பிரபல இயக்குநரான பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராகவும், ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ போன்ற படங்களில் ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்தவர் பிரகாஷ் சந்திரா.
தனக்கென்று தனி முத்திரை பதிக்க தனி ஹீரோவாக இவர் நடித்திருக்கும் புதிய படமே இந்த ‘சாவி’ திரைப்படம். இந்த ‘சாவி’ ஹீரோவை மட்டும் இக்கட்டில் பூட்டிவிட்டு மெல்ல மெல்ல பல புதிர்களை திறந்து கொண்டே போகிறது. இந்த ‘சாவி’ திரையுலகில் தனக்கு பல புதிய கதவுகளை திறக்கும் என்று நம்பிக்கையோடிருக்கிறார் ஹீரோ பிரகாஷ் சந்திரா.
இந்தப் படத்தில் மலையாள புதிய வரவான சுனுலட்சுமி ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் ராஜலிங்கம், உதயபானு மகேஷ்வரன், ஸ்டில்ஸ் குமார், கவிஞர் நந்தலாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கொளுத்தும் வெயிலில் கூடல் நகர் வீதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அப்படியே குளுகுளு கொடைக்கானலில் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியிருக்கிறார்கள். இதயத்தில் பனி பூசும் ஒளிப்பதிவு, பள்ளம் கண்ட நதியாக பாய்ந்தோடும் கதையோட்டம்.. சுண்டக் காய்ச்சிய வசனம். காற்றில் தவழ்ந்து தவழ்ந்து வரும் இறகின் மென்மையா அல்லது பூவின் இதழில் மெல்ல மெல்ல படியும் நிலா ஒளியின் மென்மையா எனும் ஒரு பாடலும் அங்கே படமாக்கப்பட்டது.
இப்படி பல சிறப்புகளோடு அமைந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, தற்போது படத்தை முழுமைப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பின்னணி இசை கோர்ப்பு பணி மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் கதாநாயகி சுனுலட்சுமி பேசும் தமிழில்தான் மலையாள வாசம்.. ஆனால், கண்களில் கவிதை வாசம்.. இவர்களது வரவு வெறும் வருகை பதிவாக இருக்காது. பதிவிற்கான வருகையாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ‘சாவி’ இவர்களுக்கு வெற்றிக் கதவுகளை திறந்து விடட்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்..!









