full screen background image

தாய் நிலம் – சினிமா விமர்சனம்

தாய் நிலம் – சினிமா விமர்சனம்

நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் டாக்டர் அமர் ராமச்சந்திரன், நேகா அமர் இருவரும் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்,

இவர்களுடன் பாலாசிங், தீபக் பிரபாகர், பத்மஜா, நிமிஷா நம்பியார், குரு தட்சணா, தளபதி ஆனந்த், சரவணன் சொக்கம்பட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு – பிரசாந்த் பிரணவம், இசை, பின்னணி இசை – ஔசேப்பச்சன், படத் தொகுப்பு – தீஜோ பி. வர்கீஸ், கலை இயக்கம் – கைலாஸ் திரிப்பூனிதுறை, மிக்ஸிங் – ராஜாகிருஷ்ணன். மேலும், பல்வேறு தொழில் நுட்பக் கலைஞர்களும் இணைந்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

Toronto Tamil Film Festival – Canada, Luleå International Film Festival – Sweden, Catharsis International Film Festival – Belgium ஆகிய திரைப்பட விழாக்களில் இப்படம் Official Selection ஆக இடம் பெற்றுள்ளது.

மேலும்,

Crown Wood International Film Festival-ல் Best Indian Film,

Seventh Art Independent International Film Festival-ல் Best Original Score,

Tamil Nadu International Film Festival-ல் Best Debut Film maker மற்றும் Best Narrative Feature Film – Special Mention,

Cosmos International Film Festival-ல் Best Cameraman மற்றும் Best Debut Director

உள்ளிட்ட பல அங்கீகாரங்களையும் இப்படம் பெற்றுள்ளது.

இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய் நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் இந்த ‘தாய் நிலம்’.

இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறு வயது மகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்தத் ‘தாய் நிலம்’ படம் உருவாகியுள்ளது.

தாய் நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழலில், அந்த தந்தையும், மகளும் சந்திக்கும் சவால்களையும், அவர்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் அன்பையும் இத்திரைப்படம் பேசுகிறது.

எல்லாவற்றையும் இழந்து தமிழ்நாட்டிற்கு வரும் அந்த தந்தையின் மிகப் பெரிய ஆசை, தனது மகளை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான்.

அதற்காக அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள், வாழ்க்கையில் கிடைக்கும் புதிய வாய்ப்புகள், அருகில் இருக்கும் நல்ல மனிதர்களின் உதவி என அவர்களின் பயணம் நகர்கிறது.

தாய் நிலத்தில் கிடைக்காத சுதந்திரத்தையும், புதிய வாழ்க்கையில் அவர் சந்திக்கும் அனுபவங்களையும், அதே நேரத்தில் தாய் நிலத்தின் நினைவுகள், அவரைவிட்டு ஒருபோதும் நீங்காததையும், அழுத்தமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இலங்கை மக்களின் வாழ்வில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் வலிகள் குறித்து அதிகம் பேசப்படாத சில அம்சங்களையும் ‘தாய் நிலம்’ திரைப்படம் தனது கதையின் வழியாக முன் வைக்கிறது.

2008-ம் ஆண்டு தமிழ் ஈழத்தில் கடைசி சுதந்திரப் போராட்டமாக முள்ளிவாய்க்கால் போர் நடந்து முடிந்த சமயத்தில் தன்னுடைய மனைவியை, குடும்பத்தை இழக்கிறார் அமர்.

இப்போது எஞ்சி இருப்பது அவருடைய ஒரேயொரு மகள் மட்டும்தான். தன்னுடைய மகளையும் இழக்க விரும்பாத அவர் தன்னுடைய மகளுடன் கடல் கடந்து தமிழகத்திற்கு வந்து இங்கே இருக்கும் அவருடைய உறவினரிடத்தில் மகளை ஒப்படைத்து அவளை நல்லவிதமாக வாழ வைக்கலாம் என்ற நினைப்பில் ஒரு இரவில் கள்ளத் தோணியில் தமிழகத்திற்கு தப்பி வருகிறார்.

வந்த இடத்தில் ராமேஸ்வரத்தில் பொதுமக்களால் மீட்கப்படுகிறார். போலீசாரால் விசாரிக்கப்படுகிறார். இவருடைய சோகக் கதையை கேட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இவரை அப்படியே அவரது விருப்பப்படி வெளியே அனுப்பி விடுகிறார்.

