A-1 (Accused No-1) – சினிமா விமர்சனம்

A-1 (Accused No-1) – சினிமா விமர்சனம்

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ்நாராயணன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக தாரா அலிசா பெரி நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், உமா பத்மாபன், மீரா கிருஷ்ணன், சாய் குமார், மொட்டை ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், தங்கத்துரை, கிங்ஸ்லி, மாறன், யாட்டின் கார்யேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், சண்டை இயக்குநர் – ஹரி தினேஷ், இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – லியோ ஜான் பால், நடன இயக்கம் – கல்யாண், சாண்டி, கலை இயக்கம் – ராஜா, மக்கள் தொடர்பு – யுவராஜ், எழுத்து, இயக்கம் – கே.ஜான்சன்.

இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் எஸ்.பி.சவுத்ரி  வெளியிட்டுள்ளார்.  

நாயகி ‘திவ்யா’ என்னும் தாரா அலிசா பெரி, அய்யங்கார் வீட்டுப் பெண். அவருடைய தந்தையான ‘ஆனந்தராமன்’ என்னும் யாட்டின் கார்யேகர் தமிழகத்திலேயே நேர்மையான அதிகாரி என்ற பெயரைப் பெற்றவர். ஆனால் தீவிரமான அய்யங்காராக வாழ்பவர். தன்னுடைய மருமகனும், தன்னுடைய ஜாதிக்காரராகவே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

நாயகி திவ்யாவுக்கு ‘தளபதி’ ரஜினியைப் போல தைரியமான, அடிதடிகளுக்குப் பயப்படாத ஒருவன்தான் தனக்கு மணாளனாக வேண்டும் என்ற ஆசை. ஆனாலும் அந்த மணாளனும் அய்யங்காராத்து அம்பியாகத்தான் இருக்க வேண்டும் என்றும் பெரிய ஆசை. இப்படியொரு ஒன்று சேராத ஆசைகளுடன் தனக்கான மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கிறாள் திவ்யா.

நெற்றியில் நாமத்தைப் போட்டுவிட்டு தனது அப்பாவின் விரத்தை முடிக்க பெருமாள் கோவில் தீர்த்தத்தை வாங்குவதற்காக கோயிலுக்கு வரும் நாயகன் சரவணன் என்னும் சந்தானம், செட்டப் ரவுடித்தனம் என்பது தெரியாமல் நடுரோட்டில் நாயகி திவ்யாவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் சில பெரிசுகளை அடித்துத் துரத்துகிறார்.

இதைப் பார்த்த நாயகிக்கு சந்தானத்தின் மீது உடனேயே லவ்வாகிவிடுகிறது. இதை நாயகன் நம்பாமல் போக உடனே பக்கென்று லிப் டூ லிப் கிஸ் அடித்து தனது காதலைத் தெரிவித்து விடுகிறார் நாயகி. இதை எதிர்பார்க்காத நாயகனும் ஒரு டூயட்டை பாடிவிட்டு தீர்த்தத்தை வாங்காமல் காதலை வாங்கிவிட்டு தன் வீட்டுக்குப் போகிறார்.

ஆனால், அடுத்த நாளே சந்தானம் “நம்மவா இல்லை.. பீச் பக்கம் இருக்கும் வேறொரு சாதியைச் சேர்ந்தவர்..” என்பது நாயகி தாராவுக்குத் தெரிய வர.. சந்தானத்தைத் தேடி வந்து “நம்ம காதல் பிரேக் அப் ஆயிருச்சு” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

சில நாட்கள் கழித்து நாயகி தாராவின் அப்பா திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் நடுரோட்டில் மயங்கி விழுக.. அவரை உடனேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றுகிறார் சந்தானம். இதையறிந்த நாயகிக்கு மீண்டும் சந்தானம் மீது காதல் பிறக்கிறது.

