கேரளாவில் நடிகை கடந்தப்பட்ட வழக்கினை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை கொலை செய்யப் போவதாக மிரட்டியதாக நடிகர் திலீப் மீதும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதியன்று பிரபலமான மலையாள நடிகையொருவர் கேரளாவில் நடு இரவில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப்பும் 8-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு 84 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது எர்ணாகுளத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் சமீபத்தில் திலீப்பிற்கு எதிராக கொடுத்த வாக்குமூலம் வழக்கின் திசையை திருப்பிப் போட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரிகளை லாரி ஏற்றி கொலை செய்யப் போவதாக மிரட்டும் ஒரு ஆடியோவையும் பாலச்சந்திர குமார் வெளியிட்டார்.
இதையடுத்து நடிகர் திலீப் மற்றும் 5 பேர் மீது கேரள போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் திலீப்பை ஏ-1 குற்றவாளியாக ஆக்கி உள்ளனர். மேலும், அவரது சகோதரர் அனூப் மற்றும் அவரது சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை கடத்தப்பட்ட வழக்கு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இப்போது இப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் திலீப்.
தற்போது இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார் திலீப்.