திரைப்பட துறையில் இருப்பவர்களின் வாரிசுகள் அதே துறையில் கால் வைப்பதொன்றும் புதிதல்ல. எத்தனையோ இளம் நடிகர்கள் தங்களது பெற்றோரின் முகவரியை வைத்தே உள்ளே வந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறை நடிகர்களின் பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில் அடுத்த வாரிசாக கோடம்பாக்கத்தில் களம் புகுந்திருப்பவர் நடிகர் டெல்லிகணேஷின் மகனான மஹா.
பொறியியல் பட்டதாரியான மஹா, அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பையும் முடித்தவர். இருந்தாலும் தான் படித்த வேலைக்கு செல்ல விருப்பமில்லாமல், தந்தையின் வழியிலேயே நடிகராக வேண்டும் என்று நினைத்து களத்தில் குதித்துள்ளார்.
‘பட்டினப்பிரவேசம்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் டெல்லி கணேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நாடகங்களில் நடித்து வந்தவர். ‘ஓம் கணேஷ் கிரியேஷன்’ என்கிற பெயரில் நாடகங்களை நடத்தி வந்தார். இப்போது அதே பெயரிலேயே தன் மகனை ஹீரோவாக்கி ‘என்னுள் ஆயிரம்’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தினை தயாரித்துள்ளார்.
கதாநாயகியான மரீனா மைக்கேல் மலையாளத்தில் சில படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம். கதை திரைக்கதை வசனம் எழுதி இருக்கும் கிருஷ்ணகுமார் இயக்குநர் ஏ.எல். விஜய்யின் உதவியாளர். ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவிடம் உதவியாளராக இருந்த அதிசயராஜ். கோபிசந்தர் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில நாட்களுக்கு முன்பாக பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் டெல்லி கணேஷ், ”நான் கடந்த முப்பத்தைந்து வருஷமா நடிச்சுக்கிட்டிருக்கேன். ஒரு தயாரிப்பாளரா எனக்கு இந்த மேடை ரொம்பப் புதுசு. ஆரம்ப காலத்துல இருந்தே எனக்கு தனியா பி.ஆர்.ஓ.ன்னு யாரும் இல்லை. பல வெற்றிப் படங்கள்ல நான் நடித்து முடிச்சவுடனேயே பல பேர் என்கிட்ட சொன்னாங்க..
‘ஒரு பிரஸ்மீட் வைச்சு பத்திரிகையாளர்களை சந்திச்சு பேசுங்கன்னு.’ நான்தான் அப்போ அதை சிந்திச்சுப் பார்க்காமலேயே விட்டுட்டேன். நாமதான் தொடர்ந்து நடிச்சுக்கிட்டிருக்கோமே..? நமக்குத்தான் வாய்ப்பு வந்துக்கிட்டேயிருக்கே.. அப்புறம் எதுக்கு பிரஸ்மீட்டுன்னு விட்டுட்டேன். பத்திரிகையாளர்களை சந்திச்சு பேசுறது ஒரு மரியாதைக்கான விஷயம்ன்றது அப்போ எனக்கு புரியாம போயிருச்சு. தெரிஞ்சிருந்தால் ‘சிந்து பைரவி’ படம ரிலீஸான சமயத்துலேயே உங்களை சந்திச்சிருப்பேன்.
இப்போ இந்தப் படத்தோட தயாரிப்பாளரா உங்க முன்னாடி வந்திருக்கேன். என் மகன் மஹாவை பெரிய ஆளாக்கணும்னு ஆசைப்பட்டேன். என்ஜினீயரிங் படிக்க வச்சேன். வெளிநாட்டுக்கு போய் எம்.எஸ்ஸும் படிச்சுட்டு வந்தார். வந்ததும் ‘நான் வேலைக்கெல்லம் போகலை. நடிக்கப் போறேன்’னு சொன்னார்.
சரி… புள்ள ஆசையை நிறைவேத்தறதுதானே அப்பனோட வேலை.. இல்லேன்னா அவன் வருத்தப்படுவான். அவன் வருத்தப்பட்டா என் மனைவிக்கு தாங்காது. அப்புறம் என் வீட்டம்மா மூஞ்சியைத் தூக்கி வைச்சிட்டு உக்காந்திருவாங்க. அப்புறம் நமக்குத்தான் சங்கடம். என்ன செய்றதுன்னு யோசிச்சேன்.. சரி.. அவனை அவன் வழிலேயே விட்டிரலாம்னு முடிவுக்கு வந்தேன்.
என் மகன் நடிக்க இருக்கிறதை கேள்விப்பட்டுட்டு இந்த இயக்குநர் கிருஷ்ணகுமார் அவன்கிட்ட இந்தக் கதையைச் சொல்லியிருக்கார். மஹாவுக்கு கதை பிடிச்சுப் போச்சு. என்கிட்ட வந்து சொன்னாங்க. நானும் கதையைக் கேட்டேன். எனக்கும் பிடிச்சிருந்த்து. சரி.. அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.