இந்தக் காதலை நம்பி சந்தானம் தனது தாய், தந்தையை அழைத்துக் கொண்டு நாயகியின் வீட்டுக்கு பெண் கேட்டுச் செல்கிறார். ஆனால் நாயகியின் தந்தையோ இவர்களை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இதனால் இப்போது காதல் இரண்டாவது முறையாக பிரேக் அப் ஆகிறது.

தனது அப்பாவுக்கு தமிழகம் முழுவதும் இருக்கும் நல்ல பெயரை எடுத்துச் சொல்லி அவரை புனிதராக்கும் நாயகி, “அவரை ஒரே ஒரு நாள் கெட்டவரா காட்டிரு.. நான் உனக்குக் கழுத்தை நீட்டுறேன்…” என்று தைரியமாக சந்தானத்திடம் சவால் விடுகிறார்.

அன்றைய இரவில் சரக்கடித்துவிட்டு தனது காதல் தோற்றுப் போனதைப் பற்றிப் புலம்பில் தள்ளும் சந்தானம் “அந்த ஆளை கெட்டவரா காட்டுறதைவிட ஆளையே போட்டுத் தள்ளிட்டால் என்ன.. நானே செய்றேன்.. நானே அந்தாளை கொலை செய்யப் போறேன்.. நண்பர்கள் நீங்களெல்லாம் இருந்து என்ன புண்ணியம்.. ஓசில குடிக்குறதுக்குத்தாண்டா என்னைய தேடி வர்றீங்க..?” என்றெல்லாம் பேசி நண்பர்களையும் உசுப்பி விடுகிறார் சந்தானம்.

பேசி முடித்துவிட்டு சந்தானம் மட்டையாகிவிட.. அவருடைய நண்பர்கள் குடிபோதையில் வீராவேசமாக எழுந்து செல்கிறார்கள். சந்தானம் தூண்டிவிட்ட கோபத்தில் அன்றைய விடியற்காலையில் வழக்கம்போல வாக்கிங் போக வந்த நாயகியின் அப்பாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயல்கிறார்கள் நண்பர்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பில் இருந்து கொண்டு விஷ மருந்து பாட்டில், அவசரத்தில் மயக்க மருந்தாகிவிட்டதால் நாயகியின் தந்தை மயங்கி சரிகிறார்.

ஆனால், அவர் இறந்துவிட்டார் என்று நினைத்து நண்பர்கள் சந்தானத்திடம் ஓடி வந்து நட்புக்காக நாயகியின் தந்தையை தாங்கள் கொலை செய்துவிட்டதாகச் சொல்ல.. சந்தானம் அதிர்ச்சியாகிறார்.

அடுத்து என்ன நடக்கிறது..? சந்தானத்தின் காதல் ஜெயித்ததா..? கல்யாணம் நடந்தேறியதா.?. என்பதுதான் இந்தப் படத்தின் தொடர்ச்சியான திரைக்கதை.

‘இனிமே இப்படித்தான்’, ‘சக்கப் போடு போடு ராஜா’ படங்களின் தோல்விக்குப் பிறகு சந்தானம் தன்னைத் திருத்திக் கொண்டு, இப்போதுதான் உருப்படியாய் ஒரு படம் கொடுத்திருக்கிறார்.

அவர் எப்போதும் காமெடி நடிகர்தான். ஆனால் தன்னை மாஸ் நடிகராகக் காட்ட விரும்பி நடித்த படங்கள்தான் தோல்வியைத் தழுவியிருக்கிறது. இப்போதாவது அவருடைய பலம் என்ன என்பதை அவர் புரிந்து கொண்டால் சரி.

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஏதோ ஒரு வகையில் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இதுதான் துவக்கக் காட்சிக்குப் பின்பு அடுத்தடுத்த காட்சிகளுக்கும் ரசிகர்களை வரவழைத்து நேற்றைய தினத்தின் 4 காட்சிகளையும் ஹவுஸ்புல்லாக்கியிருக்கிறது.

