வரும் அக்டோபர்-29, தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலில் மூன்றாவதாக ‘திரைக்கு வராத கதை’ திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.
ஏற்கெனவே தீபாவளி தினத்தில் கார்த்தி நடித்திருக்கும் ‘காஷ்மோரா’ படமும், தனுஷ் நடித்திருக்கும் ‘கொடி’ படமும் ரிலீஸாகவுள்ளன. ‘காஷ்மோரா’ படம் மிகப் பெரிய பொருட்செலவில் ‘பாகுபலி’ டைப்பில் பில்லி சூனியம் கதையில் படமாக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்திருக்கும் ‘கொடி’ படம் ‘புதுப்பேட்டை’ ஸ்டைலில் அரசியல் களத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே மிகப் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும் என்பதால்தான் விஷாலின் ‘கத்தி சண்டை’ திரைப்படம் தீபாவளிக்கு வராமல் தள்ளிப் போயுள்ளது.
இந்த நேரத்தில் இந்த இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுடன் போட்டியிடுவதற்காக தைரியமாக களத்தில் குதித்துள்ளது ‘திரைக்கு வராத’ கதை திரைப்படம்.
இந்தப் படத்தில் நதியா, இனியா, ஈடன், கோவை சரளா, ஆர்த்தி, சபீதா ஆனந்த் மற்றும் பல முக்கிய நடிகைகள் நடித்துள்ளனர்.
இசை – M.G.குமார், பின்னணி இசை – அரோல் கொரோலி, ஒளிப்பதிவு – சஞ்சீவ் சங்கர். வசனம் – துரைப்பாண்டியன். பாடல்கள் – தமிழமுதன், பரிதி, சக்தி கிருஷ்ணா. சண்டை பயிற்சி – ‘மாஃபியா’ சசி, எழுத்து, இயக்கம் – துளசிதாஸ்.
இந்தத் ‘திரைக்கு வராத கதை’ படத்தை மலையாள சினிமாவின் முன்னனி இயக்குநர்களில் ஒருவரான துளசிதாஸ் இயக்கியிருக்கிறார். M.J.D. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் K.மணிகண்டன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட ஆண்களே இல்லை என்பதுதான். முழுக்க, முழுக்க பெண்களே நடித்துள்ளனராம்.
ஃபிலிம் இண்ஸ்டிட்யூட் மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து சொந்தமாக ஒரு படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எடுக்கும் கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்கள், நிஜமாகவே உண்மை சம்பவங்களாக மாறுகின்றன. இது ஏன்.. எப்படி.. என்பதுதான் படத்தின் கதை. படத்தின் திரைக்கதை திரில்லர் கதையோட்டத்தில், சஸ்பென்ஸ் மற்றும் அதிரடி கலந்தவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை, ராகுல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.