சினிமாவில் 18 வயதுக்கு குறைவான பெண்கள் நடிப்பதற்கு தடை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் எல்.முத்துச்செல்வி ஒரு பொது நலன் மனுவை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருந்தது இதுதான் :
“நான் சட்டம் படித்து விட்டு ஆசிரியையாக பணியாற்றுகிறேன். சமீபகாலமாக சினிமாப் படங்களில் 18 வயதுக்கு குறைவான சிறுமிகளை நடிகையாக காட்டுவது வழக்கமாக உள்ளது. இந்த வயதில் உள்ள சிறுமிகளுக்கு சினிமாத் துறையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றித் தெரியதில்லை.
அவர்களை கவர்ச்சியாக காட்டுவது அவர்களை மேலும் பாதிப்படையச் செய்வதாக உள்ளது. சிறுவர்கள் நீதிச் சட்டப்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறுமிகள் என்று கூறுகிறது.
சிறுமிகள், குழந்தைகள் ஆகியோர், அனைத்து விதமான பாதிப்புகளிலும் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அவர்களுக்கான உரிமையாக உள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சிறுமியை நடிகையாக சினிமா தயாரிப்பாளரோ அல்லது இயக்குனரோ அறிமுகம் செய்வது, சிறுமிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்களோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
சிறு வயதில் உள்ள சகஜ நிலையை யாருக்கும் மறுக்கக் கூடாது. குழந்தைகளுக்கான தேசிய சாசனத்தின்படி, சிறுவர்களின் வயதுக்கு மீறிய மற்றும் அவர்களின் வலிமையைத் தாண்டிய தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது.
அந்த சாசனத்தின்படி அவர்களுக்கு சுதந்திரமும், மரியாதையும், பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பும் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் 16 வயதுக்கு முன்பாகவே சிறுமிகள், பெரிய பெண்ணாக நடிக்கத் தொடங்கிவிட்டனர். சில சிறுமிகளுக்கு ‘கால்ஷீட்’ தரப்பட்டு கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அவர்கள் பெரியவர்கள் போல் நடிக்க வற்புறுத்தப்படுகின்றனர். இது அந்த சிறுமியின் சகஜ நிலையை பெரிதும் பாதிக்கிறது.
இது போன்ற நடிகைகளில் துளசி, லட்சுமி மேனன், சந்தியா, கார்த்திகா ஆகியோர் சினிமாப் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அவர்கள் பெரியவர்களாகவில்லை.
இது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிறுமி மைனர் நிலையில் இருப்பதால் சினிமா தயாரிப்பாளர், இயக்குனருடன் ஒப்பந்தங்களை செய்ய முடியாது. வளர் இளம் பருவத்தில்தான் மனநிலை, உடல் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படும்.
எனவே இந்த வயதில் அவர்கள் உடல் ரீதியாக மற்றவர்களால் பயன்படுத்தப்படும் பயமும் உள்ளது. இந்த வயதில் அவர்களை எளிதாக தவறான வழியில் பயன்படுத்தலாம். எனவே அவர்களும் தவறான முடிவுகளை எடுத்து விடக்கூடும்.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள், வன்முறைகள் துரிதமாக அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சினிமாக்களில் சிறுமிகளை நடிக்க வைப்பது, எரிகிற விளக்கில் எண்ணெயை ஊற்றுவதுபோல் உள்ளது.
21 வயதுக்கு மேற்பட்ட பெண்களைத்தான் கதாநாயகியாகவோ மற்ற நடிகையாகவோ நடிக்கச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் நல்லது, கெட்டதை அவர்களால் கணித்து செயல்பட முடியும்.
சிறிய வயதிலேயே பெரியவர்களைப் போல் நடிக்கச் செய்வதால், அவர்கள் உடல் மற்றும் மனதளவில் பாதிப்படைவதோடு, குழந்தைப் பருவத்தையும், கல்வி உரிமையையும் இழக்கின்றனர். பெண்களை அநாகரீகமாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டத்தின்படி, அவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. உதட்டோடு உதடு சேர்க்கும் காட்சிகளில் அவர்கள் நடிக்க வைக்கப்படுகின்றனர்.
எனவே சிறுமிகளை அநாகரீகமாக சித்தரிப்பது உடனே தடுக்கப்பட வேண்டும். சிறுமிகள் கவர்ச்சியாக காட்டப்படுவதை தடுப்பதோடு, பெரிய பெண்ணாகுவதற்கு (மேஜர்) முன்பு சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
சிறுமியாக இருக்கும்போது கதாநாயகியாக நடிக்கச் செய்தாலோ, சினிமாவில் சிறுமியை ஒப்பந்தம் செய்தாலோ, அப்படிப்பட்ட படங்களுக்கு சான்றிதழ் தரப்படாது என்பதை சட்டமாக்க வேண்டும்.
இது சம்பந்தமாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர் கவுன்சில் ஆகியோருக்கு மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சினிமாவில் பெரியவர்கள் வேடத்தில் சிறுமிகள் நடிக்கும் விவகாரத்தில், வயது வரம்பை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி, ‘‘சமுதாயத்தில் ஒரு விஷயத்தில் பலருக்கும் பலவிதமான கருத்துகள் உண்டு. நீங்கள் கூறுவது உங்கள் கருத்து. ஆனால் நடிப்பதில் தடை செய்வதற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை’’ என்றார்.
சில நிமிட விவாதத்துக்குப் பிறகு மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரரின் வக்கீல் கூறினார். அதைத் தொடர்ந்து அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.