சந்தானம் வழக்கம்போல தனது ஒன் லைன் பன்ச் வசனங்களாலேயே சிரிக்க வைக்கிறார். கூடவே பிரமாதமான இயக்கமும் சேர்ந்து கொள்ள.. சிரிப்பு தானாகவே வருகிறது. வசனங்களில்கூட முதிர்ச்சியான வசனங்கள்  சந்தானத்தின் பட வரலாற்றிலேயே இந்தப் படத்தில்தான் அதிகமாக இருக்கிறது. முந்தைய படங்களில் அதிகமாக இருந்த உடல், உருவ ஒற்றுமைகளைக் குறிக்கும் வசனங்கள் இதில் குறைவே. அதேபோல் தான் மட்டுமே நகைச்சுவையை வழங்காமல் உடன் நடிக்கும் அனைவருக்கும் வாய்ப்பளித்து பகிர வைத்துள்ளார் சந்தானம்.

நாயகி தாராவுக்கு இதுதான் முதல் படம். ஆனாலும் மிகச் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அய்யர் பாஷையைக்கூட தெளிவாக பேசும் அளவுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். அழகாகவும் இருக்கிறார். இதில் நடிப்புக்கு மிகப் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் குறைவில்லாமல் நடித்திருக்கிறார் தாரா. பாராட்டுக்கள்.

எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம்போல நடிப்பில் தனது தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார். நாயகியின் வீட்டில் இன்ஸ்பெக்டர் சாய்குமாரிடம் போதையில் உளறும்போது எழும் காமெடியை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இது போன்ற காட்சிகளில் பொதுவாக நகைச்சுவை வராது. ஆனால் இதில் எம்.எஸ்.பாஸ்கரால் கிடைத்திருக்கிறது.

சந்தானத்தின் நண்பர்களாக நடித்திருக்கும் மாறன் அண்ட கோ-வினரின் ஒன் லைன் காமெடி அவ்வப்போது குபீர் சிரிப்புக்களை வாரி வழங்குகிறது. பேசக் கூடாது என்று சபதம் எடுத்த நண்பர்களை வெளிநாட்டு சரக்கு என்று சொல்லி பாட்டில்களை காட்டி பேச வைப்பதும், அதையே அடுத்த செகண்ட்டில் உடைத்து அதை இன்னும் அதிக நகைச்சுவையாகவும் மாற்றியிருக்கிறார் இயக்குநர்.

இதேபோல் சாவு வீட்டில் இவர்கள் மூவரும் செய்யும் அலப்பறையும், பயந்து சாகும் தொடர் காட்சிகளும் சாவு வீடு என்பதையும் தாண்டி சிரிக்க வைத்திருக்கிறது.

உமா பத்மநாபன், மீரா கிருஷ்ணன் இருவரும் வழக்கமான அம்மாக்களை போல மகன், மகளை கண்டிப்பதற்கும், அப்பாக்களை சமாளிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சாவு வீட்டிலும் ஒரு காமெடியாக நடிகர் சேஷூ செய்யும் அலப்பறை இன்னொரு பக்கம் கை தட்டலை அள்ளுகிறது.  செத்தப் பொணத்துக்கு கொசு கடிக்குமே என்றெண்ணி கொசுவர்த்தி சுருளை அவர் கொளுத்தி வைக்கும்போது வெடிச் சிரிப்பாகிறது. இதேபோல் அவரிடமிருந்து கத்தியை பிடுங்கிக் கொண்டு வாழைப்பழத்தை சந்தானம் அண்ட் கோ தருவதும்.. அதை வைத்து அவர் சாய்குமாரை குத்துவதும் செம கலகலப்பு..!

சாய்குமார் திடீர் என்ட்ரியாகிறார். கடைசி நேர டிவிஸ்ட்டுக்கு அவர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

உச்சக்கட்டமாய் நல்லவரான நாயகியின் தந்தையைத் தேடி அவருடைய ‘கீப்’புகள் வரிசையாய் வந்து ஒப்பாரி வைப்பதும், இதைப் பார்த்து மற்றவர்கள் திகைப்பதும் மரண காமெடிகளில் ஒன்று..!

