‘அப்சலூட் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் மால்காம் தயாரித்துள்ள புதிய படம் ‘அதி மேதாவிகள்.’
இந்தப் படத்தில் சன் மியூசிக் சேனலின் காம்பியரான சுரேஷ் ரவி ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் முன்னணி கதாபாத்திரங்களிலும், தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, மது (கோலி சோடா) மற்றும் ‘மாரி’ படப் புகழ் கல்லூரி வினோ முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
பாலசுப்ரமணியனின் உதவியாளர் விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.இசை பள்ளியில் இருந்து உதயமான ஆதித்யா – சூர்யா இசையமைப்பாளர்களாகவும், கெத்து படப் புகழ் தினேஷ் பொன்ராஜ் படத் தொகுப்பாளராகவும் இந்த ‘அதி மேதாவிகள்’ பணியாற்றி வருவது மேலும் சிறப்பு. புதுமை இயக்குநரான பாக்யராஜின் உதவியாளரான டி.ரஞ்சித் மணிகண்டன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
மருத்துவம், என்ஜினீரிங், கலை, சட்டம் என மாணவர்கள் பல்வேறு துறைகளில் நமது கல்வி துறை பிரிந்திருந்தாலும், அவர்கள் அனைவரையும் ‘அரியர்ஸ்’ என்ற ஒரு சொல்லே இணைத்துவிடுகிறது. இந்த ‘அரியர்ஸ்’ என்கிற விஷயத்தை மையமாக கொண்டுதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
தமிழ் திரையுலகில் முதல் முறையாக ‘பிரை-காம்’ (நட்பும், நகைச்சுவையும் கலந்த பாணியில்) என்னும் புத்தம் புதிய கதைக் களத்தையும் இந்தப் படத்தின் மூலம் காணலாம்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரஞ்சித் மணிகண்டன், “அரியர்ஸ்’ என்ற வார்த்தையை மாணவர்கள் வெறுத்தாலும், அதோடுதான் பெரும்பாலான மாணவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மையமாக கொண்டுதான் எங்களின் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
கல்லூரி பருவத்தில் ‘அரியர்ஸ்’ என்ற சொல்லை கடந்து வராத மாணவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒரு மாணவனின் தரம் என்ன என்பதை அவன் வைத்திருக்கும் அரியர்ஸ் எண்ணிக்கையை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்ற தவறான கருத்து, சமுதாயத்தில் பரவி வருகின்றது. கோல்ட் மெடல் வாங்கிய மாணவர்கள் எல்லாம் உயர்ந்த பதவியிலும் இல்லை. அரியர்ஸ் வைத்த மாணவர்கள் எல்லாம் தாழ்ந்த பதவியிலும் இல்லை. மக்கள் மத்தியில் பரவி இருக்கும் இந்த தவறான கருத்து, நடுத்தர மாணவர்களின் வாழ்க்கையில் எப்படி இருக்கும்..?
விக்ரம் – சுஜி ஆகிய இருவரும் என்ஜினீயரிங் படித்து வரும் மாணவர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருக்கும் அரியர்ஸ் பேப்பர்களை எப்படி கிளியர் செய்கிறார்கள் என்பதுதான் ‘அதி மேதாவிகள்’ திரைப்படத்தின் கதை.
நான் உட்பட அரியர்ஸ் வைத்த, வைத்து கொண்டிருக்கின்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் ‘அதி மேதாவிகள்’ திரைப்படம் சமர்ப்பணம்.
இத்தகைய தனித்துவமான கதையம்சத்தை ஊக்குவித்து, என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு பேராதரவையும், நம்பிக்கையையும் அளித்து வரும் என்னுடைய தயாரிப்பாளர் மால்காம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
முன்னாள் மாணவர்களையும், இந்நாள் மாணவர்களையும் அரியர்ஸ் மூலம் இணைக்கக் கூடிய ஒரு பாலமாக எங்களின் ‘அதி மேதாவிகள்’ இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறினார்.