தமிழ்த் திரையுலகில் இந்தாண்டில் 100 கோடி வசூலைத் தாண்டிய முதல் படம் என்ற பெயரை ‘காஞ்சனா-2’ பெற்றுள்ளது. 50 நாட்களைத் தாண்டியும் தமிழ்நாடு உள்பட பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சியாக இப்போதும் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
பேய்க் கதை, காமெடி, அடிதடி, ஆக்சன் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும்வகையில் திரைக்கதை அமைத்திருந்ததால் இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது ‘முனி’ படத்தின் தொடர்ச்சியாகும். படத்தை இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் எழுதி, நடித்து, இயக்கியுள்ளார். இதில் ஒரு சிறுமி வேடம் உட்பட 6 வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறார்.
சன் டிவிக்காக ராகவா லாரன்ஸே முதல் காப்பி அடிப்படையில் தயாரித்திருந்தார். இதன் மொத்த பட்ஜெட்டே 17 கோடிதான். ஆனால் இதுவரையிலும் உலகம் முழுவதிலும் இருந்தும் இந்தப் படம் வசூல் செய்திருக்கும் தொகை 108 கோடி என்கிறார்கள்.
‘காஞ்சனா-2’-வின் இந்த தாறுமாறான ஹிட்டைத் தொடர்ந்து ‘காஞ்சனா-3’ படத்தின் கதையை ரெடி செய்து வருகிறாராம் லாரன்ஸ். விரைவில் இப்படத்தை அவர் தொடங்கவுள்ளார்.
தற்போது தனது அடுத்த படங்களான ’ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’, மற்றும் ’மொட்ட சிவா கெட்ட சிவா’ படங்களில் பிஸியாக உள்ளார்.









