full screen background image

எனிமி ஆஃப் த ஸ்மெக்ளர் – சினிமா விமர்சனம்

எனிமி ஆஃப் த ஸ்மெக்ளர் – சினிமா விமர்சனம்

CAST :

JD CHAKKARAVARTHY AS LINGAM
LAL AS MATHEW BHAI
RADHIKA SARATHKUMAR AS SARADHA
SARAN SAKTHI AS AMAR
BALA SARAVANAN AS DHEENA
SMEHA AS PAVITHRA
KAALI VENKAT AS SELVAM
JAFFER SADIQ AS JAFFER
MIME GOPI AS RAJAN
SAMAYA MURALI AS MURALI KRISHNA

CREW

DIRECTION & ORIGINAL BACKGROUND SCORE- T SAMAYA MURALI
DOP – KAWIN BASKER
EDITOR – SRI WATSON
MUSIC – SAM DANIEL
STUNT – THAVASI RAJ
ART DIRECTOR – CHITTI BABU
CHOREOGRAPHY – DINESH
COLORIST – KIRUBARAJ PRINCE
SOUND MIXING – HARISH
PUBLICITY DESIGN – RANJITH KUMAR
PRO – NIKIL MURUKAN

இந்தியாவில் துறைமுகங்கள் வழியாக செய்யப்படும் கடத்தல்கள் பற்றிய உண்மை கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது.

படத்தின் ஹீரோவான சரண் சக்தி வேலையில்லாத பட்டதாரி. அவருடைய அம்மா ராதிகா. இவர்கள் வசிக்கும் வீடு சரணின் சித்தப்பா பெயரில் இருப்பதால் வீட்டை காலி செய்து தரும்படி அவர் டார்ச்சர் செய்கிறார். வேறு வீட்டுக்கு போக முடியாத சூழல். பொருளாதார நெருக்கடி. இதில் சரண் சக்தியும் வேலையில்லாமல் சும்மாவை சுற்றிக் கொண்டிருப்பதால் ராதிகாவால் சமாளிக்க முடியாத நிலைமை.

சரண் சக்தியின் நண்பரான பால சரவணன் சென்னை துறைமுகத்தில் இருக்கும் கஸ்டம்ஸ் செலவுலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். அந்த அலுவலகத்தில் ஏ.சி.யாக இருக்கும் வினோதினிக்கு அலுவலக வேலைகளில் உதவி செய்து வருகிறார் பால சரவணன். காளி வெங்கட் இதே கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பியூனாக வேலை செய்கிறார். இவருடைய தங்கையான ஹீரோயின் ஸ்மேகா, ஒரு சந்தர்ப்பத்தில் ஹீரோவுடன் பழக வேண்டி வர… சினிமா பாணியில் வழக்கமான காதல் இருவருக்குள்ளும் ஏற்படுகிறது.

பால சரவணன் தன்னுடைய கஸ்டம்ஸ் அலுவலக வேலையை வைத்து போதை பொருள் கடத்தும் கண்டெயினர் லாரிகளை மறைமுகமாக விடுவிக்கும் வேலையை செய்து வருகிறார். இதைச் செய்வதால் பால சரவணனுக்குக் கிடைக்கின்ற கமிஷன் தொகை சொற்பம்தான். அதனால் இந்த வேலையை நாமே ஏன் முன்னெடுத்து செய்யக்கூடாது என்று சரண் சக்தி பால சரவணனைத் தூண்டிவிடுகிறார். இதன் விளைவாக பல சரவணன், சரண் சக்தியை போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைவரான ஜே.டி.சக்கரவர்த்தியிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

சக்கரவர்த்தி நண்பர்கள் இருவரின் திறமையை சோதித்து பார்ப்பது போல ஒரு வேலையை கொடுக்க அதை கச்சிதமாக செய்கிறார்கள். அதன் பின்பு அடுத்தடுத்து சின்ன பட்ஜெட்டில் உள்ள கடத்தல் பிசினஸை இவர்களிடம் ஒப்படைக்க இவர்களும் அதை செய்து கமிஷன் பணத்தை பெறுகிறார்கள். அந்தப் பணத்தை வைத்து தன்னுடைய வீட்டையே மீட்டு விடுகிறார் சரண் சக்தி.

அதே நேரம் துபாயில் இருக்கும் போதை மருந்து டான் லால், 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்தை குஜராத்தில் இருக்கும் முந்த்ரா துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கிறார். அதை அந்தத் துறைமுகத்திலிருந்து வெளியில் கொண்டு வர வேண்டிய பொறுப்பு சக்கரவர்த்தியிடம் ஒப்படைக்கப்படுகிறது.

சக்கரவர்த்தி அதை சரண், பால சரவணன் இருவரிடமும் ஒப்படைத்து சரக்கை வெளியில் கொண்டு வரச் சொல்கிறார். ஆனால் சரக்கு மிஸ்ஸிங் ஆகிறது. மிகப் பெரிய தொகையை கொண்ட சரக்கு என்பதால் உலகம் முழுவதும் உள்ள போதை மருந்து கடத்தல் தலைவர்கள் அனைவரும் பதறுகிறார்கள். இதனால் லால் சென்னைக்கு வந்து இந்தக் கடத்தல் பற்றி துப்பு துலக்குகிறார்.

