நேற்றைக்கு நடைபெற்ற ‘அசுரகுலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பிரபு பேசும்போது அப்பா-மகன் பாசம் பற்றியெல்லா்ம் சென்டிமெண்ட்டாக பேசினார்.
அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் :
“நான் 1978-ல் ‘திரிசூலம்’ படத்தில் தயாரிப்பு நிர்வாகப் பணியைக் கவனித்து வந்தேன். அப்போதெல்லாம் அப்பா, பெரியப்பா எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு சாஹுல் ,ஜெயமணி இருவரும்தான் சண்டை காட்சிகளில் டூப் போடுவார்கள். இவர்களிடையே உயரமாக இன்னொருவரும் இருப்பார். அவர்தான் இந்த பெப்சி விஜயன். அப்போது இவர் வேலை செய்வதைப் பார்த்து ‘இவன் பெரிய ரவுண்ட் வருவான்’ என்று அப்பாவே பாராட்டியிருக்கிறார்.
மாஸ்டராக இவருக்கும் எனக்கும் ‘சங்கிலி’தான் முதல் படம். அந்தப் படத்தில் நான் அப்பாவை எதிர்த்து வசனம் பேசுவேன். அப்போது அப்பா என்னை அடிக்க வேண்டும். நான்கு ஷாட்கள்தான் இருக்கும். ஆனால் அப்பா 25 தடவை அடித்தார். இது பற்றி அப்பாவிடம் கேட்டபோது, ‘இவன் படுத்திய பாடு தாங்கலை. அடிப்பதற்கு இப்பத்தான் சமயம் கிடைச்சது.. அதனால்தான் சாத்தினேன்..’ என்றார்.
அப்பாக்களின் அவஸ்தைகள் யாருக்குத் தெரியும்..? பிள்ளைகள் என்று வரும்போது தகப்பன்கள் படும்பாடு எங்களை மாதிரி தகப்பன்களுக்குத்தான் தெரியும். இந்த சபரிஷின் அப்பா, மகனை கஷ்டப்பட வைக்க மாட்டார். ஆனாலும் சபரிஷ் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வாரிசுகள் இணைந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.









