நடிகர் & நடிகைகள் :
அருண் கார்த்தி( ஜெகே)
எனாக்க்ஷி கங்குலி(சபிதா)
கருப்பு நம்பியார்( நாகராஜ்)
சேரன்ராஜ்(மதிமாறன்)
சரவணசக்தி(வாட்ச்மேன்)
செ. ரா. ராஜேஷ்(சோலை ராஜ்)
கஜராஜ்(டாக்டர்.சரவணன்)
சுருளி (சுருளி)
உமர்(பால்காரன்)
வினோத்(வினோத்)
‘அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய்’, ‘கலன்’, ‘நாதுராம் கோட்சே’, ‘போலிஸ் பேமிலி’, ‘ஆட்ரிக்கா(மலையாளம்)’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் திரு. ஜெயக்குமார் தங்கவேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘சாதுவன்’ படத்தின் இசையமைப்பாளர் சதாமுருகன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை சதாமுருகன், சந்தோஷ் ஆறுமுகம் எழுதியுள்ளனர்.
‘அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய்’, ‘கிளாஸ்மேட்ஸ்’, ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் படத் தொகுப்பாளர். எம். எஸ்.செல்வா மற்றும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’, ‘இரு முனை’, ‘அந்தாதி’, ‘பகையறு’, ‘இன்ஸ்பெக்டர் சூரியா’ ஆகிய படங்களின் எடிட்டர் சி.ஆர்.புவனேஷ் இருவரும் இந்தப் படத்தில் எடிட்டர்களாக பணி செய்துள்ளார்.
டிசைனர் விட்டல் ரமணன், பத்திரிக்கை தொடர்பு–சரண், தயாரிப்பு–சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி, ஓம் செல்வா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் செ.ரா.ராஜேஷ்.
சைக்காலஜிக்கல் திரில்லர் டைப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருமணம் நிச்சயமாகியிருக்கும் இளம் காதல் ஜோடிகளான அருண் கார்த்தியும், எனாக்சா கங்குலியும் திருமணத்திற்கு முந்தைய போட்டோ சூட் எடுப்பதற்காக கொடைக்கானல் வருகின்றனர்.
அங்கே எனாக்சியின் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ரிசார்ட்டில் தங்குகின்றனர். மறுநாள் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் போட்டோஷாப் நடத்துகிறார்கள்.
ஆனால் அன்று மாலையே தன்னுடைய காதலியை காணவில்லை என்று அருண் கார்த்திக் போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் கொடுக்கிறார்.
அவர் கொடுக்கும் புகாரில் வீட்டில் இருந்த தன் காதலியா யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவதுபோல கதை சொல்கிறார். போலீசார் குழம்பிப் போய் அந்த வீட்டுக்கு நேரில் வந்து விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். விசாரிக்க, விசாரிக்க.. கதை வேறு வேறுவிதமாக விரிகிறது.
உண்மையில் என்ன நடந்தது? கடைசியில் காதலி கிடைத்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் கலந்த சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படம்.
ஹீரோவாக நடித்திருக்கும் அருண் கார்த்தி உயர்வாக எதார்த்தமாக நடித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் மட்டும் கொஞ்சம் எமோஷன்சை கொட்டித் தீர்த்து இருக்கிறார். கிளைமாக்ஸ் கட்சியிலும் ஒரு மனநோயாளி எப்படி இருப்பாரோ கிட்டத்தட்ட அது போலவே நடித்திருக்கிறார்.
ஹீரோயினாக நடித்திருக்கும் எனாக்சி கங்குலி அறிமுக நடிகை என்பதால் டப்பிங் மட்டும் சொதப்பிவிட்டது. சில ரொமான்ஸ் காட்சிகளில் கவனர் ஈர்க்கிறார். அதிக நடிப்புக்கான ஸ்கோப் கிடைக்கவில்லை என்பதால் அடுத்தடுத்த படங்களில் இவரது நடிப்பை நாம் பார்ப்போம்.
சேரன் ராஜ் 1001-வது முறையாக இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் இடத்தில் நடித்திருக்கிறார். மேலும் மன நல மருத்துவராக நடித்திருக்கும் கஜராஜ், வாட்ச்மேனாக நடித்திருக்கும் சரவணன் சக்தி, உறியடி சுருளி, வினோத் இவர்களுடன் இயக்குநர் செ.ராஜேஷூம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இயக்குநர் இன்னமும் கொஞ்சம் முயற்சி எடுத்து சிறந்த முறையில் இயக்கி இருந்தால் இவர்களது நடிப்பை பற்றியும் நாம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
படம் முழுவதும் கொடைக்கானலில் நடப்பதால் ஜெயக்குமார் தங்கவேலுவின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக உள்ளது. ஆனால், இன்னமும் கொஞ்சம் கொடைக்கானலுக்குள் காட்சிகளை வைத்திருந்தால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்திருக்கும்.
சதா முருகனின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை சஸ்பென்ஸ் திரில்லரை கூட்டுவதைப் போல சில காட்சிகளில் நம்மை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது.
படத் தொகுப்பாளர்களான எம்.எஸ்.செல்வா, சி.ஆர்.புவனேஷ் இருவரும் இயக்குநர் எடுத்து வந்த காட்சிகளை முடிந்த அளவுக்கு லேசாக பயமுறுத்தும் வகையில் தொகுத்து அளித்திருக்கிறார்கள்.
இன்றைய ஏ.ஐ. காலக்கட்டத்தில் ஒரு முழு நீள படத்தையே உருவாக்கிவிடலாம் என்ற நிலையில் சில காட்சிகளை மட்டுமே அந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.
சைக்காலஜிக்கல் கதைப்படி இதை உருவாக்கி இருப்பதால் மர்டர் ஹிஸ்டரி எதுவும் இல்லாமல் கடத்தல் தேடுதல் வேட்டையாக படம் சென்று இருப்பதால் திரில்லிங் அனுபவம் இந்தப் படத்தில் குறைவு.
அதோடு இந்தப் படத்தில் காட்டப்படும் போலீஸ் விசாரணை மிக மந்தமாக இருப்பதோடு இப்படி ஒரு விசாரணை திரைக்கதை வேறு எந்த படத்தில் நாம் பார்க்காதது என்பதால் நமக்கு சலிப்பு தட்டிவிட்டது.
எத்தனையோ போலீஸ் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. இயக்குநர் அவைகளில் 10 சதவீத படங்களையாவது பார்த்திருந்தால் நிச்சயம் இது மாதிரியான லாஜிக்கே இல்லாத விசாரணை காட்சிகளை மாற்றி அமைத்திருக்கலாம். இதனாலேயே இந்தப் படத்தில் அதிகமாக நம்மால் ஒன்ற முடியவில்லை. ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு திடீர் திருப்பம் வரும்பொழுது ரசிக்க முடிந்திருக்கிறது.
அந்தக் கிளைமாக்ஸ் கட்சியைப் போலவே படம் முழுவதையும் ஒரு துடிப்புடன் இயக்குநர் இயக்கி இருந்தால், இந்தப் படத்தை இன்னமும் வெகுவாக பாராட்டியிருக்கலாம்!
RATING : 2.5 / 5









