GD Naidu Cast and Crew List
Cast
R. Madhavan
Priyamani
Jayaram
Dushara Vijayan
Sathyaraj
Vinay Rai
Aditi Balan
Karunakaran
Mohan Raman
Thambi Ramaiah
Tejeenthan Arunasalam
brigida saga
sheela rajkumar
Shilpa Sreekumar
Crew
Director: Krishnakumar Ramakumar
Writers: Krishnakumar Ramakumar, R. Madhavan
Producers: R. Madhavan, Sarita Madhavan, Varghese Moolan, Vijay Moolan
Music Composer: Govind Vasantha
Cinematography: Aravind Kamalanathan
Editors: Bijith Bala, K. Sasi Kumar
Production Designer: Cyril Kuruvilla
Costume Designer: Jishad Shamsudeen.
ஜி.டி.நாயுடு என்ற பெயரை தெரியாத, படிக்காதவர்களே தமிழ்நாட்டில் இருக்க முடியாது.
அந்த அளவுக்கு தமிழகத்தில் வெளியாகும் அனைத்து தமிழ்ப் பத்திரிகைகளிலும் ஏதோ ஒரு ரூபத்தில் வருடம் தோறும் இடம் பெற்று விடுவார் இந்த ஜிடி நாயுடு என்ற மேதை.
கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற பெயரின் சுருக்கமான ஜி.டி.நாயுடு கோவையில் ‘கலங்கல்’ என்ற கிராமத்தில் பிறந்தவர்.
மூன்றாம் வகுப்பு வரையிலும் படித்த இந்த மேதை 500-க்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளை இந்த உலகத்திற்கு கொடுத்துள்ளார்.
ஆனானப்பட்ட ஹிட்லரிடமே சிறந்த தொழில் முனைவோருக்கான விருதை பெற்றவர். ஜெர்மனி, அமெரிக்கா என்றில்லாமல் கார் கம்பெனிகள் இருந்த நாடுகளிலெல்லாம் ஜி.டி. நாயுடுவின் பெயர் உச்சரிக்கப்பட்டது. அந்த அளவுக்கு எந்திரவியலில் ஒரு தனி அறிவு படைத்த ஒரு மனிதராக திகழ்ந்தவர் இந்த ஜி.டி. நாயுடு.
அவருடைய வாழ்க்கை வரலாற்றில் இரண்டரை மணி நேரத்தில் எதைச் சொல்ல வேண்டுமோ அவற்றை மட்டும் சொல்லி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார்.
ஜி.டி.நாயுடுவின் 20 வயதிலிருந்து துவங்கும் இந்தப் படத்தின் கதை அவருடைய அந்திமக் காலம் வரையிலும் அவருடைய கண்டுபிடிப்புகளையும், அதற்காக அவர் பட்ட கஷ்டங்களையும்…
இப்படி ஒரு விஞ்ஞானியை பெற்றதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் என்று இந்த நாடு கொண்டாடி இருக்க வேண்டிய ஒரு மேதையை…
இந்தியாவின் அரசியலும், அதிகாரமும் சேர்ந்து எப்படியெல்லாம் அலைக்கழித்தன என்பதை இந்தப் படத்தில் தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
தன்னுடைய மனைவி ரங்கம்மாளுடன் ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் நாயுடுவுக்கு ஒரு பிரிட்டிஷ்காரர் ஓட்டும் மோட்டார் சைக்கிள் மீது பெரும் ஆசை.
மிகுந்த பிரயத்தனப்பட்டு 250 ரூபாய் கொடுத்து அந்த மோட்டார் சைக்கிளை வாங்குகிறார் நாயுடு.
அதை வாங்கி அவர் ஓட்டுவார் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை!
அந்த மோட்டார் சைக்கிளை அக்கு வேறு, ஆணிவேராக பிரித்து போட்டு… அது எப்படி இயங்குகிறது என்பதைப் படித்துத் தெரிந்து கொள்கிறார் நாயுடு.
பின்பு சுயமாக தானாகவே அந்த மோட்டார் சைக்கிளை மீண்டும் பொருத்தி ஓட்டுகின்ற அளவுக்கு அறிவைக் கற்றுக் கொள்கிறார்.