இப்போ படத்தை யார் தயாரிக்கிறதுன்னு பிரச்சினை.. இன்னொரு தயாரிப்பாளரை போய் பார்த்து ‘ஐயா.. என் பையனை வைச்சு படம் பண்ணுங்க’ன்னு கேக்குறதுக்கு எனக்கு சங்கடமா இருந்த்து. அதுதான் நம்மகிட்டயே பணம் இருக்கே.. நாமளே தயாரிச்சிட்டா என்ன.. ஒருவேளை வேற தயாரிப்பாளர்ன்னா ‘கதையை மாத்து.. அதை மாத்து. இதை மாத்து’ன்னு சொல்லிட்டா என்ன செய்யறதுன்னுல்லாம் யோசிச்சு.. நானே தயாரிக்கிறதா முடிவு பண்ணித் துவக்கிட்டேன்.
என்னோட கம்பெனிக்கு ‘ஓம் கணேஷ் கிரியேஷன்ஸ்’ன்னு பேர் வைச்சிருக்கேன். இதே பெயரைத்தான் நான் என்னோட நாடக்க் குழுவுக்கும் வைச்சிருந்தேன். எனது நாடகக் குழுவின் சார்பில் இந்தியா முழுவதிலும் பல ஊர்களில் நாடகம் போட்டிருக்கேன். தமிழ்நாட்டில் நான் போகாத ஊரே இல்லை. அந்த நாடகக் குழுவை வைத்து நல்லாவே சம்பாதிச்சேன். ஸோ.. அதே பெயரை சென்டிமெண்ட்டா இந்த சினிமா தயாரிப்பு நிறுவனத்துக்கும் வைத்துவிட்டேன்..
இந்த இயக்குநர் கிருஷ்ணகுமார் பத்தி இயக்குநர் விஜய்கிட்ட போன் பண்ணி கேட்டேன். ‘என்னை நம்பி அவனுக்குப் படம் தரலாம். ரொம்பத் திறமைசாலி’ன்னு சொன்னார். அந்த ஒரு வார்த்தையே போதும்னு சொல்லிட்டு படத்தை ஆரம்பிச்சுட்டேன் .
இந்தப் படத்தில் பல புதிய தொழில் நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கேன். இதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். இந்த கலைஞர்களெல்லாம் பின்னாடி ஒரு நாள் பெரிய ஆளா வரும்போது, எனக்கும் பெருமையாத்தானே இருக்கும். இந்தப் படத்தில் நடித்த, சம்பந்தப்பட்ட பல பிரபலங்களும், படம் தயாரிக்கிறது நான்னு தெரிஞ்ச உடனேயே அவங்க சம்பளத்தை எனக்காகக் குறைச்சுக்கிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க. அவங்களுக்கெல்லாம் என்னுடைய மனமார்ந்த நன்றி.
அதே மாதிரி நானும் உண்மையா நடந்துக்கி்ட்டேன். இந்தப் படத்துல நடிச்சவங்களுக்கும், வேலை பார்த்தவங்களுக்கும் ஒத்த பைசாகூட இப்போவரைக்கும் பாக்கியில்லை. எல்லாருக்கும் பக்காவா செட்டில் பண்ணிட்டேன். அந்தத் திருப்தியோடதான் உங்களைச் சந்திக்க வந்திரு்ககேன்.
இந்தப் படத்துல என்க்கேற்ற வேஷமில்லை. அதுனாலதான் நான் மட்டும் நடிக்கலை. ஷூட்டிங்கப்போ ஒரு நாள் என் பையன் நடிப்பைப் பார்க்கப் போனேன். ஒரு சீன்தான் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. நல்லா நடிச்சிருக்கிற மாதிரி எனக்குத் தோணுச்சு. அப்படியே திருப்தியா வந்துட்டேன். அதுக்கப்புறம் அந்தப் பக்கமே எட்டிக்கூட பார்க்கல.
கடைசியா இப்போ படம் பார்த்தேன். நல்லா வந்துருக்கு. இயக்குநர் எங்ககிட்ட கதை சொல்லும்போது என்ன சொன்னாரோ அதை அப்படியே எடுத்திருக்காரு. அந்த சந்தோஷத்தோட இப்போது படத்தின் வெளியீட்டுக்கு தயாராகியிருக்கோம்.. விரைவில் இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போகிறோம்…” என்றார்.
படத்தின் நாயகன் மஹா பேசும்போது, ”இந்தப் படத்தில் நிறைய புதுமுக நடிகர்கள், புதிய தொழில் நுட்பக் கலைஞர்கள் அறிமுகமாயிருக்காங்க. அதிக புதுமுகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர்தான். அவருடைய அறிமுகம்தான் என்னுடைய அப்பா டெல்லி கணேஷ். இப்போது அவர் தயாரிக்கும் படத்தில் நிறைய புதுமுகங்கள் இருப்பது பொருத்தமான ஒன்றுதானே..” என்றார் டச்சிங்காக..!
நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்ட டிரெயிலரும், பாடல் காட்சிகளுமே படத்தின் வித்தியாசமான மேக்கிங்கை உணர்த்தியிருக்கின்றன. அதில் ஒரு பாடல் காட்சியில் பாடலின் லீடாக வரும் வசனத்தில் நாயகன் நாயகியிடம், “உன் உதட்டுல இருக்குற ரேகையையெல்லாம் எண்ணி முடிக்கவே ஒரு வருஷம் ஆகுமே..” என்று காதலுடன் சொல்வது போல ஒரு காட்சி வருகிறது. செம ஷாட்..!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல இருக்கிறது இந்தக் காட்சி..!