Cast :
Mugen Rao
Preethi Asrani
Tanya Hope
Nitin Sathyaa
Surekha Vani
Sreejith Ravi
Anbu Mayilsamy Thirunavukarasu Ghajaraj
Sneha Gupta
Crew :
Producer : K Bindumadhavi
Co Producer : P Rajesh
Director : Balaram Krishna
Music Composer : D. Imman
Dop : Santonio Terzio
Editor: Sabu Joseph
Lyricists : Viveka, Pa. Vijay
Singers : Parvasti, Srinisha Jayaseelan
Choreographers : Sai Barathi & Shankar
Sound Mixing : Uday Kumar
Designs : Tuney John
PRO : Sathish Aim
ஹீரோயின் ப்ரீத்தி அசுராணி துணிச்சல்மிக்கவர். ஒரு மருத்துவக் கல்லூரியில் செவிலியராக படித்து வருகிறார். அதே கல்லூரியில் மருத்துவராக இருக்கும் முகேன் ராவ்வுடன் காதலில் இருக்கிறார். இவருக்கு அம்மா இல்லை. அப்பா திருநாவுக்கரசு மட்டுமே!
எஸ்.கே.ஹாஸ்பிடல் என்ற ஒரு மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தி வருகிறார் சுரேகா வாணி. இவருடைய ஒரே மகள்தான் தான்யா ஹோப். இவருடைய மருத்துவமனையில் தலைமை மருத்துவராக இருக்கிறார் ஆண்டனி என்ற நித்தின் சத்யா.
பணத்துக்காக எதையும் செய்யக் கூடியவர். மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழை, எளிய குடும்பப் பின்னணி கொண்ட நோயாளிகளிடம் பணம் பறிப்பதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்.
ஆனால், இதை சுரேகா வாணி ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை மூண்டிருக்கிறது.
அந்தப் பகுதி கவுன்சிலரின் தம்பி ஒரு அடாவடி செயலில் ஈடுபட அதை பிரீத்தி அஸ்ரானி செல்போனில் பதிவு செய்து நாடு முழுவதும் வைரலாக்கிவிடுகிறார். இதைப் பார்த்து கோபம் கொண்ட கவுன்சிலர் பிரீத்தியையும் அவரது தங்கையையும் நேரில் வந்து மிரட்ட இதுவும் வீடியோவில் பதிவாகி வைரல் ஆகிறது.
அந்தத் தொகுதியில் நடக்கும் தோர்தலில் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளரான கஜராஜ் நிற்கிறார். அவரது கட்சியை சேர்ந்தவரான அந்தக் கவுன்சிலர் பிரச்சினையை ஏற்படுத்தியதால் அவரை கட்சியை விட்டு நீக்குகிறார். இதனால் கவுன்சிலர் பிரீத்தியின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்.
கல்லூரியில் நடக்கும் ஒரு சம்பவத்தால் ப்ரீத்திக்கும், அவரது காதலன் முகேன் ராவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்படுகிறது. முடிவில் இருவரும் பிரிந்து விடுவோம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்.
அன்றைய இரவிலேயே பிரீத்தி காணாமல் போகிறார். அதே போல் அதே இரவில் தான்யா ஹோப்பும் காணாமல் போகிறார்.
திருநாவுக்கரசு தன் மகளைத் தேடி போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுத்துவிட்டு மகளுக்காகக் காத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் சுரேகா வாணியும் அதே போலீஸ் ஸ்டேஷனில் தன் மகளை காணவில்லை என்று ஆஃப் தி ரிக்கார்டாக புகார் கொடுக்காமல் விசாரிக்க சொல்கிறார்.
அன்றைய நாள் கல்லூரியில் முகேன் ராவும், ப்ரீத்தியும் சண்டையிட்டுக் கொண்டது எல்லாருக்கும் தெரிய வர முகேன் ராவிடம் போலீஸ் விசாரிக்கிறார்கள்.
அவர் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார்.
அதே நேரம் அந்தக் கல்லூரியின் கட்டுமான இடத்திலிருந்து ஒரு சடலம் கிடைக்கிறது. இந்த சடலம் குறித்தும் போலீஸ் விசாரிக்கத் துவங்குகிறார்கள்.
இறுதியில் என்ன நடந்தது? பிரீத்தியும், தான்யா ஹோப்பும் கிடைத்தார்களா? யார் அவர்களை கடத்தியது? முகேன் ராவ் பின்பு என்ன செய்தார்? கல்லூரியில் கிடைத்த அந்த சடலம் யாருடையது? என்பது இந்த சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் மீதமான திரைக்கதை.
சிறுமை கண்டு கோபம் கொள்ள வேண்டும் என்ற பாரதியின் வார்த்தைக்கு ஏற்ப ஒரு புரட்சி பெண்ணாக புதுமைப் பெண்ணாக நடித்திருக்கிறார் ப்ரீத்தி அஸ்ரானி.
கவுன்சிலரை வீடியோ எடுத்து விரட்டுவதில் இருந்து இறுதியில் கஜராஜ் செய்யும் கொலையை வீடியோவில் பதிவு செய்து அதன் மூலம் வரும் பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்ளும் வகையில் அவரது கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கான நடிப்பையும் குறைவில்லாமல் காட்டியிருக்கிறார் ப்ரீத்தி.
கல்லூரியில் தன்னுடன் படிக்கும் மாணவிக்கு நேரும் அவமானத்தை பொறுக்க முடியாமல் சக மாணவனையே அடித்துவிடும் ப்ரீத்தி, அதே கோபத்துடன் தன் காதலன் முகேன் ராவை எதிர்த்து பேசும்போதும் அவருடைய நடிப்பு சிறப்பு.
