இரண்டு மதம் சார்ந்த காதல் கதைகள் கொண்ட பல படங்கள் தமிழில் வெற்றி பெற்றுள்ளன. மதம் கடந்த காதல் ‘அலைகள் ஓய்வதில்லை’ முதல் ‘பம்பாய்’ வரை பல படங்களில் காட்டப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காதலைச் சொல்லி வெற்றி பெற்றவை.
இந்த வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியிருக்கும் அடுத்தப் படம்தான் இந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை.’ இந்து முஸ்லிம் சம்பந்தப்பட்ட காதல் கதை இது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் தமிழ் ரீமேக் இது.
இதே தலைப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரதாப் போத்தன், ராதிகா, சாருஹாசன் நடிப்பில் ஒரு தமிழ்த் திரைப்படம் வெளியானது. அதில் பிரதாப்பும், ராதிகாவும் சிறப்பாக நடித்திருந்தார்கள். விருதுகளும் கிடைத்தன. இப்போது முறைப்படி அதன் தயாரிப்பாளரிடமிருந்து அனுமதி பெற்று இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்து இந்துப் பையன், வசதியான முஸ்லிம் பெண்ணை விரும்புகிறான். அவர்களுக்கிடையே அரும்பும் காதல்.. இருவரும் ஒன்று சேர வரும் எதிர்ப்புகள், தடைகள் பற்றியதுதான் கதை. ஆனால் கவிதை போல அழகாகவும் கலகலப்பு குறையாமல் கவனமாகவும் கதை சொல்லும் படம் இது.
புதுமுகம் கௌதம் நாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் ‘தட்டத்தின் மறையத்து’ படத்தில் நடித்த இஷா தல்வார்தான் தமிழிலும் நாயகியாக நடிக்கிறார். நாசர், மனோஜ் கே. ஜெயன், தலைவாசல் விஜய், சிங்கமுத்து, சிங்கம்புலி, வனிதா, சங்கிலி முருகன் வெங்கி, அர்ஜுன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசை : ஜி.வி.பிரகாஷ்
ஒளிப்பதிவு : விஷ்ணு சர்மா
பாடல்கள் : நா.முத்துக்குமார், தாமரை, அருண் ராஜா,
நடனம் : பிருந்தா, சந்தோஷ் ஆலன், ராதிகா
சண்டை பயிற்சி : விஜய் ஜாக்குவார்
இந்தப் படத்தை இயக்குபவர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவர் தனுஷை வைத்து ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கியவர்.
படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. கன்னியாகுமாரியில்தான் கதை நடக்கிறது என்றாலும் சென்னை, கோவை, கேரளா, தலச்சேரி போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்போது பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தை பிளாக் டிக்கெட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது கலைப்புலி எஸ்.தாணு படத்தை வாங்கி வெளியிடுகிறார்.