இதன் பின்பு படிப்படியாக ஒவ்வொரு கண்டு பிடிப்புகளையும் கண்டுபிடித்து அதை தன்னுடைய பேச்சுத் திறமையாலும் பழகும் தன்மை ஆளும் வியாபாரம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணக்காரர் ஆகிறார் நாயுடு.
எப்போதும் போல பிரபுக்கள் வீட்டிற்கு விருந்துக்கு சென்ற நேரத்தில் கோவை பகுதியின் வருமானவரித்துறை கமிஷனரிடம் பேசும்பொழுது ஒரு இந்தியனுக்கே உரித்தான ஒரு திமிரோடு பேசி விடுகிறார் நாயுடு.
இதைக் கேட்டு கோபமான அந்த கமிஷனர், நேர்மையின் சிகரமான நாயுடு பொய்யாக கணக்கு காட்டி இன்னமும் பல லட்சங்களை அரசிடம் இருந்து மறைத்து வரி கட்டாமல் இருக்கிறார் என்பதுபோல ஒரு ஆவணத்தை தயார் செய்து வைத்து விடுகிறார்.
இந்த ஆவணத்தை வைத்து நாயுடுவை மடக்குவதற்காக சேலத்தில் இருந்து நேர்மையின் சிகரம் என்று பிரிட்டிஷ்காரர்களால் சொல்லப்பட்ட அம்பலவாண கிருஷ்ணா என்ற ஜெயராம் கோவைக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்.
கோவை வரும் ஜெயராம் பைலில் இருக்கும் குற்றச்சாட்டுகள் உண்மை என்று நம்பி நாயுடுவுக்கு குடைச்சல் மேல் குடைச்சல் கொடுக்கிறார்.
நாயுடுவும் தன்னுடைய புத்திசாலித்தனமான செயல்களால் அப்போதைக்கு அப்போது ஜெயராமை ஜெயித்துக் கொண்டே வருகிறார்.
இடையில் ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரிடமிருந்து பரிசு பெறுகிறார். கார்களுக்கு தேவையான மோட்டாரை உருவாக்கி காட்டுகிறார். ஆண்கள் சேவ் செய்வதற்கு பயன்படுத்தும் புது வடிவிலான ரேசரை கண்டுபிடிக்கிறார்.
நாயுடு இந்திய திரும்புவதற்கு உள்ளாகவே அவருடைய சொத்துக்களை ஜப்தி செய்கிறார் ஜெயராம். நாயுடு இந்தியா திரும்பியவுடன் அவருக்கும் ஜெயராமுக்கும் இடையே பெரும் சட்ட மோதல்கள் ஏற்படுகிறது.
இதையெல்லாம் கடந்து தான் நேர்மையானவன் என்பதை எப்படி நாயுடு நிரூபிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.
‘ராக்கெட்டரி’ என்ற படத்தில் ‘நம்பி நாராயணன்’ என்ற இந்திய விஞ்ஞானி ஒருவர், போலியான ஒரு வழக்கினால் எப்படி பாதிக்கப்பட்டு சிறைக்குச் சென்று இன்றைக்கு வாழ்க்கையை இழந்து அமர்ந்திருக்கிறார் என்கின்ற உண்மையை மாதவன் தன்னுடைய உயிர்ப்பான நடிப்பினால் வெளிகாட்டியிருந்தார்.
அதில் எள்ளளவும் குறைவில்லாமல் இந்தப் படத்திலும் ஜி.டி.நாயுடு என்கின்ற அந்தப் பெயரைக் கேட்டவுடன்… ஒரு கம்பீரத்தையும், பெருமையையும் தன்னுடைய நடிப்பின் மூலமாக பெற்றுத் தந்திருக்கிறார் நடிகர் மாதவன்.
ஒரு காலத்தில் ‘சாக்லேட் பாய்’ என்று அழைக்கப்பட்ட இந்த ‘மேடி’ என்ற மாதவன் இப்பொழுதெல்லாம் ஒரு பொறுப்பான நடிகனாக, தன்னுடைய நடிப்பு திறமையை வைத்து காலத்திற்கும் அழியாத படங்களை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் தொடர்ந்து நடித்து வருகின்ற கதாபாத்திரங்கள் மிகச் சிறப்பானவை.
