full screen background image

“கென்னடி கிளப்’ படத்தில் நான் நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறேன்” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு.

“கென்னடி கிளப்’ படத்தில் நான் நடிக்கவில்லை; வாழ்ந்திருக்கிறேன்” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு.

‘கென்னடி கிளப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினர்களுடன் திரைத் துறையைச் சேர்ந்த பல்வேறு சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர். 

இயக்குநர்கள் அகத்தியன், S.D.சபா, எழில், லெனின் பாரதி, ராம் பிரகாஷ், தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டு படக் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

viveka

விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசும்போது, “வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் சுசீந்திரன். கபடி விளையாட்டை முன்னிறுத்தும் படமாகவும், வறுமை பூசிய எளிய மனிதர்களின் வாழ்வு, பெண்களின் முன்னேற்றம் போன்ற வலிமையான கருத்துகளை கூறும் படமாகவும் இந்தக் ‘கென்னடி கிளப்’ திரைப்படம் இருக்கும், இமான் மிகச் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார். ஜாம்பவான் பாரதிராஜா இப்படத்தில் இருப்பது படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்…” என்றார்.

agathiyan

இயக்குநர் அகத்தியன் பேசும்போது, “கபடியை மையமாகக் கொண்டு இயக்குநர் சுசீந்திரன் இரண்டாவது படம் இயக்கியிருப்பது மகிழ்ச்சி. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு கபடிதான் எனது பிரதான விளையாட்டு. பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. என் பெண் இப்படம் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமாகிறார். இதனால் எனக்கும் இப்படத்தின் மூலம் பெருமை கிடைத்திருக்கிறது..” என்றார்.

_MG_7890

தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பேசும்போது, “சமுதாயத்தில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் மிகவும் குறைவு. 30 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் எல்லாவற்றுக்கும் தயங்கிக் கொண்டே இருப்பார்கள். இன்று சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். பல வெற்றிப் படங்களை இயக்கிய சுசீந்திரனுக்கு இந்த படத்தின் வெற்றி சாதாரணமாகத்தான் இருக்கும்..” என்றார்.

இயக்குநர் எழில் பேசும்போது, “இயக்குநர் சுசீந்திரனைப் பற்றிக் கூறவேண்டுமானால் சினிமா வெறி பிடித்த மனிதர் என்று கூறலாம், அவருடைய முதல் படத்தைப் பார்த்துவிட்டு மிரண்டு போனேன். பாரதிராஜாவை பார்க்கும்போது விளையாட்டு வீரராகத் தோன்றுகிறது. மேலும் இப்படத்தைப் பார்க்கும் போது அனைவருக்கும் முக்கியமானதொரு படமாக தோன்றுகிறது. இமான் சிறந்த இசையைக் கொடுத்திருக்கிறார்…” என்றார்.

_MG_8041

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழி சார்ந்து பாரம்பரியமிக்க கபடி விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். டி.இமானை தமிழ் சினிமா இசையின் செல்லப் பிள்ளை என்றே கூறலாம். அந்த அளவுக்கு அவருடைய இசைதான் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் இயக்குநர் சுசீந்திரனுக்கு ஒரு வெற்றிப் படமாக அமையும்…” என்றார்.

meenakshi

படத்தின் நாயகியான மீனாட்சி பேசும்போது, “இயக்குநர் சுசீந்திரனிடம் கடின உழைப்பு போன்று பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். தேர்வு இல்லாமல்தான் என்னை தேர்ந்தெடுத்தார் சுசீந்திரன். அதுபற்றி அவரிடம் கேட்கும்போது ‘உன் மேல் நம்பிக்கை வைத்துதான் உன்னைத் தேர்வு செய்தேன்’ என்றார். சசிகுமார் ஸார் மிக நல்ல பயிற்சியாளர். எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். படப்பிடிப்பு நடைபெற்ற ஒட்டன்சத்திரம் ஊரை என்னால் மறக்கவே முடியாது…” என்றார்.

d.imaan

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, “இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றுவதில் இது எனக்கு 7-வது படம். இத்தனை படங்களிலும் எங்களுடைய உறவு கெடாமல் இருப்பது இருவருக்கும் உள்ள புரிதல்கள்தான். ஒவ்வொரு படங்களிலும் அடித்தளத்தை தெளிவாக அமைத்துக் கொடுப்பார் சுசீந்திரன்.

விவேகாவும் பாடல் வரிகளை சிறப்பாக எழுதியிருந்தார். மேலும், பின்னனி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக ‘கென்னடி கிளப்’ இருக்கும். சசிகுமாரின் கதாபாத்திரம் முதல் பார்வை போஸ்டரிலேயே நன்றாக இருக்கும் என்ற தெரிந்தது. பாரதிராஜா இருந்தாலே அங்கே ஒரு காந்த அலைகள் இருக்கும்..” என்றார்.

IMG_7934

கபடி வீராங்கனை ஜீவா பேசும்போது, “கபடி மட்டும்தான் எங்களுக்கு விளையாட தெரியும். சினிமா எங்களுக்கு புதியது. இருப்பினும் இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் பாரதிராஜா, சசிகுமார் மற்றும் படக் குழுவினர்கள் அனைவரும் எங்களுக்கு ஊக்கம் கொடுத்து நடிக்க வைத்தார்கள்…” என்றார்.

