full screen background image

சிங்காரம் – சினிமா விமர்சனம்

சிங்காரம் – சினிமா விமர்சனம்

நடிகர்கள் :

யோகி பாபு
வேல ராமமூர்த்தி
எம்.எஸ். பாஸ்கர்
மரியா வின்சென்ட்
சார்ம்ஸ்
ஆர்த்தி கணேஷ்
மனோபாலா
கல்கி
மாரிமுத்து
படவா கோபி
சென்ட்ராயன்
டி.எஸ்.ஆர், தீபா சங்கர்
சபிதா ராய்
ஜாவா சுந்தரேசன்
கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு :

தயாரிப்பு நிறுவனம் – ராக் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள் – ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி
எழுத்து மற்றும் இயக்கம் – கே.வி. கதிர்வேலு
இசை – சாம் சி.எஸ்.
பாடல்கள் – விவேகா
ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ். குமார்
படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம் – குருராஜ்
சண்டைப் பயிற்சி – ஃபேன்டம் பிரதீப்
ஆடை வடிவமைப்பாளர் : என் ஜே சத்யா
பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அடித்தட்டு மக்களைவிடவும் மோசமான நிலைமையில் சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நரிக்குறவர் இனத்தினரின் வாழ்க்கையையும், அவர்கள் படும் கஷ்டங்களையும் இந்தப் படம் சொல்கிறது. இந்தப் படம் 1990-களின் காலக்கட்டத்தில் நடைபெறுகிறது.

எம்.எஸ்.பாஸ்கர் நாடோடிகளாக தெரியும் ஒரு நரிக்குறவர் கூட்டத்தின் தலைவர். இவருடைய மனைவி தீபா இவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன், யோகி பாபு. மேலும் ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, சபீதா ராய், ஜாவா சுந்தரேசன், கனிஷ்கர் மற்றும் பலரும் இந்த நரிக்குறவர் கூட்டத்தின் குடும்ப உறுப்பினர்கள்.

இப்போது இவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி அருகில் இருக்கும் அங்கலக்குறிச்சி என்ற கிராமத்திற்கு வருகிறார்கள். அந்த ஊரின் தலைவராக இருப்பவர் வேல ராமமூர்த்தி. அன்றைய ஆளும் கட்சியின் முன்னால் எம்.பி. ரொம்ப நல்ல மனிதர். அவருடைய உதவியினால் அந்த ஊரிலேயே ஒரு இடத்தில் டென்ட் போட்டு குடியிருக்கிறார்கள் இந்த நரிக்குறவர் மக்கள்.

அந்த ஊரின் எம்.எல்.ஏ.மாரிமுத்து. அவருடைய தம்பி சென்ராயன். இவர் கொஞ்சம் சபலப் பேர்வழி. இவர் நரிக்குறவர் கூட்டத்தில் இருக்கும், எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் இருவரையும் கடத்திச் செல்லப் பார்க்கிறார். அந்த சமயம் யோகி பாபு இவர்களை அடித்து அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.

பொது மக்களிடம் லஞ்சம் வாங்கி வருவதால் எம்.எல்.ஏ. மாரிமுத்து மீது வேல ராமமூர்த்திக்கு கோபம் வருகிறது. பகை உண்டாகிறது. மாரிமுத்து மீதான புகார் முதலமைச்சர்வரையில் சென்றதால் தம்பி சென்றாயனை அடக்கி வாசிக்கும்படி சொல்கிறார் மாரிமுத்து.

ஒரு பக்கம் யோகி பாபுவும் அவருடைய கூட்டத்தினரும் ஊருக்குள் வந்து பாசி மணி, கருக மணிகளை விற்கிறார்கள். கடையில் விற்கும் அரிசியை வாங்க காசில்லாததால் ரேஷன் கடையில் அரிசி வாங்க நினைக்கிறார்கள். ஆனால் இவர்களது குடியிருப்பு நிரந்தரமான இடம் இல்லாததால் தாசில்தார் ரேஷன் கார்டினை தர மறுக்கிறார்.

இந்த நேரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் வாங்கி இருந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால், அந்தப் பரிசு பணம் விழுந்ததுகூட தெரியாமல் அதற்கு முந்தைய நாள் எம்.எஸ்.பாஸ்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார்.