பாசக்கார அம்மாவின் பாசக்கார மகளாக நடித்திருக்கும் தான்யா ஹோப்புக்கு நடிப்பைக் காட்டுவதற்கு மிகப் பெரிய ஸ்கோப் இல்லை. சில காட்சிகளே என்றாலும் அவருடைய கேரக்டருக்கேற்ற நடிப்பைக் காண்பித்து இருக்கிறார்.
ஹீரோவான முகேன் ராவுக்கு இன்னும் அதிகப்படியான காட்சிகளை கொடுத்திருக்கலாம். கிடைத்த காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தான்யா ஹோப்பின் அம்மாவாக நடித்திருக்கும் சுரேகா வாணி இந்தப் படத்தில் எப்படி வந்து சேர்ந்தார் என்று தெரியவில்லை. ஆனால் இவருக்குப் பதிலாக தமிழ் நடிகைகளையே நடிக்க வைத்திருக்கலாம். எந்த ஒரு புதுமையும் எந்த ஒரு அட்ராக்ஷனும் அவரிடத்தில் இல்லை. உண்மையில் அவர் மிக அழகானவர். ஆனால் இந்தப் படத்தில் ஏன் இப்படி காட்டினார்கள் என்று தெரியவில்லை.
வழக்கமான பாசமிக்க அப்பாவாக திருநாவுக்கரசு தனியாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹீரோவாக இருந்து வில்லனாக புரமோட்டாகி இருக்கிறார் நிதின் சத்யா. தன்னுடைய வில்லத்தனத்தை அளவோடு கொடுத்திருக்கிறார். ரசிக்கும்படி உள்ளது.
இன்னோரு வில்லனான கஜராஜூம் தன் பங்கிற்கு ஒரு அரசியல்வாதியின் திமிரை காட்டி இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவு பொழுதிலேயே இருப்பதால் ஒரு மந்தமான மங்களான வெளிச்சத்தையே கொடுத்திருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் மட்டும் பிரைட்டாக கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
“மாமா வர்றியா” என்ற குத்துப் பாடல் காட்சியில் கலை இயக்கமும், ஒளிப்பதிவாளர் பணியும் சிறப்பு. நடனமும் அட்டகாசம்.
இமான் தன் இசையில் மெலடியாக ‘என் மகளே’ என்ற பாடலை கொடுத்து உருக வைத்திருக்கிறார். ‘லூதனா’ பாடலும் கேட்கும் ரகம்தான். இப்போதைய ஜென் ஸீ ரசிகர்களை கவரும்விதமாக “மாமா வர்றியா” என்று குத்து பாடலையும் போட்டு அசத்தியிருக்கிறார்.
சாபு ஜோசப் தன் படத்தொகுப்பு பணியையும் தன்னால் முடிந்த அளவுக்கு சரியாகவே செய்திருக்கிறார்.
படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் பல்ராம் கிருஷ்ணா ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் கதையை நான் லீனியர் முறையில் மாற்றி கொடுக்க நினைத்து படமாக்கி இருக்கிறார்.
ஆனால், அதில் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எப்படி சரி செய்வது என்பது தெரியாமல் விட்டுவிட்டதால் நமக்குப் பெரும் குழப்பம் ஆகிவிட்டது.
மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு துறையினர் சுரேகா வாணியை விசாரணைக்கு அழைத்து வருவது லாஜிக்கே இல்லாத ஒரு விஷயம்.
அதிலும் சுரேகா வாணியின் மருத்துவமனையின் கட்டுமானத்தில் இருந்து கிடைத்த ஒரு சடலத்தை வைத்து விசாரணை செய்ததாக அந்த அதிகாரிகள் சொல்லும்போது சிரிக்கத்தான் வேண்டி இருந்தது.
ஒரு சடலம் கிடைத்தால் அதை விசாரிப்பது நிச்சயம் லோக்கல் போலீசாகத்தான் இருக்கும்.
லோக்கல் போலீஸ் நிதின் சத்யாவின் கண்ட்ரோலில்தான் இருக்கிறார்கள். பின்பு அதை வைத்து போதை தடுப்புத் துறையினர் எப்படி, என்ன, எங்கே, யாரைத் தேடி, கண்டுபிடித்தார்கள் என்பதை விளக்கமாக சொல்லவில்லை.
இது மாதிரியான படங்களில் வசனங்களும், திரைக்கதையும் ரொம்ப, ரொம்ப முக்கியம். ஏதாவது ஒரு வசனத்தைப் பேச மறந்து விட்டால்கூட கதையில் குழப்பம் வந்துவிடும். அப்படித்தான் இந்தப் படத்திலும் குழப்பத்தை கொண்டு வந்து விட்டுவிட்டார் இயக்குநர்.
ஆனாலும் பரவாயில்லை. இறுதியில் ‘நல்லவன் வாழ்வான்; கெட்டவன் சாவான்’ என்ற கதையாக படத்தை சுபமாக முடித்து இருக்கிறார்.
‘நிறம்’ என்ற தலைப்பு இந்தப் படத்தின் கதைக்கு எந்தவிதத்தில் பொருத்தம் என்று தெரியவில்லை. அதற்காகவாவது ஏதேனும் ஒரு திரைக்கதையை இயக்குநர் அமைத்திருக்கலாம்.
கதை, திரைக்கதை, இயக்கத்தில் இன்னமும் கொஞ்சம் தம் கட்டி இருந்தால் இந்த ‘நிறம்’ இன்னமும் பளிச்சென்று தெரிந்திருக்கும்!
RATING : 3 / 5









