என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு.’
இந்தப் படத்தில் மிதுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் ‘சென்னையில் ஒரு நாள்’, ‘சுற்றுலா’ போன்ற படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடித்திருக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடித்திருக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடித்திருக்கிறார். மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோ பால், அருண், அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – என்.எஸ். ராஜேஷ்குமார், இசை – விஜய் பெஞ்சமின், பாடல்கள் – ராகுல் பிரசாத், ஹாஜா முகம்மது, நடனம் – அஜெய் சிவசங்கர், மது.ஆர், எடிட்டிங் – ஏ.கெவின், தயாரிப்பு நிர்வாகம் – டி.வி.ஜனார்த்தனன், குட்டி கிருஷ்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என்.ராஜேஷ்குமார், தயாரிப்பு – கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார்.
படம் பற்றி இயக்குநர் என்.ராஜேஷ்குமார் பேசும்போது,. “இது ஒரு ரொமான்டிக் பயணக் கதை..! முழுக்க முழுக்க காதல்தான் படத்தின் மையக் கரு.. இதுவரை நிறைய படங்களில் ரயிலில் சில காட்சிகள் எடுத்திருப்பார்கள். ஆக்ஷன் அல்லது பாடல் காட்சிகளை எடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு முழுப் படத்தையும் ஓடும் ரயிலிலேயே படமாக்கியது இந்தப் படத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் சென்னையிலிருந்து மாலையில் கிளம்பி நாகர்கோவில் போய் சேரும் இடைவெளியான ஒரு இரவில் நடக்கும் ரொமான்டிக் கதைதான் இந்த ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ திரைப்படம். சிதம்பர கிருஷ்ணன் என்ற கதாநாயகனின் பெயரை, நண்பர்கள் செல்லமாக ‘சிக்கி’ என்று அழைப்பதையே தலைப்பாக்கி இருக்கிறோம்.
ஓடும் ரயிலில் படமாக்குவது என்பது எளிதான காரியமில்லை. ரயில் ஓடும்போது ஏற்படும் அதிர்வு படப்பிடிப்பிற்கு மிகப் பெரிய இடைஞ்சல். அதையும் மீறி ஒளிப்பதிவாளர் ரொம்பவும் சிரமப்பட்டு காட்சிகளை படமாக்கினார். படம் பார்க்கிற ரசிகனுக்கு புது மாதிரியான உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.
நல்ல கதைக் கருவுடன், கமர்ஷியல் கலந்து திரைக்கதையாக்கி இருக்கிறேன். படத்தைப் பார்த்த ஸ்டுடியோ 9 சுரேஷ் அவர்கள், உடனே ஒகே சொல்லி படத்தை வாங்கி வெளியிட முன் வந்துள்ளார். அதுவே எங்களது படக் குழுவினருக்குக் கிடைத்த வெற்றி..” என்றார் பெருமையுடன்.