யோகி பாபு தன்னுடைய அப்பா ஜெயித்த அந்த லாட்டரி சீட்டை வைத்து ஒன்றரை கோடி பணத்தை பெற முயல்கிறார். ஆனால், இருப்பிடச் சான்றிதழ் இல்லாததால் அவரால் வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க முடியவில்லை.

இப்போது இவருக்கு உதவ முன் வரும் ராமமூர்த்தி, தனக்கு சொந்தமான ஐந்து சென்ட் நிலத்தை யோகி பாபு பெயருக்கு எழுதி கொடுத்து அவருக்கு நிரந்தர முகவரியை ஏற்படுத்தி கொடுத்து இந்த ஒன்றரை கோடி ரூபாயை யோகி பாபு பெறுவதற்கு பெரும் உதவி செய்கிறார்.

அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் வேல ராமமூர்த்தி நிற்பதற்குத் தயாராகிறார். இன்னொரு பக்கம் படவா கோபியும், மாரிமுத்துவும் அவரை எதிர்த்து நிற்கிறார்கள். வேல ராமமூர்த்தி இருக்கும் வரையிலும் தான் ஜெயிக்க முடியாது என்று நினைக்கும் மாரிமுத்து அவரை கொலை செய்ய முயல்கிறார்.

அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? யோகி பாபு அடுத்து என்ன செய்தார்?தேர்தலில் யார் வெற்றி பெற்றது? நரிக்குறவர் குடும்பங்களின் கஷ்டங்கள் தீர்ந்ததா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நரிக்குறவர் குடும்பத்தின் கதை என்பதால் மொத்த குடும்பத்திற்கும் அழகான வசனங்களை அவர்களின் ஸ்லாங்கிலேயே பேச வைத்து அழகாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

ஹீரோ யோகி பாபுவின் தோற்றம் இந்தக் கதாப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. ‘மண்டேலா’ படத்திற்கு பின்பு தன்னுடைய அழுத்தமான குணச்சித்திர நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். சில இடங்களில் வழக்கமான யோகி பாபு இருந்தாலும் பெருவாரியான காட்சிகளில் அவரது நடிப்பு நம்மைப் பெரிதும் கவர்கிறது.

கத்திக் கூப்பாடு போட்டு பேசுவதும், அடுத்தவனை கிண்டல் செய்து நக்கலடித்துப் பேசுவதும் யோகி பாபுவின் ஒவ்வொரு படத்திலும் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அதை இல்லாமல் செய்து எதார்த்தமான வசனங்களினால் அவரை அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இறுதிக் காட்சியில் யோகிபாபு, இளவரசுவிடம் பேசும்பொழுது சிலை போல அமர்ந்திருக்கும் அந்த ஒரு காட்சி மட்டுமே தவறானது. மற்றவை அனைத்திலும் யோகி பாபுவின் ராஜ்ஜியம்தான்.

அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஒரு சில காட்சிகளில் உணர்ச்சிப் பிழம்பாக மாறி நரிக்குறவர் சமுதாயத்தின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ள வைத்திருக்கிறார். இந்தக் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களும் நரிக்குறவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி பேசுவார்களோ, எப்படி நடந்து கொள்வார்களோ… அதே உடல் மொழியோடு அதே வசன உச்சரிப்போடு யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

மனோபாலா நடித்த கடைசி திரைப்படம் இதுதான். அவரை மாதிரியான ஒரு சிறந்த காமெடியும், குணச்சித்திர நடிப்பும் கலந்த நடிகர்கள் விரைவாக விடைபெற்றது தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய பேரிழப்பு.

ஊரில் பெரிய மனிதராக நடித்திருக்கும் வேல ராமமூர்த்தியின் அழுத்தமான நல்லவன் நடிப்பு நம்மை கவருகிறது. இன்னொரு பக்கம் சிரித்துக் கொண்டே வில்லத்தனம் செய்யும் படவா கோபியும், மாரிமுத்துவும் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். மாரிமுத்துவின் இழப்பும் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் பேரிழப்புதான். சென்றாயன் காமெடியை கைவிட்டு வில்லனாக ப்ரமோஷன் பெற்றிருக்கிறார். அவருடைய வில்லத்தனத்தை இனி வரும் படங்களில் காணலாம்.

