டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ இன் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நடிகர்கள் மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் முரளி பேசும்போது, “இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் முக்கியமான படம் இது. இதில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வரும் ஏழாம் தேதி திரையரங்குகளில் சென்று கண்டிப்பாக படம் பாருங்கள். தயாரிப்பாளர்கள், மேடி சார், இயக்குநர் கிருஷ்ணகுமார் என அனைவருக்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் ஜி.டி.ராஜ்குமார் பேசும்போது, “இது சினிமாவாக மாற விதை போட்டவர் அரவிந்த்துதான். அவர்தான் எனக்கு கிருஷ்ணாவை அறிமுகப்படுத்தினார். கதைய பாட்காஸ்ட்டாக கிருஷ்ணா கொண்டு வந்தார். ஏற்கனவே சிலர் கதை சொல்லியிருந்தாலும் கிருஷ்ணாவின் பாட் காஸ்ட் கதையில் நிறைய ஆராய்ச்சி செய்து மெனக்கெட்டிருந்தார்.
அதனால்தான் என் அம்மா, அப்பா இருவரும் இதை உடனேயே படமாக்க ஒத்துக் கொண்டார்கள். சில திருத்தங்களோடு படமாக்கியுள்ளோம். அடுத்த தலைமுறைக்கும் அவரின் பணிகள் சென்று சேர வேண்டும்.
இந்த சினிமாவில் அவரது வாழ்க்கை வரலாற்றில் எந்தளவுக்கு உண்மை என்று என்னை கேட்டால் 70% உண்மை என்பேன். இதை படமாக்க ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள், மாதவன் சாருக்கு நன்றி.
மாதவன் சார் நடிகர் மட்டுமல்ல, ஒவ்வொரு விஷயத்தையும் கடைசி ஆழம்வரை தேடித் தெரிந்து கொள்ளும் ஒருவர். சத்யராஜ் சாரும் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்றார்.
நடிகை அதிதி பாலன் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் கமிட் ஆக காரணமாக இருந்த தயாரிப்பாளர், இயக்குநர், மாதவன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திர பெயர் பத்மாவதி. இந்தக் கதாபாத்திரத்தின் வழியாகத்தான் ஜி.டி.நாயுடு பற்றிய கதை விரியும்.
இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவர் எப்படிப்பட்ட கண்டுபிடிப்பாளர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன். படத்தையும் தாண்டி அவரைப் பற்றி இன்னும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளுக்கு சென்று படம் பாருங்கள்” என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பேசும்போது, “நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே இது வேறுபட்ட கதாபாத்திரம். தயாரிப்பாளர்கள், இயக்குநர், மாதவன் சாருக்கு நன்றி. சத்யராஜ் சாருடன் அடுத்த படத்திலும்ம் சேர்ந்து நடிக்கிறேன். அதிதி பாலனுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. எல்லோரும் ஆகஸ்ட் 7 திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள்” என்றார்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் பேசும்போது, “நான் ஜி.டி.நாயுடுவின் மிகப் பெரிய ரசிகன். அவரது வாழ்க்கை வரலாற்று கதை ஆச்சரியமானது. அவரது கதையை படமாக ஒருவர் சொல்லும்போது நிச்சயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
இது பயோபிக் படம் என்பதையும் தாண்டி கமர்ஷியல் படம் என்று சொல்லும் அளவிற்கு சுவாரஸ்யமானது. கதையை கேட்டதும் இதில் நடிக்க பொருத்தமானவர் மாதவன் சார்தான் என்பதை முடிவு செய்தோம். திரைக்கதையை படமாக்கும்போது பல சவால்கள் இருந்தன. நிச்சயம் படத்தை திரையரங்குகளில் பாருங்கள்” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, “கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் இத்தனை நாட்களாக ஜி.டி. நாயுடு மியூசியத்தை சென்று பார்க்கவில்லையே என்ற குற்றவுணர்வு இந்தப் படத்தில் நடிக்கும்போது எழுந்தது.
ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும்போது இப்படி எல்லாம் நடந்திருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான விஷயங்களை விடவும் ஒருபடி அதிகமான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கிறது.
உலகம் முழுவதும் இந்தப் படம் நிச்சயம் சாதனை செய்யும். ஏனெனில், ஜி.டி. நாயுடுவை ஒரு தமிழராக, இந்தியராக சுருக்கிவிட முடியாது. இதை மாதவன் எடுத்து நடித்தவிதம் ஆச்சரியமானது. எனக்கு ராமய்யா பிள்ளை என்ற கதாபாத்திரம். இதுவரை வந்த பயோபிக்சர் படங்களிலேயே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு.
இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைய முக்கிய காரணம் ஜி.டி.நாயுடுவின் குடும்பம் தந்த ஒத்துழைப்புதான். ஜி.டி. நாயுடுவை போலவே இந்தப் படமும் பல புதுமையான விஷயங்களைக் கொண்டு வந்துள்ளது. மாதவனின் சினிமா பயணத்தில் இது முக்கியமான மைல் கல் திரைப்படம். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.
பாடகர், நடிகர் விஜய் யேசுதாஸ் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதலில் யோசனையாக இருந்தாலும் இந்தக் கதாபாத்திரத்தில் முக்கியத்துவத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டேன். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன் பேசும்போது,” நானும் மாதவனும் ‘ராக்கெட்டரி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த ‘ஜி.டி.என்’. படத்திலும் இணைந்திருக்கிறோம். அந்தப் படத்தை போலவே, இந்தப் படமும் நிச்சயம் பெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை” என்றார்.
தயாரிப்பாளர் விஜய் மூலன் பேசும்போது, “‘ராக்கெட்டரி’ படத்திற்கு பிறகு அடுத்து என்ன என்ற கேள்வி இருந்தபோது மாதவன் இந்த கதையுடன் வந்தார். நிச்சயம் சிறப்பான கதையுடன் இந்தப் படம் வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்” என்றார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் பேசும்போது, “மேதை ஜி.டி.நாயுடுவைப் பற்றிய புத்தகம் ஒன்றை படித்த பொழுது ஒவ்வொரு கதையும் நல்ல காட்சியாக இருந்தது. அவர் யார் என்று தெரியும். ஆனால், அவர் எவ்வளவு பெரிய நபர் என்று தெரிந்து கொள்ள ஒரு நேரம் எடுத்தது.
ஒரு இயக்குநராக இந்த கதையை நிச்சயம் படமாக்க வேண்டும் எனத் தோன்றியது. சமானிய மனிதனுக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான் அவருடைய கண்டுபிடிப்பின் தலையாய நோக்கமாக இருந்தது.
அப்படியான மகானை பற்றி படம் எடுக்க பெரும் பலமாக இருந்த எனது தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய நன்றி! நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது என்று மாதவன் சொன்னார்.
லைப்ரரிக்கு சென்று நிறைய விஷயங்கள் ஜி.டி. நாயுடு பற்றி தெரிந்து கொண்டார். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். மொத்தப் படத்தையும் அனைத்து கதாபாத்திரங்களையும் நியாபகம் வைத்துக் கொள்வார்.
சத்யராஜ் சார் திறமையான நடிகர். அவரை இந்தப் படத்தில் ரசித்து இயக்கினேன். காளிதாஸ் சார், துஷாரா விஜயன், அதிதி பாலன், விஜய் யேசுதாஸ் என அனைவருக்கும் நல்ல கதாபாத்திரங்கள். படக் குழுவினர் அனைவருமே ஒத்துழைப்பு கொடுத்து நடித்திருக்கின்றனர்” என்றார்.
நடிகர் மாதவன் பேசும்போது, “’குரு’, ‘ராக்கெட்டரி’ படங்களைத் தொடர்ந்து இந்த ‘ஜி.டி. நாயுடு’ படத்திற்கு முன்பேயே சில உண்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த ‘ஜி.டி.நாயுடு’ படத்தை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றி.
திரைப்படமாக உருவாக்குவதற்கு மட்டுமல்லாமல் ஜி.டி.நாயுடு என்ற கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் அவர்கள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதை சரியாக செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வும் மரியாதையும் எங்கள் எல்லோருக்கும் இருந்தது.
நான் இன்ஜினியரிங் படிக்கவில்லை. ஆனால் அதன் மீது மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வத்திற்கு துணை நின்றவர் அரவிந்த் சார். இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஜி.டி.நாயுடுவை பற்றி எனக்கு பெரிதாக தெரியாது. அதுவே மிகப் பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது.
அவரைப் பற்றி இன்றைய மாணவர்களுக்கு ஒரு சாப்டர் இருக்க வேண்டும் என்ற போராட்டம்தான் படத்தில் அதிதியின் கதாபாத்திரம். இவ்வளவு பெரிய மேதை பற்றி ஏன் நிறைய பேருக்கு தெரியவில்லை.
இன்றைக்கு நடக்கும் பல விஷயங்களை அன்றே அவர் செய்துவிட்டார். அவர் செய்த பல மாற்றங்கள் பற்றியும் பேசியிருக்கிறோம். இந்தப் படத்தின் மீதும், என் மீதும் எந்த அளவுக்கு எனக்கு நம்பிக்கை இருந்ததோ, அதைவிட அதிக அளவில் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நிச்சயம் படம் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி” என்றார்.