இதன் பின்பு என்ன நடந்தது..? அந்த சரக்கு இப்போது எங்கே இருக்கிறது? யார் அதை கடத்தியது? சரண் சக்தி மற்றும் பால சரவணனின் நிலமை என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.

ஹீரோ சரண் சக்தி நடிப்பிலும், ஆக்ஷனிலும் வெகுவாக தேறி இருக்கிறார். எமோஷன் காட்சிகளிலும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருக்கிறார். இவரது அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா சரத்குமார் தனது அனுபவமிக்க நடிப்பின் மூலமாக அம்மாக்களின் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அவர் காட்டுகின்ற மருமகளை விட்டுக் கொடுக்காமல் அவர் பேசும் காட்சி, மனதைத் தொடுகிறது.

ஹீரோயின் ஸ்மேகா புதுமுகம் என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பினை கொடுத்திருக்கிறார். ஆனால், டப்பிங் வாய்ஸ்தான் ஒட்டவில்லை. 

பால சரவணன் நண்பன் என்ற கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார். கூடவே கிளைமாக்ஸ் வரையிலும் ஹீரோவுடன் வந்து நண்பனுக்காகவும், நட்பு என்ற வார்த்தைக்காகவும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

சரணின் மைத்துனராக நடித்திருக்கும் காளி வெங்கட் தங்கை மீதான பாசத்தையும் விடமுடியாமல், கோபத்தையும் கட்டுப்படுத்த முடியாமல்… பரிதவிக்கும் ஒரு அண்ணன் கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார்.

கஸ்டம்ஸ் ஆபீஸில் ஆபிஸராக வேலை செய்யும் வினோதினி வைத்தியநாதன் தன்னுடைய தனித்த அடையாளத்தை தான் இருக்கின்ற காட்சிகளில் காட்டி இருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் ஜே.டி.சக்கரவர்த்தி, லால் ஆகியோரும் தங்களுடைய கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநரான சமய முரளி நேர்மையான கஸ்டம்ஸ் ஆபீஸராக நடித்துள்ளார்.  இவர் நடித்துள்ள பல காட்சிகள் அபத்தமாக இருப்பதால் ரசிக்க முடியவில்லை. பெட்டர் லக் நெக்ஸ் டைம்!

கவின் பாஸ்கரின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. துறைமுக காட்சிகளை ட்ரோன் ஷாட்டுகளில் காட்டி அழகுபடுத்தி இருக்கிறார்.

சாம் டேனியலின் இசையில், ஒரு காதல் பாடலும், சோகப் பாடலும் திரையில் ஒலிக்கிறது. ஆனால் மனதில் நிற்கவில்லை. இயக்குநர் சமய முரளியே பின்னணி இசையமைத்திருக்கிறார். அது இருந்ததே தெரியவில்லை.

ஸ்ரீவத்சனின் எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கூர்மை இருந்திருக்கலாம். சண்டை காட்சிகளில் கச்சிதமான எடிட்டிங் செய்யப்படவில்லை என்பது  நன்றாகவே தெரிகிறது.

குஜராத்தில் இருக்கும் மந்த்ரா துறைமுகம் அதானிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பின்புதான் அங்கே மாதந்தோறும் மிகப் பெரிய அளவுக்கு போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதுவும் ஒரு சமயம் 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்து பிடிபட்டது. இது இந்தியா முழுவதும் பேசப்பட்டு, பாராளுமன்றத்திலும் கண்டனங்கள் ஒழித்தன.

அந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்குநர் எடுத்திருக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் டி.சமய முரளி உண்மையில் ஐ.ஆர்.எஸ். அதிகாரிதான். கஸ்டம்ஸில் பணியாற்றியவர். தான் சந்தித்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

அரசுகள் சம்பந்தப்பட்ட கதை, திரைக்கதையில் கொஞ்சம் உண்மை தன்மை இருந்தால்தான் அந்த படம் சிறப்பு என்று நம்மால் சொல்ல முடியும். இந்தப் படத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியான சமய முரளி, சரண் சக்தியை பிடிப்பதற்காக அவருடைய மனைவியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து சிறை வைக்கிறார். சக்தியின் நண்பர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து அடித்து உதைக்கிறார். இதெல்லாம் நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை. முற்றிலும் தவறான ஒரு லாஜிக்.

கஸ்டம்ஸ் மத்திய அரசின் துறை. போலீஸ் மாநில அரசின் துறை. கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இடமே இல்லை. அதோடு அவர்களுக்கு விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்துவதற்கு சட்டத்திலும் இடமில்லை. நிஜத்திலும் அது முடியாது. ஆனால் அதையெல்லாம் தானே ஹீரோவாக நடித்ததினால் சினிமாவில் அதைக் காட்டியிருக்கிறார் சமய முரளி. இதுவே படத்திற்கு மிகப் பெரிய பேக் டிராப்பாக ஆகிவிட்டது.

படத்தை இன்னமும் கொஞ்சம் உண்மைத் தன்மையோடு, கூடுதலான சிறந்த இயக்கத்தில் உருவாக்கியிருக்கலாம்.

RATING : 2.5 / 5

Our Score