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு மீடியம் பட்ஜெட் படங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படியேதான் இருக்கிறது. ஆனால், இதைவிடவும் சிறந்த தரமான ஒளிப்பதிவை பல திரைப்படங்கள் கொடுத்திருக்கின்றன. அதுவும் பொள்ளாச்சி பகுதி என்பதால் இதைவிடவும் அழகாக காட்டி இருக்கலாம். 1990-களில் நடக்கும் கதை என்பதால் அதிகமாக வெளிப்புற காட்சிகளை படமாக்காமல் விட்டுவிட்டார்கள்.

சாம் சி.எஸ்.ஸின் இசையில் பாடல்கள் ஓகே என்று சொல்லலாம். விவேகாவின் பாடல் வரிகள் காதுகளில் ஒலிக்கின்றன. இந்தப் படம் அரசியல் கலந்த சமூக படம் என்பதை மனதில் வைத்து அதற்கு ஏற்றார் போல காட்சிகளை தொகுத்து அந்த மனநிலையை கடைசிவரையில் நமக்குக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.

குருராஜின் கலை இயக்கத்தை வெகுவாகப் பாராட்ட வேண்டும். நரிக்குறவர் கூட்டம் என்பதால் அவர்களுடைய உடை, இருப்பிடம், அணிந்திருக்கும் பாசி மணி, கருக மணி அனைத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து கொடுத்திருக்கிறார். இதற்காகவே இவருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

நரிக்குறவர் இனத்தவரின் பிரச்சனைகளை பேச வந்த திரைப்படம் இடைவேளைக்கு பின்பு அதிகாரத்தை அடைந்தால் மட்டும்தான் உங்களுடைய பிரச்சினைகளை நீங்கள் நிறைவேற்ற முடியும் என்று வேல ராமமூர்த்தி சொல்லும்போது படத்தின் தளமும் மாறிவிடுகிறது.

அரசோடு மோதி இவர்கள் ஜெயித்து தங்களுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டதாக காட்டியிருந்தால், படம் மிக இயல்பாக இருந்திருக்கும், ஆனால் லாட்டரியில் விழுந்த ஒன்றரை கோடி ரூபாய் பணம் மட்டுமே அவர்களை அவர்களை நரிக்குறவர் இனத்தில் இருந்து வெளியேற்றி சக மனிதர்களைப் போல கொண்டு வந்திருக்கிறது என்று காட்டுகிறது படத்தின் தன்மையை சற்றே கீழே இறக்கிவிட்டது.

ஆனாலும் பஸ் ஓனர், ஹோட்டல் ஓனர் என்று பெரும் தொழிலதிபராக இருந்த பின்பும் இளவரசுவின் மகள் திருமணத்தில் யோகி பாபுவை ஊர்க்காரர்கள் அவமானப்படுத்தி, யோகிபாபு நின்றிருந்த இடத்தை கழுவி சுத்தம் பண்ணும்படி சொல்லி அவமானப்படுத்தும் காட்சியில்  இயக்குநர் தான் சொல்ல வந்ததை மிக சரியாக சொல்லி இருக்கிறார்.

படத்தின் துவக்கத்திலேயே நரிக்குறவர்களின் பின்புலம், அவர்கள் எப்படி உருவானார்கள், அவர்களுடைய மூதாதையர்கள் யார், அவர்கள் எங்கிருந்து எப்படி தமிழகம் வந்தார்கள்… என்கின்ற வரலாற்று உண்மையும் இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

இது நிச்சயம் தியேட்டருக்கு வரும் பொது மக்களுக்கு ஒரு பொது அறிவை கொடுத்தது போலவே இருக்கிறது. அந்த வகையில் இயக்குநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அதேபோல் கிளைமாக்ஸில் நரிக்குறவர் இனத்தினரை மோடி தலைமையிலான ஆட்சி வந்த பின்புதான் எஸ்.சி. வகை ஜாதியோடு அவர்களை இணைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருப்பதாக இயக்குநர் ஸ்லைடு போட்டு காட்டி இருப்பது பாராட்டுக்குரியது.

கடைசியில் அவர்கள் விரும்பியதை இந்திய அரசு இத்தனை வருட காலத்திற்கு பின்பு செய்து கொடுத்திருக்கிறது என்பது நாம் இந்தப் படத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயம்.

அந்த வகையில் இந்த படம் நிச்சயமாக நாம் பார்த்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டிய ஒரு திரைப்படம்.

மிஸ் பண்ணி விடாதீர்கள்!

RATING : 4 / 5

Our Score