கபடி பயிற்சியாளர் செல்வம் பேசும்போது, “எங்களுடைய ஒவ்வொரு போட்டிக்கும் நல்லுசாமி தவறாமல் கலந்துக் கொள்வார். அங்கே எங்கள் பெண்கள் படும் துயரங்களைப் பார்த்து இதை ஒரு படமாக எடுக்க வேண்டும் கூறினார். அதை இப்போது செய்து காட்டியிருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்..” என்றார்.

suseendhiran

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் நாங்கள் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. என் அப்பாவிற்கு விளையாட்டு பிடிக்கும். அதை வைத்து படமெடுக்க வேண்டும் என்றுதான் ‘வெண்ணிலா கபடி குழு’ எடுத்தேன்.

இந்தப் படத்தில் என் அப்பா கேரக்டரில் நடித்தற்காக இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களைக் கொடுத்து விடுவேன். அதை ஒரே முறையில் நடித்து விடுவார். அவர் நடிப்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சசிகுமாரிமிருந்து 9 புது இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். டி.இமானிடம் எனக்கு பிடித்தது நேரம் தவறாமை. விவேகா நன்றாக பாடல் எழுதியிருக்கிறார்கள்.

ராஜபாண்டி இப்படம் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார். உதவி இயக்குநர்களுடைய கடின உழைப்பு இப்படத்தில் இருக்கிறது. கலை இயக்குநர் சேகருடன் இது எனக்கு மூன்றாவது படம். நாங்கள் நினைத்த படத்தைப் பிடிவாதமாக எடுத்திருக்கிறோம்.

ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படம் வெளியாகிறது. இப்படம் எங்களுடைய குடும்ப படமாக இருந்தாலும் என் தம்பி தயாரிப்பாளராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.

IMG_8000

இயக்குநர் சசிகுமார் பேசும்போது, “ இந்தக் ‘கென்னடி கிளப்’ படத்தின் நாயகன் நான் இல்லை. இப்படத்தில் நடித்திருக்கும் நிஜ கபடி வீராங்கனைகள்தான் நாயகர்கள். கபடி பயிற்சியாளர் செல்வமாகத்தான் நான் நடித்திருக்கிறேன். நல்லுசாமியாக பாரதிராஜா சார் நடித்திருக்கிறார். கபடியில் வென்றால்தான் வேலைவாய்ப்பு, வாழ்க்கை எல்லாமே அமையும் என்றுதான் கபடி வீரர்களும், வீராங்கனைகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பல போட்டிகளில் வென்றிருக்கிறார்கள். 

இப்படத்தின் கதையை சுசீந்திரன் கூறும்போது பெண்களுக்காகவே இப்படத்தை நிச்சயம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இம்மாதிரி படங்களில் நான் நிறைய நடிப்பேன். பாரதிராஜாவுடன் நடிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவரை சுசீந்திரன் அழகாக கையாண்டார். எல்லோருடனும் இணைந்து நடித்தது இயல்பாக, சுலபமான அனுபவமாக இருந்தது. டி.இமானின் இப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும். இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்…” என்றார்.

bharathiraja

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசும்போது, “நல்ல கலைஞர்களை… வளர்கின்ற கலைஞர்களை ஊக்கப்படுத்தவில்லையென்றால் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை.

சுசீந்திரன் மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்கு நல்லுசாமி கொடுத்து வைத்தவர். இதற்கு முன்பு சுசீந்திரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், இப்படத்தில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்படத்தில் எனக்கு நடித்த அனுபவமே இல்லை. சினிமா என்றால் என்னவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் இப்படத்தில் நடித்ததாகவே தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்தப் பெண்களுக்கு நன்றி கூற வேண்டும்.

இது சினிமா அல்ல. தென் தமிழகத்தின் மண்ணின் வாழ்க்கை. அதில் பெரும்பங்கு நல்லுசாமிக்கு இருக்கிறது. இப்படத்தில் நல்லுசாமியாகத்தான் நான் நடித்திருக்கிறேன்.

சசிகுமாரை பார்க்கும்போது அவர் முகத்தில் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் அவருடைய முகம் பிடிக்கும். அவருடன் நெருங்கி பழகும்போதுதான் அவர் இன்னும் குழந்தையாக இருக்கிறார் என்று தெரிகிறது.

இப்படத்தை தொழிற் சார்ந்த படமாக இல்லாத வண்ணம் சிறப்பாக இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். நானும் டி.இமானும் ஒரு படத்திற்கு இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் அப்படம் நின்று விட்டது. அவர் உடம்பைக் குறைத்து திறமையை வளர்த்துக் கொண்டார்.

படத் தொகுப்பாளர் ஆண்டனி பணியாற்றிய பல படங்களை பார்த்திருக்கிறேன். மிகவும் திறமையானவர். லெனின் பேசும்போது, ‘நான் அதிகம் பேசவில்லை. பேசினால் பிரச்னை வரும்’ என்று கூறினார். பேசினால் பிரச்னை தீரும். ஆகையால் பேச வேண்டும். நான் துணை நிற்கிறேன். தயங்காமல் பேசு லெனின். உன்னுடன் சமீபத்தில் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனக்கு அம்பானிபோல் வசதியாக வாழ விருப்பமில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குநர் பாரதிராஜாவாகவே பிறக்க விரும்புகிறேன்…” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா கபடி வீராங்களைகளுக்கு பரிசாகப் பதக்கங்களை வழங்கினார்.

Our Score