full screen background image

ஏப்ரல் 10-ம் தேதி ரஜினி, கமல் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி..!

ஏப்ரல் 10-ம் தேதி ரஜினி, கமல் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி..!

நடிகர் சங்க கட்டிட நிதி திரட்ட சென்னையில் வரும்  ஏப்ரல் 10–ம் தேதி நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நடிகர் விஷால் கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது. நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகர்கள் எஸ்.வி.சேகர், உதயா, மனோபாலா, பசுபதி, ராம்கி, சரவணன், டி.பி.கஜேந்திரன், ஐசரி கணேஷ், பூச்சி முருகன் நடிகைகள் லலிதகுமாரி, சங்கீதா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் பங்கேற்றார்கள்.

அப்போது சங்கத்தின் செயலாளரான நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசும்போது, “நடிகர் சங்கத்திடம் கடைசியாக 48 லட்சம் ரூபாய் கையிருப்பு இருந்தது. மேலும் 2 கோடி ரூபாயை கடனாக வாங்கி 2 கோடியே 48 லட்சம் ரூபாயை ஸ்பை சினிமாஸ் நிறுனத்திடம் செலுத்திதான் இந்த நடிகர் சங்க நிலத்தை மீட்டு இருக்கிறோம். தற்போது அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

கட்டிட நிதி திரட்டுவதற்காக வருகிற ஏப்ரல் 10–ந் தேதி சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த இருக்கிறோம். இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஒட்டு மொத்த திரை உலகினரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கணக்கு வழக்குகளை இன்னும் சரியாக ஒப்படைக்கவில்லை. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் நடக்கின்றன.

நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதே நேரம் நடிகர் சங்கம் என்று வரும்போது, கணக்குகளை ஒப்படைக்காமல் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அழைக்க இருக்கிறோம். இதற்காக அவரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருக்கிறது..” என்றார் விஷால்.

Our Score