full screen background image

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈடு விவகாரம் – குழப்பம் கூடுகிறது..!

‘லிங்கா’ படத்தின் நஷ்டஈடு விவகாரம் – குழப்பம் கூடுகிறது..!

‘லிங்கா’ படத்தினால் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் விவகாரத்தில் மேலும், மேலும் குழப்பமே நிகழ்ந்து வருகிறது.

இன்று இரவு ‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து மீடியாக்களுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அது இங்கே :

producer council letter

இந்த அறிக்கையில்தான் குழப்பமே..!

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எப்போது, எந்தவிதமான அறிக்கை வந்தாலும் அதில் தலைவர், செயலாளர் இருவரின் கையெழுத்தும் கண்டிப்பாக இருக்கும். இதில் அப்படி எதுவும் இல்லாமல் பத்திரிகைகளுக்குக் கொடுக்கப்படும் சராசரியான செய்தியறிக்கை மாதிரி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

தயாரிப்பாளர் தரப்பில் இருந்து  திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்ட தொகை எவ்வளவு என்பதும் இதில் சொல்லப்படவில்லை.

“இந்தத் தொகையை தங்களுக்குள் எப்படி பிரித்துக் கொள்வது என்கிற குழப்பத்தில்தான் பணத்தைப் பெற்றுக் கொள்வது தாமதமாகிவிட்டது..” என்று இந்த அறிக்கையில் தயாரிப்பாளர் சங்கம். யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறது என்பதும் தெளிவாக்கப்படவில்லை.

ஒருவேளை பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள்தான் தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பில் இருக்கும் பணத்தை நேரில் வந்து பெற்றுக் கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறதோ..? 

விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ரஜினியின் வீட்டு முன்பாக பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டு, இது முறைப்படி காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டு அனுமதியும் வாங்கிவிட்ட பிறகு… ‘ரஜினிக்கும், இதற்கும் சம்பந்தமில்லை. ரஜினி மனிதாபிமானத்துடன் உதவி செய்துவிட்டார். அவருக்கு நன்றி’ என்று சொல்லி இப்படி அறிக்கை விட்டிருப்பதை தயாரிப்பாளரிடமிருந்து நஷ்டஈட்டு பணம் கைக்கு வந்த உடனேயே தயாரிப்பாளர் சங்கம் சொல்லியிருக்கலாமே..?

இப்போது சொல்வதால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது..? இதில் இருக்கும் சில வார்த்தைகளுக்காக சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் நாளை என்ன அறிக்கை விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை..!

ஆக மொத்தம்.. இரு தரப்பிலுமே இந்தப் பிரச்சினையை வேண்டுமென்றே இழுக்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இதற்கு திரையுலகமும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் பலிகடா ஆகியிருக்கின்றன என்றும் சொல்லலாம்..!

Our Score