தன்னுடைய மகளுடன் தன்னுடைய உறவினரை தேடி அலையும் அவர், உறவினரைக் கண்டுபிடிக்க முடியாமல் கடைசியாக ஒரு ஊரில் வந்து ஐக்கியமாகிறார்.

அந்த ஊரின் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் பயணிகள் நிழற்கூடம் இருக்கிறது. அங்கேயே தனது மகளுடன் தங்குகிறார். அதற்கு அருகில் பெட்டிக்கடை நடத்தும் பாலா சிங்கின் உதவியுடன் தன்னுடைய வாழ்க்கையை நடத்த முனைகிறார்.

ஆட்டோ கழுவுதல், தெரு தெருவாக சென்று காய்கறிகளை விற்பது என்று சின்ன சின்ன வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வரும் அவர் தன்னுடைய மகளையும் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகிறார்.

ஆனால் இதன் பின்புதான் விதி அவரது வாழ்க்கையில் விளையாட ஒரு மிகப் பெரும் சோகம் ஏற்படுகிறது. அது என்ன சோகம்? அந்த சோகத்தை அவர் தாண்டினாரா? இல்லையா? அவருடைய மகள் என்னவானார்? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

அகதி அப்பாவாக நடித்திருக்கும் அமர் ராமச்சந்திரன் தன்னுடைய முக பாவனைகளிலேயே தன்னுடைய நடிப்பை அழகாக காட்டி இருக்கிறார். அவருடைய நிறுத்தி நிதானமான வசன உச்சரிப்பும்கூட அவருடைய நடிப்பின் ஒரு பகுதியை காட்டுகிறது. இலங்கை தமிழர்களுக்கே உரித்தான அந்த வசன உச்சரிப்பு ஒரு பக்கம் நம்மை ரசிக்க வைத்தாலும் அதன் கூடவே இழையோடும் அவருடைய சோகக் கதையும், அவர் அனுபவித்திருக்கும் வலியும், வேதனையும் நமக்குத் தெரிய வரும்போது நம் மனம் கனக்கிறது.

ஈழப் போரில் தன்னுடைய குடும்பம் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறந்த கதையை அவர் பாலாசிங்கிடம் சொல்லும்பொழுதும் அது தொடர்பான சின்ன சின்ன விபரணைகள், வசனங்கள், காட்சிகளின் போது நம் மனதை தொடும் அளவுக்கு நடிப்பை காண்பித்து இருக்கிறார் அமர் ராமச்சந்திரன்.

இவருடைய மகளாக ‘தமிழினி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நேஹா அமர், சினிமாவைக்கேற்ற முகமாக இருக்கிறார். அவருக்கென்று தனியான கேரக்டர் ஸ்கெட்ச் எதுவும் இல்லாமல் அந்த வயதுக்குரிய ஒரு மகளாக என்ன நடிப்பு நடிக்க வேண்டுமோ அதையே செய்திருக்கிறார்.

அகதிகளாக இருப்பவர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை இந்தியாவில் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு கிராமத்தில் இருப்பவர்களை வைத்து நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவ்.

பெட்டிக்கடை வைத்திருக்கும் பாலா சிங், அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு பணம் இல்லை என்றாலும் மனம் இருந்தால் போதும் என்ற நிலைமையில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கை ஊட்டி வாழ வைக்கும் ஒரு கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார்.

படத்தில் இடம் பெற்றிருக்கும் மற்றைய கதாபாத்திரங்களில் யாருமே கெட்டவர்கள் இல்லை என்பது இந்தப் படத்தின் ஒரு ஸ்பெஷல்.

ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பெர்னவ் ஒவ்வொரு காட்சியியையும் மிக எளிமையாக கையாண்டு அழகான ஒளிப்பதிவினை கொடுத்திருக்கிறார். இவர்கள் அகதியாக வாழுகின்ற அந்த இடத்தில் பல்வேறுவிதமான கோணங்களில் அந்த இடத்தை அழகுபட காண்பித்து இருக்கிறார். அதோடு அமர் மற்றும் அவரது மகளாக நடித்தவர், இருவரையும் பல்வேறு கோணங்களில் காண்பித்து நமக்கு போர் அடிக்காத வகையில் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் மகள் நேஹா பள்ளிக்கு செல்கின்ற நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து அவசரமாக கிளம்பி செல்கின்ற பொழுது அவர் முகத்தில் தெரிகின்ற அந்த நடிப்பை அழகாக பதிவு செய்து நம் மனதையும் கவர்ந்துவிட்டார்.

