“மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ இந்தி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் காட்சிகள் எதுவுமில்லை…” என்று அப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் தமிழ் நடிகர் ஆதித்யா மேனன் கூறியுள்ளார்.
‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தித் திரைப்படத்தினால் தனது புகழும், நற்பெயரும் பாதிக்கப்படும் என்றும் இந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கில் இந்தப் படத்தின் ரிலீஸிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.(இந்தச் செய்தி இந்தப் பதிவில் உள்ளது)
இந்த நிலையில் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் என்ற ஹீரோ கேரக்டரில் நடித்த தமிழ் நடிகர் ஆதித்யா மேனன், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கவுரப்படுத்தும் விதமாகவே எங்கள் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவரை தவறானவராக காண்பிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை…” என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் சொல்கையில், “இந்திய சினிமாவில் யாருமே ரஜினியைத் தவறானவராக காண்பிக்க நினைக்க மாட்டார்கள். நாங்கள் மட்டும் எப்படி நினைக்க முடியும்..? இது ரசிகர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைப்படம் மட்டுமே. அவரது பெயரைத் தவிர அவரைப் பற்றி வேறெதுவும் இந்த திரைப்படத்தில் இல்லை. மக்கள் இந்தப் படத்தைப் பார்க்கும்போது அதை புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் எந்தவித தடங்கலும் இன்றி வெளியாகும் என்றும் நம்புகிறேன். பட வெளியீட்டு தேதி குறித்து இயக்குநரும், தயாரிப்பாளரும்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் ஆதித்யா மேனன், ‘ரஜினிகாந்த் ராவ்’ என்ற கூலிப் படை ஆளாக நடித்திருக்கிறார். இவர் தமிழில் ‘பொய்’, ‘வில்லு’, ‘நான் ஈ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









