எப்.சி.எஸ். கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான துவார் சந்திரசேகர், தனது ஐந்தாவது படமான ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறார்.
‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘பாக்கணும் போல இருக்கு’, ‘இருவர் உள்ளம்’ போன்ற படங்களைத் தந்த எப்.சி.எஸ். கிரியேசன்ஸ்-துவார் சந்திரசேகர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெற்றிப் படம் ‘தொட்டால் தொடரும்’. இதனை கேபிள் ஷங்கர் இயக்கியிருந்தார்.
‘தொட்டால் தொடரும்’ படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது, “லாபமோ நஷ்டமோ தொடர்ந்து பத்து படங்கள் தயாரிப்பேன். திறமையானவர்களை அறிமுகப்படுத்துவேன்..” என்று அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதியின்படி இப்போது இரண்டு புதியவர்கள் இயக்க புதிய திரைப்படங்களுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.
‘எட்டுத்திக்கும் மதயானை’, ‘வம்சம்’ ஆகிய படங்களில் நடித்த நடிகரும், ‘அசத்தப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு’ ஆகிய நிகழ்ச்சிகளின் இயக்குநருமான டி. ராஜ்குமார் இயக்கத்தில் ஒரு படத்தினை துவக்குகிறார் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. ஊட்டி மற்றும் கோவையில் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளது. யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எல்.வி.கணேஷ் இசையமைக்கிறார். அதோடு மிக முக்கியமான நடிகர் ஒருவர் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.
அடுத்து துவார் சந்திரசேகர் தனது மகன் கோவின் (Govin) நடிக்க ‘பசங்க’ மாதிரியான குழந்தைகளுக்கான படத்தையும் தயாரிக்கிறார். தனது மகனையும் இந்த திரையுலகில் அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாகச் சொல்லும் தயாரிப்பாளர் சந்திரசேகர், “இந்தப் படமும் என் வாழ்வில் பெருமைகொள்ளக்கூடிய படமாக அமையும். ஏனெனில் இது குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளை பேசக் கூடிய கதை… மற்ற விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.











