full screen background image

“சட்டப்படி சந்தி்ப்பேன்…” – நடிகர் சங்க நீக்கம் பற்றி சரத்குமார் அறிக்கை..!

“சட்டப்படி சந்தி்ப்பேன்…” – நடிகர் சங்க நீக்கம் பற்றி சரத்குமார் அறிக்கை..!

“நடிகர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன். இது குறித்து எனது ரசிகர்களும், தொண்டர்களும் பதற்றம் கொள்ள வேண்டாம்..” என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

நேற்று சென்னை தி.நகர், நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூ்டடத்தில் சங்கத்தில் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டி முந்தைய நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி இருவரும் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பொதுக்குழு ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தியை அறிந்தவுடன் நடிகர் சரத்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்திருக்கிறது என்று கூறியிருப்பது விதிகளின்படி சரியானதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, அந்த கூட்டத்தின் வாயிலாக எங்களை நிரந்தரமாக நீக்கியிருக்கிறோம் என்று கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தற்காலிக நீக்கம் செய்திருப்பதை எதிர்த்து நாங்கள் தொடுத்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, நிரந்தர நீக்கம் என்று கூறுவது சட்டத்திற்கு உட்பட்டதல்ல.

என்னை இன்று தொடர்பு கொண்டு தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும் இயக்கத்தின் சகோதர, சகோதரிகளுக்கும் நன்றி.

அவர்களின் இந்த தன்னிச்சையான முடிவை சட்டத்தின் வாயிலாக நீதி மன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம்.

எனவே எனது அன்புக்கினிய ரசிகர்களும், தொண்டர்களும் எந்த ஒரு பதற்றமும் கொள்ளாமல் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்..” என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தங்களை தற்காலிகமாக சங்கத்தில் இருந்து நீக்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரத்குமாரும், ராதாரவியும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சரத்குமார், ராதாரவி இருவரும் நிரந்தரமாகவே சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட செய்தியை நீதிபதியிடம் சரத்குமார், ராதாரவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து நிரந்தர நீக்கத்திற்கு எதிராக புதிய மனுவை தாக்கல் செய்யும்படி சொல்லி, பழைய மனுவை பைசல் செய்து தீர்ப்பளித்தார் நீதிபதி.

இதனால் சரத்குமாரும், ராதாரவியும் சங்கத்தின் நிரந்தர நீக்கத்தை எதிர்த்து புதிதாக மீண்டும் ஒரு வழக்கை விரைவில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Our Score