அறிமுக இயக்குநரான சாய் பரத் இயக்கத்தில், ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ரம்’.
ஹரி ஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
‘ரெமோ’ திரைப்படத்திற்கு பிறகு அனிருத் இசையமைப்பில் வெளியாகும் படம் ‘ரம்’ என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு அதிகமாகவுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தில் அனிருத் இசையமைத்த ‘ஹோலா அமிகோ’ மற்றும் ‘பேயோ போபிலியா’ பாடல்கள் இசை பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘ரம்’ திரைப்படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமையை பிரபல விநியோகஸ்தரான ஏ.பி.ஸ்ரீகாந்த், ‘ஸ்ரீ சாய் சர்க்யூட் 6000’ என்ற நிறுவனத்தின் சார்பில் பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார்.
இந்தப் படத்தை விநியோகம் செய்வது குறித்து பேசிய விநியோகஸ்தர் ஏ.பி. ஸ்ரீகாந்த், “கடந்த இருபது வருடங்களாக நாங்கள் தமிழகத்தில் பகுதிவாரியாக திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறோம்.
அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர் கை கோர்த்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்தில் நாங்கள் இப்போது இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தர வேண்டும் என்று எண்ணித்தான் நாங்கள் ‘ரம்’ படத்தை தேர்வு செய்திருக்கிறோம்.
எங்களுக்கு இந்த ‘ரம்’ திரைப்படம் சிறப்பான அடித்தளமாக விளங்கும் என முழுமையாக நம்புகிறோம். துள்ளலான இசையில் உருவான பாடல்களும், பயத்தில் உறைய வைக்கும் திகில் காட்சிகளும் நிறைந்த ‘ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வெற்றி பெறும் என்றே நம்புகிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
தற்போது இந்த ‘ரம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட தொழில் நுட்ப வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.