மலையாளத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான அவுசேப்பச்சனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகு. சில இடங்களில் பின்னணி இசையை கொடுக்காமல் பல இடங்களில் கொடுத்தும் படத்திற்கு உயிர் ஊட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர்.

படத்தின் திரைக்கதை மிக மெதுவாக நகர்வதால் படத்தொகுப்பாளர் மஜு பி வர்கீஸ் இயக்குநரின் படைப்பாக்கத்துக்கு ஏற்ப காட்சிகளையும் வரிசைப்படுத்தி தொகுத்து கொடுத்திருக்கிறார். எப்படி இருந்தாலும் படம் மிக மெதுவாக நகர்வதை தடுக்க முடியவில்லை.

இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவ், தமிழ் ஈழப் போரினால் அகதிகளாக உருவாக்கப்பட்ட அப்பாவி மக்களின் நிலையை சொல்வதற்காக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். தன்னிடம் இருக்கும் பொருளாதார வசதிக்கேற்ப இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்தப் படத்தை அவர் சொல்லியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

அப்பாவும், மகளும் தங்களுடைய அகதி வாழ்க்கையை ஒரு ரோட்டு ஓரத்தில் நடத்துகின்ற கொடுமையை பார்க்கின்றபோது இது நிச்சயம் உலகத்தில் எந்த ஒரு அகதிக்கும் நடந்துவிடக்கூடாது என்றுதான் நம் மனது சொல்கிறது. அப்படி ஒரு பரிதாப உணர்வை தன்னுடைய சிறப்பான இயக்கத்தினால் வரவழைத்துவிட்டார் இயக்குநர்.

வானில் இருக்கும் நட்சத்திரங்களை பார்த்து மகளுக்கு கதை சொல்லும் அப்பா அந்த நட்சத்திரங்கள் தெரிகின்ற வரையில் நிச்சயம் மழை வராது என்ற மகளுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார். தங்களுடைய வாழ்க்கையும் அந்த நட்சத்திரங்களை போல் எப்போதும் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் என்று மறைமுகமாக மகளுக்கு உணர்த்துகின்ற அந்த சில காட்சிகள் ரசனையானவை.

தமிழ் ஈழ படுகொலைகள் பற்றி இதுவரையிலும் பல திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இந்த படம் அதிலிருந்து மிகவும் வித்தியாசமாக விலகி அகதி மக்கள் கண்ணீர் கதையை சொல்கிறது.

இதில் ஈழம் மட்டுமல்ல உலகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் அகதி மக்களின் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது என்பதை இயக்குநர் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றது என்பது மிக மிக நியாயமானதுதான்.

ஆனாலும் படத்தில் நமக்கு தெரியும் ஒரு மிகப் பெரிய குறை. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிதான்!

அதில் “இனி உனக்கு படிப்புதான் முக்கியம். நன்கு படித்துவிட்டால் நல்ல வேலையில் அமரலாம். அதன் பின்பு உன் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்” என்று அப்பா சொல்வதுபோல சொல்லி… அதை மனதில் வைத்து மகள் பள்ளிக்கு செல்ல தயாராகிறாள் என்பதுபோல காட்சியமைத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அதற்கு முந்தின எந்தக் காட்சியிலும் படிப்பின் முக்கியத்துவம் பற்றி அழுத்தமாக வசனங்கள் இல்லாதது பெரும் குறை. பிள்ளை படிக்க வேண்டும் என்கிறாள் என்ற ஒரே ஒரு வசனத்தை மட்டுமே வைத்து அந்த கிளைமாக்ஸ் கட்சியை இயக்குநர் நகர்த்தியிருப்பது சற்றே குறைபாடாக நமக்கு தோன்றுகிறது.

எப்படி இருந்தாலும் தமிழ் ஈழத்து திரைப்படங்களில் இந்தப் படமும் ஒரு சிறப்பான இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது இந்த படக் குழுவினருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்!

தாய் நிலம் – வென்றது!

RATING : 3 / 5

Our Score