வரும் தீபாவளி தினம் நடிகர் கமல்ஹாசனுக்கும், நடிகர் அஜித்திற்கும் ஸ்பெஷலான நாள். அன்றைய தினம் அவர்கள் இருவரும் நடித்த படங்கள் 4-வது முறையாக திரைக்கு வருகின்றன.
1994-ம் ஆண்டு நவம்பர்-2-ம் தேதி தீபாவளி தினத்தன்று கமலின் ‘நம்மவர்’ படமும், அஜித்தின் ‘பவித்ரா’ படமும் முதன்முறையாக திரைக்கு வந்தன. இதில் அஜீத்தின் ‘பவித்ரா’ படத்திற்கு சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றிற்காக 2 தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ‘நம்மவர்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது நாகேஷுக்கு கிடைத்தது. தமிழக அரசின் சிறந்த படத்திற்கான சிறப்புப் பரிசும் கிடைத்தது.
2000-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதியன்று கமலின் ‘ஹே ராம்’ படமும், அஜீத்தின் ‘முகவரி’ படமும் வெளியாகின. ‘ஹே ராம்’ தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தியாவின் மெச்சத் தகுந்த படங்களில் ஒன்றாக ‘ஹேராம்’ இன்றைக்கும் திகழ்ந்து வருகிறது. மேலும் 2000-ல் வெளியான படங்களில் ஓபனிங் வசூல் அதிகம் பெற்ற படங்களில் ஒன்றாகவும் ‘ஹே ராம்’ திகழ்ந்தது. சிறந்த காஸ்ட்யூம்ஸிற்காக சரிகாவுக்கும், சிறந்த துணை நடிகருக்காக அதுல் குல்கர்னிக்கும், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக மந்த்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. ‘முகவரி’ படம் இன்றைக்கும் பாடல்களுக்காகவே பேசப்பட்டு வருகிறது.
2002-ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று அஜீத்தின் ‘ரெட்’ மற்றும் கமலின் ‘பம்மல் கே சம்பந்தம்’ படங்கள் வெளியாகின. இதில் ‘ரெட்’ படம் தோல்வி அடைந்தாலும். ‘பம்மல் கே.சம்பந்தம்’ படம் நகைச்சுவைக்காகவே ஓடியது.
2002 ம் ஆண்டிற்குப் பின்னர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது இந்த தீபாவளி தினத்தில் இருவரது படங்களும் மோத இருக்கின்றன. ‘தூங்காவன’த்திற்கு ‘U / A’ சான்றிதழும், ‘வேதாள’த்திற்கு ‘U’ சான்றிதழும் தணிக்கைக் குழுவில் கிடைத்திருக்கிறது.
‘தூங்காவனம்’ படத்திற்கு தமிழகம் முழுவதிலும் 303 தியேட்டர்களும், ‘வேதாளம்’ திரைப்படத்திற்கு 527 திரைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.
மேலும், கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்திற்குப் போட்டியாக களமிறங்கியிருக்கும் ‘வேதாளம்’ படத்தின் கதாநாயகி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கமல் மற்றும் அஜித் ரசிகர்கள் இரு தரப்பினருமே மிகுந்த ஆர்வத்துடன் இந்த தீபாவளியை வரவேற்க தயாராகவுள்ளனர்.









