‘கனவெல்லாம் பலிக்குதே’ என்ற ‘தல’ அஜீத்தின் பாடலில் வரும் ‘என்னைவிட எந்தன் பிள்ளை ஜெயிக்கிறதே, என்னைவிட உயரத்தில் பறக்கிறதே’ என்ற வரிகள் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளிவந்து ஹிட்டானது.
இன்று அதே ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து அவரே நாயகனாக நடிக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இயக்குநர் ஆதிக் மற்றும் அப்படத்தில் உதவி இயக்குநராய் பணி புரியும் அவரது தந்தை ரவி கந்தசாமி ஆகியோர் இந்த வரிகளுக்கு உரிமையாளர்கள் ஆகிறார்கள்.
“அப்பா, எனது வாழ்க்கைல மிக முக்கியமானவர். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்க கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே அவர்தான். பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தை பார்க்கும்போதும், அவருடைய அங்கீகாரம் தடைபடும்போதும் ஜெயிக்கணும்ங்கற வெறி எனக்குள்ள வரும்.
நானே என்னோட பாதையை தேர்ந்தெடுத்து இன்னிக்கு G.V. பிரகாஷ் குமாரிடம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி என் முதல் படத்தை இயக்கி வருகிறேன.
இந்தக் காலக் கட்டத்தில் எங்கள் வீட்டில் ஒருவர்தான் இயக்குனராக வேண்டும் என இருக்கிறதோ என்னவோ..? ஆனால் ஒன்று.. வரும் காலத்தில் என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார்.. தேவைப்பட்டால் அப்போது நான் அவருக்கு உதவவும் செய்வேன்” என்று தன் அப்பா கனவை நினைவேற்றிய சந்தோஷத்துடன் கூறுகிறார் அறிமுக இயக்குனர் ஆதிக்.
தன் மகன் ஆதிக் பற்றி பெருமையுடன் கூறும் ரவி கந்தசாமி, “ஆதிக் வளரும்போதே அவனுக்கு நான் தன்னம்பிக்கையும், தைரியத்தையும் அதே அளவுக்கு சினிமா ஆர்வத்தையும் கற்றுக் கொடுத்தேன். அப்பனுக்கு பாடம் தந்த சுப்பனைப்போல் இப்போது என் மகனை நான் பாவிக்கிறேன். நான் ஜெயிக்க வேண்டும் என்பது என் கனவு. என் மகன் ஜெயிக்க வேண்டும் என்பது எனது மாபெரும் கனவு. என் மனைவிக்கு மகன் இயக்குனரானது மிக பெருமை ஒரு அம்மாவாக.. எனக்கும்தான் ஒரு அப்பாவாக…” என்று பெருமிதத்தோடு கூறினார் ரவி கந்தசாமி.













