சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இந்த மவுன உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
மேடையில் ‘தர்ம தேவதைக்கு அநீதியா?’ என்ற வாசகம் எழுதப்பட்ட பேனர் கட்டப்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்தப் போராட்டம் குறித்து பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்கள் உணர்வுகளை தெரிவிக்கும்வகையில் இந்த மவுன உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவங்கியுள்ளோம். ஜெயலலிதா எல்லா சோதனைகளையும் வென்று வெளியே வருவார். தர்மம் வெற்றி பெறும். மீண்டும் அம்மா அரியணை ஏறுவார். இது ஒட்ட மொத்த தமிழ் திரையுலகினரின் பிரார்த்தனை. அது விரைவில் நிறைவேறும்..” என்றார்.
இந்த உண்ணாவிரதத்தில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த், ராமராஜன், சக்தி, எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், டெல்லி கணேஷ், மன்சூர்அலிகான், சரவணன், குண்டு கல்யா ணம், மனோபாலா, நடிகைகள் வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, நளினி, குயிலி, பாத்திமா பாபு, இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பி.வாசு, மனோஜ்குமார், ஆர். கே.செல்வமணி, ஆதி ராம், ரவி.கே.சந்திரன், ஒளிப்பதிவாளர் ரவீந்தர், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, ஏ.எல்.அழகப்பன், கே.டி.குஞ்சுமோன், காஜாமைதீன், இப்ராகிம் ராவுத்தர், ராதாகிருஷ்ணன், ஜாகுவார் தங்கம், விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் அருள்பதி, அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, விநியோகஸ்தர் நாகராஜன் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் தமிழ்த் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இதில் பங்கேற்றுள்ளார்கள். இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணிவரையிலும் நடக்கிறது.
இதேபோல் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள அவர்களது சங்க அலுவலகத்தில் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதில் பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரங்கள் யாரும் இந்த போராட்டத்தில் இதுவரையில் கலந்து கொள்ளாததும் கவனிக்கத்தக்கது.. கோர்ட் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவதுகூட ஒருவகையில் கோர்ட் அவமதிப்பாகும் என்ற பேச்சு எழுந்துள்ளதால் பல பிரமுகர்களும் இந்த போராட்டத்தை புறக்கணித்துள்ளார்கள். மேலும் சிலர் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் அவரவர்க்கென்று ஒரு தனி கொள்கை இருப்பதாலும் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் ஒதுங்கியுள்ளனர்..









