவிகளையும் இழந்தவராவார்.
19. (அ). சென்னை நகர எல்லைக்குள் வசிக்கும் உறுப்பினர்கள் எதிர்பாராத காரணங்களினால் வாக்களிப்பு தினத்தன்று வெளியூர் செல்ல நேரிட்டால் அக்காரணத்திற்கான சான்றினை காண்பிக்கும்பட்சத்தில், அந்த உறுப்பினருக்கு அவர் குறிப்பிடும் வெளியூர் முகவரிக்கு தபால் அல்லது கொரியர் மூலம் வாக்களிக்க தேர்தல் அலுவலர் வாப்பளிக்கலாம். அம்மாதிரியான வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதோ, நிராகரிப்பதோ தேர்தல் அலுவலரின் முடிவுக்கு உட்பட்டது.
19. (ஆ). சென்னை நகர எல்லை தாண்டி வசிக்கும் அஞ்சல் வாக்கினை செலுத்தும் தகுதி பெற்ற உறுப்பினர்கள் நேரில் வந்து அவர்களது வாக்கினை செலுத்த விரும்பினால், தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அவர்கள் தேர்தல் அலுவலருக்கு மனு அளித்து நேரடியாக தமது வாக்கினை செலுத்தலாம். இந்த மனுவினை அளித்தவருக்கு அஞ்சல் வாக்கு அனுப்பப்பட மாட்டாது.
20. தபால் அல்லது கொரியர் மூலம் அனுப்பப்படும் ஓட்டுக்கள், சங்க முகவரிக்கு ஜூன் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பப்பட வேண்டு்ம்.
21. தேர்தல் தினத்தன்று ஓட்டுப் போட வரும் உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் அலுவலரிடமும், அவரது உதவியாளரிடமும் காண்பிப்பதற்காக அவர்களது புகைப்படம் ஒட்டிய சங்க உறுப்பினர் அடையாள அட்டையைத் தவறாமல் கொண்டு வர வேண்டும். உறுப்பினர்களது அடையாளத்தை யாரேனும் ஆட்சேபிக்கும்பட்சத்தில் உறுப்பினர் அட்டையை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் காண்பிக்க வேண்டும். அல்லது அவரது அடையாளத்தைக் காட்ட அவருடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, அல்லது குடும்ப அட்டை ஆகியவற்றைக் காண்பிக்கும்பட்சத்தில் தேர்தல் அலுவலருக்கும் திருப்தி ஏற்பட்டால் அவரை ஓட்டு போட அனுமதிக்கலாம்.
22. தேர்தல் சம்பந்தமாக தேர்தல் அலுவலர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் தேர்தல் அலுவலரின் முடிவே இறுதியானது.
23. மேற்கண்ட காலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் சம்பந்தமான வேட்பு மனு மற்றும் பிணை வைப்புத் தொகை அனைத்தும் ‘THE SOUTH INDIAN ARTISTES ASSOCIATION’ என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்துக் கொடுக்கப்பட வேண்டும்.
24. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள இரண்டு பேரை, தமது தேர்தல் பிரதிநிதிகளாக ஜூன் 19-ம் தேதிக்கு முன்னர் நியமிக்க வேண்டும்.
25. வாக்குப் பதிவு நடைபெறும் இடத்திலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திலும் உறுப்பினர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் தங்களது செல்போன்களை உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் அந்த செல்போன் கைப்பற்றப்பட்டு தேர்தல் நாளில் மாலை 6 மணிக்கு மேல் அவர்களிடமே திருப்பித் தரப்படும்.
இவண்
நீதியரசர் இ.பத்மநாபன்
தேர்தல் அலுவலர்