ஒருவேளை ஜி.டிநாயுடு இப்படித்தான் இருந்திருப்பாரோ என்று வருங்கால இளைய சமூகம் நினைக்கின்ற அளவுக்கு தன்னுடைய நடிப்பை இந்தப் படத்தில் கொட்டி இருக்கிறார் மாதவன்
தன்னை அவமானப்படுத்தும் கமிஷனரிடம், “நீங்க எந்த ஊர்ல வந்து யாருகிட்ட என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா?” என்று திருப்பி அடிக்கும் அந்தக் காட்சியின்போது மாதவனை அவ்வளவு அழகாக நமக்குப் பிடிக்கிறது. மனிதர் அவ்வளவு அழகாகவும் ஸ்கிரீனில் தெரிகிறார்.
அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கெட்டப்பும், மேக்கப்பும் மாறி வயதான தோற்றம் வரும் வரையிலும் நாயுடுவின் ஒவ்வொரு காலகட்ட நடிப்பிலும் தன்னுடைய மிகச் சிறப்பான ஒரு நடிப்பை காண்பித்து படத்திலிருந்து ஒரு நிமிடம்கூட கண்ணை எடுக்க விடாமல் செய்திருக்கிறார் மாதவன்.
இவருடைய முதல் மனைவி ரங்கம்மாளாக நடித்திருக்கும் பிரியாமணி அழகு தேவதையாக சில காட்சிகளில் வந்து சென்று இருக்கிறார். இளம் வயது ரங்கம்மாளாக நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமாரும் சில காட்சிகளே ஆனாலும் நடிப்பில் நம் கவனத்தை ஈர்க்கிறார்
இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன்தான் படத்தின் பிற்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மாதவனுக்கு மிகப் பெரிய துணையாக இருந்திருக்கிறார்.
மும்பை பருத்தி சந்தையில் மொத்த பணத்தையும் இழந்துவிட்டு மாளிகை வீட்டை விற்றுவிட்டு குடிசை வீட்டில் வாழ்கின்ற நிலையில் தன் மனைவியின் வருத்தத்தை போக்கி மாதவனும், துஷாராவும் பேசுகின்ற அந்தப் பேச்சில் ஒரு அன்னியோன்யம் தெரிகிறது.
ஒவ்வொரு முறையும் மாதவன் அகலக் கால் வைக்கிறாரோ என்ற எண்ணி எச்சரிக்கை கொடுக்கும் விதமாகவே பேசும் துஷாரா என்ற சந்திரா நிச்சயம் ஜி.டி.நாயுடு என்ற அந்த மேதையின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
நாயுடுவின் நண்பராக நடித்திருக்கும் சத்யராஜ் கொங்கு தமிழில் பேசியும் நாயுடுவுக்கு பில்டப் ஏற்றும் விதமாகவும் பேசி பல இடங்களில் காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.
படம் முழுவதும் வில்லனாகவே நமக்கு காண்பிக்கப்பட்டு இறுதி நேரத்தில் நேர்மையான அதிகாரியாக வசனத்தின் மூலமாக சொல்லப்படும் ஜெயராமின் நடிப்பும் இந்த படத்திற்கு ஒரு மிகப் பெரிய பலம்.
நீயா, நானா பார்த்து விடுவோம் என்று போட்டி போட்டுக் கொண்டு நாயுடுவும் ஜெயராமும் மோதி இருக்கிறார்கள். ஜெயராமின் சின்ன சின்ன நடவடிக்கைகளும் அதை எதிர்த்து மாதவன் செய்யும் சின்ன சின்ன ட்ரிக்கிகளும் ரசிக்க வைத்திருக்கின்றன.
மற்றும் படத்தில் நடித்திருக்கும் மற்ற அனைவருமே சிறப்பான இயக்கத்தினால் ஒரு சிறப்பான நடிப்பை காட்டி இருக்கிறார்கள்.
அரவிந்தின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு மிகப் பெரிய ஒரு பலத்தை கொடுத்திருக்கிறது. கோவை எப்போதும் ஏசி போட்ட மூடிய நிலையிலேயே இருக்கும் என்பார்கள்.
