‘அசுரகுலம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் பிரபல சண்டை பயிற்சியாளர் பெப்சி விஜயனின் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பதால் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர்கள் பிரபு, சந்தானம், இயக்குநர் பி.வாசு, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பி.எல் தேனப்பன், ராதாகிருஷ்ணன். கதிரேசன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், நடிகர்கள் தம்பி ராமையா, ஜான் விஜய், வி.டி.வி. கணேஷ், இசையமைப்பாளர் சி.சத்யா, நாயகி வித்யா, ‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன், ‘அசுர குலம்’ தயாரிப்பாளர் வேம்பையன் வேலாயுதம், இயக்குநர் விக்னேஷ் மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் பி.வாசு பேசும்போது, “விஜயன் மாஸ்டரை பரபரப்பான மாஸ்டராக, ஒரு பலசாலியாகத்தான் தெரியும். இன்று, இங்கே… அவரை பொறுப்புள்ள ஒரு தந்தையாகப் பார்க்கிறேன்.
ஒரு அப்பாவாக உங்கள் பயம், பிரபுவின் பயம், என் பயம் எல்லாமும் ஒன்றுதான். மகன் நன்றாக வர வேண்டுமே என்கிற ஒரு தந்தையின் பயம்தான் அது. உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிற சல்மான்கான், இந்த விஜயன் மாஸ்டரின் ரசிகர்.
படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக உள்ளன. சத்யாவின் இசையில் ராஜா சாரின் டச்சை உணர முடிந்தது. இன்று ஒரு படத்துக்கு கதாநாயகன் யார் என்றால் அது கதைதான். படம்தான் நட்சத்திரம்.
கதாநாயக நடிகர்களுககு பெரிய, பெரிய கட்அவுட் எல்லாம் வைப்பார்கள். அதன் உயரம் அதிகமாக இருக்கும். அதற்கு அழகுபடுத்தி மாலை போடுவார்கள். பாலாபிஷேகம் செய்வார்கள். அந்தக் கட் அவுட்டின் பின்னால் போய்ப் பார்த்தால் ஆயிரம் கட்டைகள் இருக்கும்; நிறைய ஆணிகள் இருக்கும்; கயிறுகள் இருக்கும். அந்த ஆணிகளைப் போன்றவர்கள்தான் திரைப்படங்களில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள். நட்சத்திரங்களைத் தாங்கிப் பிடிப்பவர்கள் இந்தத் தொழில் நுட்பக் கலைஞர்கள்தான். அதை யாரும் மறந்து விடக்கூடாது.
இந்தப் படக் குழுவினர் நாளைய காலக்கட்டங்களில் சாதனையாளர்களாக மாறி எங்களை போலவே இதே போன்றதொரு மேடையில் அமர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எ.ஸ்.தாணு பேசும் போது. “தம்பி சபரிஷ் திரையுலகைக் காக்கவந்த குலவிளக்காக வலம் வருவார். இவர் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய நடிகராகத் தெரிகிறார், வெற்றி வலம் வருவார். இப்படம் நல்ல படத்துக்கான கதைக் களத்துடன் இருக்கிறது. எல்லா இலக்கணத்துடனும் இருக்கிறது. படம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் ” என்றார்.
இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் பேசும்போது. “தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடிபாயும் என்பது அந்தக் காலம். இப்போது தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 64 அடி பாயும். பெப்சி விஜயன் வில்லனாகத்தான் நடித்திருக்கிறார். அவரால் டூயட் பாட முடியாது. எனவே தன் மகனை டூயட் பாட வைத்திருக்கிறார். சபரிஷுக்கு யாருடைய சாயலும் இல்லாத முகம். யார் சாயலும் இல்லாத நடிப்பு. நாயகி வித்யாவும் புதியவராக இருக்கிறார். கண்டிப்பாக சபரிஷுடன் இணைந்து படம் செய்வேன்”. என்று கூறி வாழ்த்தினார்.