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்துமே அழகாகத்தான் தெரிகிறது. நாயகியை இதைவிடவும் அழகாகக் காட்டிவிட முடியாது. பிரமாதம்.. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏதோ கேட்கும் ரகம். பாடல்களையெல்லாம் யார் கேட்டார்கள்.? இது போன்ற நகைச்சுவை காட்சிகளில் அதுவும் தேவையில்லாத ஒன்றாகவே தெரிகிறது.

எல்லாம் இருந்தும், எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறைகிறதே என்பார்களே.. அது போல இந்தப் படத்தின் மிகப் பெரிய குறையே படத்தில் அய்யர் சமூகத்தினரை கிண்டல் செய்திருப்பதுதான்.

இப்படி ஒரு சமூகத்தினரை தொடர்ந்து கிண்டல் செய்வது இப்போதைய நிலைமையில் தமிழகத்திற்கும், தமிழ்ச் சினிமா துறைக்கும் நல்லதல்ல. அய்யர் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று நாயகி விரும்புவதையே சந்தானத்தின் சொந்த ஜாதியான ‘வன்னியர் மாப்பிள்ளைதான் வேண்டும்’ என்று மாற்றி வைத்திருக்கலாமே..?! எதற்கு அடுத்த சாதியை வம்புக்கு இழுப்பானேன்..?

நம்மைப் போலவே அவர்களும் மனிதர்கள்தான்.. அவர்களுக்கும் தனி பழக்க, வழக்கங்கள் உண்டு என்பதை உணர்ந்து அடுத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கக் கற்றுக் கொண்டால் அனைவருக்கும் நல்லது.

ஊரே மெச்சும் மனிதர்.. மீடியாவே கொண்டாடும் மனிதர்.. மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குபவர்.. சொந்த வாழ்க்கையில் அயோக்கியராக இருக்கிறார் என்பதை எதற்காக காட்ட வேண்டும்..? ஏன் காட்ட வேண்டும்..? இப்படியே செய்தால் நாளைக்கு நமது சமூகத்தில் சில சிறந்த, எளிய மனிதர்களைக்கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கும் கட்டாயம், இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும். நகைச்சுவைக்குத்தான் என்றாலும் ஒரு அதில் அளவு வேண்டாமா இயக்குநரே..?

இதோடு கடைசியாக ‘சொல்வதெல்லாம் உண்மை’ டைப்பில் புவனேஸ்வரியை அழைத்து பஞ்சாயத்து செய்ய வைத்து.. அவருக்கே 2 கணவர்கள் என்று சொல்லி கதையை மாற்றிப் போட.. சிரிப்புதான் வருகிறது என்றாலும் இந்தப் பஞ்சாயத்தை நிஜத்தில் செய்து வரும் நடிகைகளுக்கு இது மிகப் பெரிய மன வருத்தத்தைத் தரும்..! இவைகளையெல்லாம் முற்றிலும் தவிர்த்திருக்கலாம் இயக்குநரே..!

வெறும் 108 நிமிடங்களில் இந்தப் படத்தை முடித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் காட்சிகளை விரிவாக்கி வைத்திருக்கலாம்.

இயக்குநருக்கு நல்லதொரு நகைச்சுவை உணர்வும், காட்சிகளை வடிவமைக்கும் திறனும், படைப்பாற்றலும் இருக்கிறது. இன்னும் அவர் அதிகப் படங்களை இயக்கலாம். இயக்க வேண்டும்.

தனது நாயக பிம்பத்தை மனதில் வைத்துக் கொள்ளமல் கதையையும், நகைச்சுவையையும் மட்டுமே நம்பி சந்தானம் இனிமேல் இதுபோல் களமிறங்கினால் வெற்றிகள் தொடர்ந்து கிட்டும்.

‘ஏ-1’ – சிரிக்க வைத்து அனுப்புகிறார்கள். சென்று வாருங்கள்..!

Our Score