அந்த காலத்திலேயே அப்படித்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. அதுபோலவே இந்தப் படம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலையோ… கொளுத்துகின்ற சூரியனையோ பார்க்க விடாமல் எப்போதும் முகமூடி போட்ட ஒரு மேகக் கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் கோவையே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
தன்னுடைய கேமராவில் நடிகர், நடிகைகள் அத்தனை பேரையுமே அழகுற பதிவு செய்திருக்கிறார். புளூமேட் சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும் அது சினிமா தெரியாதவர்களுக்கு தெரியாத வண்ணம் செய்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தின் கலை இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பீரியட் திரைப்படம் என்பதால் அதற்கேற்றவாறு எந்த ஒரு நாகரீக பூச்சும் திரையில் பட்டுவிடாமல் கவனமாக தன்னுடைய பணியை செய்திருக்கிறார் கலை இயக்குநர்.
அந்த பேருந்துகளை எல்லாம் எப்படி ஒன்று திரட்டி கொண்டு வந்து நிறுத்தினார்கள் என்று தெரியவில்லை! பஸ்ஸ்டாண்டு போன்ற அன்றைய தோற்றமும் அந்த காலத்திலேய வீடுகளும் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
கோவிந்த் வசந்தாவின் இசையை விடவும் பின்னணி இசை அழகு. எந்த இடத்திலும் ஒரு உறுத்தல் இல்லாமல் புதிய வகை இசையையும் கொடுக்காமல் கடைசிவரையிலும் படம் பார்க்க இசை மூலமாக நம்மை டிஸ்டர்ப் செய்யாமல் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்.
காஸ்ட்யூம் டிசைனரையும் பாராட்டித்தான் ஆக வேண்டும். அந்தக் காலத்தை ஆண்களும், பெண்களும் எப்படி உடை அணிந்து இருப்பார்கள் என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அந்த வகையில் அவருடைய உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு மாபெரும் மேதையின் வாழ்க்கை வரலாறு நமக்கு நிச்சயமாக தெரிய வேண்டும். நமக்கு மட்டுமல்ல: நமக்கு அடுத்து வரக் கூடிய சந்ததிகள் அனைவருக்கும் அது தெரியப்படுத்தப்பட வேண்டும். அது நமது கடமை.
அந்த கடமையைத்தான் இந்த இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் தன்னுடைய வலிமையான இயக்கத்தின் மூலமாக இந்தப் படத்தில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.
ஒரு அரசு செய்ய வேண்டிய வேலையை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் தோளில் சுமந்து செய்திருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள். நன்றிகள்
இந்த படத்தில் நமக்கு தோன்றிய சில கருத்துக்கள் என்னவெனில்…,
ஜி.டி. நாயுடு தமிழகத்தின் அத்தனை அரசியல் புள்ளிகளிடமும் மிக நெருங்கிய பழக்கம் வைத்திருந்திருக்கிறார்.
தந்தை பெரியார் எப்போது கோவை வந்தாலும் நாயுடுவின் பங்களாவில்தான் தங்குவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
சமீபத்தில்கூட தந்தை பெரியாரும், மணியம்மையாரும் இருவரும் இணைந்து நிற்கும் ஒரு வீடியோ நாயுடு பங்களாவில் எடுக்கப்பட்டதாக வெளியாகி பெரும் பரபரப்பை எட்டியது.
அதே நேரம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் நாயுடு அப்பொழுது மிகப் பெரிய கண்டுபிடிப்பாளராக, விஞ்ஞானியாக அறியப்பட்டிருக்கிறார்.
அவருடைய தொழிற்சாலைக்கு அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் வந்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதிகள் வி.வி.கிரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இருவரும் வந்திருக்கிறார்கள். இந்திரா காந்தி அம்மையார் வந்திருக்கிறார். வாஜ்பாய் வந்திருக்கிறார். அப்போதைய நிதியமைச்சர்களும் வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சி.சுப்பிரமணியம், ஆர்வெங்கட்ராமன்ஃ காமராஜர் போன்றவர்களும் வந்திருக்கிறார்கள்.
இத்தனை பேரிடமும் நெருங்கிய பழக்கம் வைத்திருந்தும் அந்த வருமான வரி பிரச்சனையை நாயுடுவால் ஏன் தீர்க்க முடியவில்லை என்பது நமக்கு புரியாத புதிராக இருக்கிறது.
பிரதமரிடம் சொல்லி இருந்தால் இந்தப் பிரச்சனை ஒரே நாளில் முடிந்திருக்கும். அந்த துறை அமைச்சரிடம் சொல்லி இருந்தாலும் பிரச்சனை முடிந்திருக்கும். இதை பாராளுமன்றத்தில் ஒரு கேள்வியாக எழுப்பும்படி தமிழகத்தின் எம்பிகளிடம் சொல்லி இருந்தால்கூட இந்த பிரச்சனை ஒரு வார காலத்திற்குள் முடித்திருக்கும் ஆனால் ஜிடி நாயுடு ஏன் அதை செய்யவில்லை என்பது நமக்கு இன்று வரையிலும் புரியவில்லை.
அதே நேரம் கிருஷ்ணா என்ற ஜெயராம் நல்லவரா கெட்டவரா என்பதை அடிக்கடி சொல்லிக் காட்டும்விதமாக திரும்பத் திரும்ப ஒரு வசனம் வந்து கொண்டே இருப்பதும் நெருடலாக இருக்கிறது.
நாயுடுவின் பைலில் ஒரு பேப்பர் பொய்யான தகவலுடன் வைக்கப்பட்டு இருக்கிறது என்ற உண்மையை யாராவது ஒருவர் மூலமாக ஜெயராமிடம் சொல்வது போல காட்சிகள் வைத்திருக்கலாம். அல்லது ஜெயராமே இதை கண்டுபிடித்தது போல செய்திருக்கலாம். இப்படி இருந்திருந்தால் இந்தக் கதை இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
இதுகூட இல்லாவிடினும் இறுதியில் ஜெயராமும், மாதவனும் பேசும்போது தான் இதற்குப் பின்பு அதைப் பார்த்து ரொம்பவும் வருத்தப்பட்டதாக ஜெயராம் சொல்லி இருந்தால்கூட நிச்சயமாக இந்தப் படம் ஒரு முழுமையை எட்டியிருக்கும் என்று நாம் கருதுகிறோம்.
ஒரு மேதை தன்னுடைய கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தீயில் போட்டு எரிக்கிறான். தன்னுடைய கண்டுபிடிப்பில் அதனையெல்லாம் அழிக்கிறான் என்பதெல்லாம் ஒரு நாட்டுக்கு நல்லதல்ல.
ஆனால் இதை ஜி.டி.நாயுடு செய்திருக்கிறார் என்பதை கேள்விப்படும்பொழுதே மனம் வேதனைப்படுகிறது. அந்த மனிதர் எவ்வளவு பெரிய வேதனைகள் அதை செய்திருப்பார்?!
அது என்னவென்றுகூட கேட்காத அந்தக்கால அரசியல் வியாதிகளை நினைத்தால் இப்போது கோபம் கோபமாக வருகிறது.
இவர்கள் எல்லாம் அரசியல் என்ன செய்து சாதித்தார்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் வருகிறது.
எப்போதும் இந்திய அரசியல்வாதிகள் நல்லதோ கெட்டதோ தான் நினைத்தால் மட்டுமே அதை கொண்டு வர முடியும்… மக்களிடம் சொல்ல முடியும்… என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
ஏனெனில் அவர்களுக்கு தேவை அதன் மூலமாக கிடைக்கின்ற பெயர், புகழ், பணம். அதைத்தான் இந்த இந்திய மேதை ஜிடி நாயுடு விஷயத்திலும் நடந்திருக்கும் என்று நாம் நடக்கிறோம்.
அந்த வகையில் ஒரு கேடுகெட்ட அரசியலின் விளைவாக நாம் போற்றிக் கொண்டாடப்பட வேண்டிய விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் பெயர் நம்மிடம் இருந்து ரொம்ப தூரம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.
இப்போது வந்திருக்கும் இந்த திரைப்படத்தை நாம் இப்போது நம்முடைய இளைய தலைமுறையினர் அனைவரின் மத்தியிலும் கொண்டுபோய் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை.
அதேபோல் தமிழக அரசும் இந்தப் படத்தை அனைத்து பள்ளி மாணவர்களுக்காகவும் போட்டுக் காட்ட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
அல்லது
இந்தப் படத்திற்கான வரி விலக்கை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
RATING – 4 / 5









